
அரக்கோணம்: திருவாலங்காடு ரயில் நிலையத்தில், சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்ற அரக்கோணம் மின்சார ரயில் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று பகல் அரக்கோணம் சென்ற மின்சார ரயில், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நின்றது. அப்போது அதில் இருந்த பயணிகள் இறங்கினர்.
அந்த சமயத்தில் அங்கு சிவப்பு சிக்னல் இருந்துள்ளது. ஆனால் இதனை கவனிக்காத ஓட்டுனர், பயணிகள் இறங்கியதும் வழக்கம்போல் ரயிலை இயக்கி கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து பதறிப்போன அந்த ரயில் நிலைய கார்ட் தகவல் அளித்ததும், ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பாதையில் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
##~~## |
கடந்த ஆண்டு அரக்கோணம் அருகே உள்ள சித்தேரி ரயில் நிலையம் அருகே நடந்த ரயில் விபத்திற்கான விசாரணை அறிக்கை நேற்றுதான் வெளியிடப்பட்டிருந்தது. அதில் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறுதான் விபத்திற்கு காரணம் என கூறப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.