Published:Updated:

தன்னுடைய பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவி செய்த தலைமைக் காவலர்...!

"இப்பவும் நாங்க எளிமையான குடும்பந்தான். ஆனா, எங்கிட்ட கொஞ்சம் காசு இருந்தாலும் நான் பட்ட கஷ்டத்த யாரும் படாம பாத்துக்கணும்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கும்."

தன்னுடைய பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவி செய்த தலைமைக் காவலர்...!
தன்னுடைய பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவி செய்த தலைமைக் காவலர்...!

போலீஸ்காரர்கள் என்றாலே பொதுமக்களாகிய நமக்கு அவர்கள் மீது ஒருவித அச்சமும் கோபமும்தான் ஏற்படுவது வாடிக்கை. வாகன ஓட்டிகள் உட்பட அனைவரிடமும் லஞ்சம் வாங்குவார்கள்; சாலையோர சில்லறை வியாபாரிகளைத் தொந்தரவு செய்து அவர்களிடம் மாமூல் பெறுவார்கள்; எளிய மனிதர்களை அவமரியாதையாக நடத்துவார்கள் என்பதால் போலீஸ்காரர்கள் என்றாலே மரியாதை ஏற்படுவதில்லை. இன்னொருபுறம் போலீஸ் உயர் அதிகாரிகள் என்றால் கட்டப்பஞ்சாயத்து செய்வது, அமைச்சர்களும் அதிகார வர்க்கமும் செய்கிற ஊழலுக்குத் துணைபோவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்பது அவர்களைப் பற்றிய பொதுவான பார்வையாக உள்ளது. அவை எந்தளவுக்கு உண்மை என்பது விசாரணைக்கு உட்பட்டது, என்றாலும் போலீஸாரைப் பற்றிய பொதுவான அபிப்ராயங்கள் அவை. ஆனால், போலீஸ்காரர்களில் ஏராளமான நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறார் வெங்கடேஷ்வரா என்ற தலைமைக் காவலர். சென்னை கோட்டூர் காவல்நிலையத்தில் ஹெட் கான்ஸ்டபிளாக இருக்கிறார்.

படித்து முடித்து காவல்துறையில் வேலையில் சேர்ந்தது முதல் கடந்த 10 ஆண்டுகளாக, தான் வாங்கும் சம்பளத்திலிருந்து  ஆதரவற்றவர்களுக்கு உதவி வருகிறார் வெங்கடேஷ்வரா. அது மட்டுமன்றி தான் படித்த சென்னை அயப்பாக்கம் அரசுப் பள்ளிக்குச் சென்று, அங்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்குப் புத்தகப்பை, சீருடை வழங்குவதுடன், அந்தப் பள்ளியில் உடைந்துபோன நிலையில் இருந்த மேசை, நாற்காலிகள், மாணவர்கள் அமரும் இருக்கைகளைத் தன்னுடைய சொந்தப் பணத்தில் மாற்றிக்கொடுத்திருக்கிறார். படித்த பள்ளிக்குத் தற்செயலாகச் சென்றபோது, அந்தப் பள்ளியில் தற்போதைய நிலையையும் அங்கு படிக்கும் மாணவர்களின் நிலைமையையும் நேரில் அறிந்த அவர், வீடு திரும்பியதும் தான் சேமித்து வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணத்தில் மேற்கண்ட உதவிகளைச் செய்து கொடுத்துள்ளார்.

``அயப்பாக்கம் பள்ளிக்கூடம் இல்லன்னா, இன்னைக்கு நான் இல்ல. கொஞ்ச நாளுக்கு முன்னாடி எங்க ஸ்கூலுக்குப் போனபோது, நான் படிச்ச பள்ளி இருந்த நிலைமை என்னை ரொம்பவே வருத்தப்பட வச்சுது. அதனால, என்னால முடிஞ்ச உதவிய செஞ்சேன்’’ என்று சொல்லும் வெங்கடேஷ்வராவின் அப்பா ஒரு வெல்டர். பிழைப்புக்காக ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த எளிமையான குடும்பம். 

``இப்பவும் நாங்க எளிமையான குடும்பம்தான். ஆனா, எங்கிட்ட கொஞ்சம் காசு இருந்தாலும் நான் பட்ட கஷ்டத்த யாரும் படாம பாத்துக்கணும்னு என் மனசு சொல்லிகிட்டே இருக்கும்’’ என்கிறார்.

சிறுவயதில் கால்பந்தாட்ட வீரராக இருந்திருக்கிறார் வெங்கடேஷ்வரா. வாலிப வயதிலும் கால்பந்து போட்டிகளில் சிறப்புடன் விளையாடியதால், அவருக்கு ரயில்வே துறையில் வேலை செய்வதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால், வேலையை உறுதி செய்ய வேண்டுமென்றால் 70,000 ரூபாய் கேட்டிருக்கிறார்கள். வெங்கடேஷ்வராவின் அப்பாவால் அந்தப் பெரிய தொகையைத் திரட்ட முடியாமல் போகவே, அவருக்கு ரயில்வே வேலை கிடைக்காமல் போனது.

``நான் கால்பந்து விளையாடும்போது, போடுறதுக்கு ஒரு நல்ல ஷுகூட இருக்காது. வெறித்தனமா ஆடினேன். ஆனாலும் எனக்கு வேலை கிடைக்கல. திறமை இரண்டாவதுதான் பணம்தான் முதல்ல என்பது புரிஞ்சது. அப்படியிருந்தும் நான் என்னோட திறமையை நம்பியதால், எனக்கு போலீஸ் வேலை கிடைத்தது. இந்த வேலைக்காக கடுமையா பயிற்சி எடுத்தேன். இப்போ ஹெட் கான்ஸ்டபிளா இருக்கேன். சொல்லிக்கிற மாதிரி சம்பளம் இல்லை என்ற போதிலும், ஏதோ என்னால முடிஞ்சத சேர்த்து வைக்கிறேன். நான் படிக்கும்போது எனக்கு இருந்த கஷ்டத்தை மத்தவங்க அனுவிக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அதனால் என்னால முடிஞ்ச உதவிய செஞ்சேன்’’ என்றார்.

சாலையோரம் போர்வையின்றி படுத்திருக்கும் ஆதவரற்றவர்களுக்கு போர்வை வாங்கிக் கொடுப்பது, பண வசதி இல்லாத மாணவர்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்டுவது, கால்பந்தில் ஆர்வமுள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற சேவைகளை தன் காவலர் பணிக்கு இடையேயும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார் வெங்கடேஷ்வரா.

``நான் செய்யும் உதவிகளை இதுவரை யாருக்கும் சொல்லிக்கிட்டது இல்லைங்க. சமீபமா எங்க ஸ்கூலுக்கு நிதியுதவி பண்ணப் போயி, அது எப்படியோ மீடியாவுக்குத் தெரிஞ்சு போச்சு. அதிலிருந்துதான் நான் செய்ற உதவி எல்லாம் மற்றவங்களுக்கும் தெரியவந்தது. என்னை மாதிரி எத்தனையோ பேர் யாருக்கும் தெரியாம நிறைய உதவிகள் செய்திட்டு வர்றாங்க. எனக்குக் கிடைக்கிற இந்த அங்கீகாரத்தை அவங்களுக்கு காணிக்கையாக்குறேன்’’ எனப் புன்னகைக்கிறார் அவர்.