"திருநங்கைகளைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கணுங்குறதுதான் என் ஆசை!" - திருநங்கை ஜீவா | Transgender Jeeva talks about her personal struggles and success story

வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (07/03/2019)

கடைசி தொடர்பு:17:49 (07/03/2019)

"திருநங்கைகளைத் தொழில் முனைவோர்களாக உருவாக்கணுங்குறதுதான் என் ஆசை!" - திருநங்கை ஜீவா

``கை, கால் நல்லா இருக்கும்போது நாம ஏன் பிச்சை எடுக்கணுங்குற எண்ணம் வந்ததுக்கு அப்புறம் நான் பிச்சை எடுக்கிறதை விட்டுட்டு சுயமா உழைக்க ஆரம்பிச்சேன். இன்னைக்கு 350 திருநங்கைகள் வாழ்வாதாரத்திற்கு என்னால் முடிஞ்ச உதவிகளைச் செய்றேன்...!" எனத் தன்னம்பிக்கை ததும்பப் பேசுகிறார், திருநங்கை ஜீவா. இவர் `transgender rights association' என்கிற அமைப்பின் இயக்குநராக இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

திருநங்கை ஜீவா

நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னை. எங்க வீட்டுல என்னையும் சேர்த்து ரெண்டு பசங்க. 6-ம் வகுப்பு படிக்கும்போது என் உடம்புல ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்தேன். அது திருநங்கைகள் பற்றிய தெளிவு இல்லாத காலகட்டம். என்னன்னு கூட கேட்காம என்னை ஒதுக்குனாங்க. 7-ம் வகுப்பு வரை படிச்சேன். அப்புறம் குடும்பத்துல உள்ளவங்களுடைய ஆதரவும் இல்லைங்குறதுனால வீட்டை விட்டு வெளியேறிட்டேன். என்னை மாதிரி இருக்கிறவங்க கூட சேர்ந்து மும்பைக்குப் போயிட்டேன். 

மும்பையில் பொதுவாக திருநங்கைகள் பாலியல் தொழிலும், பிச்சை எடுக்கிற தொழிலும்தான் செய்வாங்க. நான் அங்கே போயிருந்த சமயம் என் கூட இருக்கிறவங்களைப் பார்த்து பாலியல் தொழிலில் ஈடுபடக்கூடாதுங்குறதுல உறுதியா இருந்தேன். வேற வழியில்லாமல் பிச்சை எடுத்தேன். ஆரம்பத்துல ஒண்ணும் தெரியலை. போகப்போக, எனக்கு கை, கால்களெல்லாம் நல்லாதானே இருக்கு. உழைச்சு சாப்பிடாம நான் ஏன் பிச்சை எடுத்துப் பொழைக்கணுங்குற எண்ணம் மனசை உறுத்திட்டே கிடந்துச்சு. ஒன்றரை வருஷம் மும்பையில் இருந்தேன். அப்புறம் சென்னை வந்துட்டேன்.

திருநங்கை ஜீவா

சென்னைக்கு வந்ததும் ஒரு டைல்ஸ் கடையில் வேலை பார்த்தேன். அங்கே இருந்து ஒரு என்ஜிஓவில் வேலை கிடைச்சது. கொஞ்ச நாள் என்.ஜி.ஓ.வுடன் சேர்ந்து சமூக சேவை செஞ்சிட்டு இருந்தேன். அப்புறம், சிஎஸ்ஐஎம் கல்லூரியில் சோசியல் ஒர்க்கில் டிப்ளோமா முடிச்சேன். பிறகு, 2007-ல் `transgender rights association' என்கிற அமைப்பை ரிஜிஸ்டர் பண்ணினேன். அந்த அமைப்பின் மூலமா திருநங்கைகளுடைய கல்விக்காகவும், அவங்களுடைய வேலைவாய்ப்புக்காகவும் உதவி பண்ணிட்டு இருக்கேன். என்கிட்ட 20 ஊழியர்கள் வேலை பார்க்கிறாங்க. நார்த் சென்னையில் கிட்டத்தட்ட 350 திருநங்கைகள் இருக்காங்க. அவங்க எல்லோருக்கும் தேவையான விஷயத்தைச் செய்து கொடுக்கிறோம்.

அரசாங்கத்தில் கொடுக்கிற உதவித்தொகை வெச்சு கொஞ்சம் ஹெல்ப் பண்றோம். அதைத் தவிர தனியார் என்ஜிஓக்கள் சிலர் உதவி செய்வாங்க. திருநங்கைகளைத் தொழில்முனைவோராக உருவாக்கணும் என்பதுதான் என்னுடைய ஆசை. இவ்வளவு நாளா சோசியல் ஒர்க் பண்ணிட்டு இருந்த நான் இப்போதான் பிசினஸில் அடி எடுத்து வெச்சிருக்கேன். ஈரோட்டிலிருந்து டிரெஸ் எடுத்துட்டு வந்து இங்கே அதை சேல்ஸ் பண்றோம். நானும், என் நண்பர்களும் சேர்ந்து இப்போதான் இந்த பிசினஸை ஆரம்பிச்சிருக்கோம். பிசினஸில் அடுத்தடுத்த கட்டத்துக்குப் போகணும்னு உழைக்க ஆரம்பிச்சிருக்கோம்.

திருநங்கை ஜீவா

10 வருஷத்துக்கு முன்னாடி என்னை ஏத்துக்கிட்டு என் அம்மா மட்டும் என்கூட வந்தாங்க. 10 வருஷமா நான்தான் அம்மாவைப் பார்த்துக்கிட்டேன். ஒரு மாசத்துக்கு முன்னாடி அம்மா இறந்துட்டாங்க. அந்த இழப்பிலிருந்து மீண்டு வரதான் கடினமா இருக்கு. நிறைய வலிகளை எதிர்கொண்டிருக்கேன். இப்போ என்னை மாதிரி யாரும் கஷ்டப்படக்கூடாதுன்னு அவங்களுக்காக ஓடிட்டு இருக்கேன்மா எனப் புன்னகைக்கிறார், ஜீவா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close