Published:Updated:

`மேரியம்மாளைப் பார்த்ததும் என்னையறியாமல் காலில் விழுந்தேன்!’ - மேடையில் பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி

`மேரியம்மாளைப் பார்த்ததும் என்னையறியாமல் காலில் விழுந்தேன்!’ - மேடையில் பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி
`மேரியம்மாளைப் பார்த்ததும் என்னையறியாமல் காலில் விழுந்தேன்!’ - மேடையில் பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி

ஏழைக் குழந்தைகளுக்கு தான் நடத்திவரும் சிறு இட்லிக் கடையில் இலவசமாக இட்லி வழங்கிவரும் 75 வயது மூதாட்டியின் காலில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா விழுந்து ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 

கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டுவிழா, திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுவாக, பள்ளி ஆண்டுவிழா என்றால், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, அவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குவதுதான் இயல்பு. அதோடு, இந்த ஆண்டில் பல்வேறு சாதனைகளைப் புரிந்த மாணவ, மாணவிகளுக்கு மேடையில் பரிசு வழங்குவது வழக்கம். ஆனால், கரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் பெண்களைக் கௌரவப்படுத்தும் நோக்கில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம், கல்வி, அரசியல், ஆன்மிகம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்த 52 பெண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் குறிப்பாக, கரூர் காந்திகிராமத்தில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மேரியம்மாளுக்கு விருது வழங்கியதுதான் அனைவரையும் மெச்ச வைத்தது. மேரியம்மாள் காந்திகிராமம் பகுதியில் சிறிய அளவிலான இட்லிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தனது வாழ்வாதாரத்துக்காக இத்தொழிலை அவர் மேற்கொண்டு வந்தாலும், அப்பகுதியில் இவர் இட்லிக் கடையில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக உணவு அளித்து வருவதைப் பாராட்டி, அவருக்கு மகளிர் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் வழங்கினார். அப்போது எம்.எல்.ஏ கீதா அந்த மூதாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்று அவருக்கு விருது வழங்கினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் கவர்ந்தது.

தொடர்ந்து விழாவில் பேசிய கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன், ``இங்கு வந்த பிறகுதான், பள்ளி ஆண்டுவிழாவில் மகளிருக்கு விருது வழங்க உள்ளார்கள் என்பது தெரிந்தது. அதில் சட்டமன்ற உறுப்பினராகச் சேர்ந்து பணியாற்றி வரும் பெண் சாதனையாளர் விருது எனக்கு வழங்கப்பட்டது மேடையில் அறிவிக்கப்பட்டபோதுதான் எனக்குத் தெரியும். நானும் ஒரு பள்ளி ஆசிரியராகத்தான் என்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினேன். பின்னர், அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டு தற்போது மக்கள் பணியாற்றி வருகிறேன். கல்விப் பணி என்பது மகத்தான பணி. அப்பணியில் பணியாற்றும் பெண்களைப் பாராட்டி இதுபோல விருது வழங்குவது இப்பள்ளியில்தான். எனவே, பள்ளியை நான் மனதாரப் பாராட்டுகிறேன். அதைவிட, சிறிய கடை வைத்து, ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக இட்லி வழங்கி வரும் மேரியம்மாளுக்கு விருது வழங்கியது என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. அவரைப் பார்த்ததும், என்னையறியாமல் அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினேன். மேரியம்மாள் போன்றவர்கள் மூலமாக அன்னை தெரசா இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அந்தத் தாயை மானசிகமாக நினைத்துக்கொண்டு ஏழை மக்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகளை கட்டாயம் செய்வேன்’’ என்றார் உணர்ச்சி மேலிட!