கஜா பாதித்த பகுதியில் சமையல் கூடம் கட்டித்தந்த நண்பர்கள் குழு! | This social service team built a kitchen for Gaja cyclone affected areas

வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (06/03/2019)

கடைசி தொடர்பு:19:08 (06/03/2019)

கஜா பாதித்த பகுதியில் சமையல் கூடம் கட்டித்தந்த நண்பர்கள் குழு!

கஜா பாதித்த பகுதியில் சமையல் கூடம் கட்டித்தந்த நண்பர்கள் குழு!

2018-ம் ஆண்டில் மிகப் பெரிய பேரழிவைத் தந்தது கஜா புயல். வேதாரண்யம் தொடங்கி, காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல்லாயிரக்கணக்கான மரங்கள், கட்டடங்கள், குடிசை வீடுகள் என கஜாவின் தாக்குதல் கடுமையாக இருந்தது. அதில் பள்ளிக்கூடங்களும் தப்பவில்லை. அரசுப் பள்ளிகளின் கட்டடங்கள் பலவும் வீழ்ந்தன. மரங்கள் விழுந்து கட்டடங்களில் பாதிப்பு ஏற்பட்டன. கஜா பகுதி ஆசிரியர்கள் பலரும் மீட்புப் பணிகளில் தீவிரமாகக் களத்தில் செயலாற்றினார்கள். கஜா பாதிப்பால், பள்ளிகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக, பாடங்கள் நடத்தப்படவே இல்லை. தற்போதுகூட முழுவதுமாக இயல்பு நிலைக்கு வந்துவிட்டன என்று சொல்லிவிட முடியாது. 

பள்ளி  மணிமாறன் அரசுப் பள்ளிகளின் கட்டடங்களைச் சீர் செய்துகொடுக்க அரசு ஒரு பக்கம் பணியாற்றிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், ஆசிரியர்கள் தங்களின் நண்பர்களிடம் உதவிகள் பெற்று பள்ளியைச் சீரமைத்து வருகிறார்கள். அவர்களில் திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மணிமாறன் குறிப்பிடத் தகுந்தவர். ஆசிரிய நண்பர்கள் பாலாஜி, வினோத் ஆகியோருடன் இணைந்து பல பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டிருக்கிறார். மாணவர்களுக்குத் தேவையான நோட்டுப் புத்தகங்களை ஆயிரக்கணக்கில் அளித்துவந்தனர். தற்போது மிகச் சிறப்பான ஒரு பணியைச் செய்திருக்கின்றனர். அது பற்றி அவரிடம் விளக்கமாகக் கேட்டேன். 

"கஜாவால் காவிரி டெல்டா மாவட்டங்களிலுள்ள பள்ளிக் கட்டடங்கள் பாதிக்கப்பட்டதோடு, படிக்கும் மாணவர்களும் உளவியலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு எங்களால் முடிந்த மாற்றுச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறோம். மாணவர்களை உளவியலாகத் தயார்படுத்த கதை சொல்லிகளையும் நாடகக் குழுக்களையும் அழைத்து வந்து பயிற்சி அளித்தோம். மாணவர்கள் பொதுத்தேர்வுக்குத் தயாராக அது மிகப் பெரிய அளவில் உதவியதை நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம். அதேபோல, நோட்டுப் புத்தகங்களை வழங்குவதையும் முக்கியப் பணியாகச் செய்தோம்.

பள்ளி  

இந்தப் பணிகளை நாங்கள் ஒருங்கிணைப்பது மட்டுமே செய்தோம். உதவிகளை எங்களின் நேரடி நண்பர்களும் சமூக ஊடகம் வழியே அறிமுகமான நண்பர்களும்தான் செய்தனர். மேலும், எங்களின் செயற்பாடுகளை முகநூல் வழியாகத் தெரிந்துகொண்டு, தொடர்புகொண்டவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களால் முடிந்த உதவிகளை அளித்துவருகின்றனர். வாழை அமைப்பு போன்று குழுவாகச் செயல்படுபவர்களும் தொடர்புகொள்கின்றனர். `ஆரோக்கியம் நல வாழ்வு' எனும் பேலியோ குழுவைச் சேர்ந்த த சங்கர்ஜி, ஓசூர் கண்ணன், பக்தவச்சலம் உள்ளிட்டோர் தொடர்புகொண்டார். இந்தப் பகுதியில் உடனடித் தேவை என்னென்ன என்று கேட்டார். அதன்படி ஏழாயிரம் நோட்டுப் புத்தகங்களை அனுப்பி வைத்து உதவினார். இதனையடுத்து, நாகை மாவட்டம், வாய்மேடு அருகிலுள்ள அண்ணாப் பேட்டை, வ.உ.சி உதவிபெறும் தொடக்கப்பள்ளியின் சமையற்கூடம் கஜா புயலால் தரைமட்டாகி விட்டது.

கஜா புயல் - பள்ளி

புதிய சமையற்கூடம் கட்ட வேண்டிய தேவை இருப்பதை இந்தக் குழுவிடம் சொன்னேன். அவர்கள், சமையற்கூடம் கட்டும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்கள். ஆரோக்கியம் நலவாழ்வுக் குழுவின் நண்பர்கள் ரூபாய் 3,50,000 மதிப்பில் மிக உறுதியான கட்டடத்தை அண்ணாப்பேட்டைப் பள்ளிச் சமையல் கூடமாகக் கட்டித் தந்துள்ளனர். பொறியாளர் வி.சி.வில்வம் மிகுந்த ஈடுபாட்டுடன் இதைக் கட்டிக்கொடுத்துள்ளார். சமீபத்தில், அந்தக் கட்டடத்தை, பள்ளியின் பயன்பாட்டுக்கு வரும்படியாக, திறப்பு விழா நிகழ்ச்சியை நடத்தினோம். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருண் மகிழ்ச்சியோடு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இதன்மூலம் அப்பள்ளிக்கு பழையபடியே நல்ல சுகாதாரத்துடன் சமைத்து, சத்துணவு வழங்க நல்ல உணவுக்கூடம் கிடைத்துவிட்டது. அன்றைய தினம் மாணவர்கள், கிராம மக்களுக்கு என 400 பேருக்கு மதிய உணவு அளித்தும் மகிழ்வித்தனர். 

கஜாவின் பாதிப்புப் பணிகள் இன்னும் ஏராளமானவை காத்துக்கிடக்கின்றன. அவற்றை இவர்களைப் போன்ற நண்பர்களின் மூலமாகவே செய்துமுடிக்க முடியும்." என்கிறார் மணிமாறன். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close