CFMoto... இந்தியாவில் சீன நிறுவனத்தின் செகண்ட் இன்னிங்ஸ்! | CFMoto to Land on Indian Shores with AMW Motorcycles

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (09/03/2019)

கடைசி தொடர்பு:17:40 (09/03/2019)

CFMoto... இந்தியாவில் சீன நிறுவனத்தின் செகண்ட் இன்னிங்ஸ்!

மோட்டார் சைக்கிள்கள், All Terrain Vehicles, Side By Side யுட்டிலிட்டி வாகனங்கள், பவர் ஸ்போர்ட் இன்ஜின்கள் மற்றும் அதற்கேற்ற உதிரிபாகங்கள் - ஆக்ஸசரீஸ் எனப் பலதரப்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்கிறது CFMoto.

250-650சிசி திறனில் இந்த ஆண்டு, CFMoto நிறுவனம் இந்தியாவில் பைக்குகளைக் களமிறக்க உள்ளது. இது கேட்க மகிழ்ச்சியாக இருந்தாலும், இந்த சீன நிறுவனத்தைப் பற்றி முதலில் தெரிந்துகொள்வோம். மோட்டார் சைக்கிள்கள், All Terrain Vehicles, Side By Side யுட்டிலிட்டி வாகனங்கள், பவர் ஸ்போர்ட் இன்ஜின்கள் மற்றும் அதற்கேற்ற உதிரிபாகங்கள் - ஆக்ஸசரீஸ் எனப் பலதரப்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்கிறது, CFMoto. 1989-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இதுவரை 98 வாகனங்கள் மற்றும் 51 இன்ஜின்களை தயாரித்திருக்கிறது. சீனாவில் உள்ள Zhejiang Province-யைத் தலைமையிடமாகக் கொண்ட CFMoto, உலக சந்தைகளில் (North America, Europe, Australia, Asia, Africa) தனது தயாரிப்புகளை விற்பனை செய்கிறது. சீன பைக் சந்தையில் இந்த நிறுவனத் தயாரிப்புகள் ப்ரீமியம் அந்தஸ்தைக் கொண்டுள்ளன. எங்கேயோ இந்த பெயரைக் கேட்ட மாதிரி இருக்கே என்கிறீர்களா?

 

CFMoto - வரலாறு

 

650NK

 

கேடிஎம் நிறுவனம், கடந்த அக்டோபர் 2017-ல் இந்த சீன நிறுவனத்துடன் உடன் கூட்டணி அமைத்திருந்தது. அதன்படி 999சிசி வி-ட்வின் (75 டிகிரி) LC8 இன்ஜினை 2020 முதலாக சீனாவில் உற்பத்தி செய்து, தனது ப்ராண்டிங்கில் புதிய பைக்குகளை CFMoto அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் 790 டியூக் மற்றும் 790 அட்வென்ச்சர் ஆகிய பைக்குகளில் இருக்கும் புதிய 799சிசி LC8c பேரலல் இன்ஜின் பொருத்தப்பட்ட புதிய மாடல்களையும் தயாரிக்க இருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பாக, இந்தியாவில் Eider Motors என்ற நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து நம் ஊரில் களமிறங்கியது CFMoto. ஆனால் இது வர்த்தகத்தை தொடங்கவில்லை என்பதுடன், அதன் உரிமையாளர் டீலர்களை ஏமாற்றியதற்காகக் கைது செய்யப்பட்டார்.  எனவே சாலைக்கு வராமலேயே Eider Motors மூடுவிழா கண்டது. எனவே பெனெல்லி போலவே, இந்தியாவில் தனது செகண்ட் இன்னிங்ஸை இந்த சீன நிறுவனம் தொடங்க உள்ளது. நம் ஊரின் பலவகையான பைக்குகளுக்கு ஏற்ற சந்தை எனும் காரணத்துக்காகவே, CFMoto மீண்டு(ம்) வந்திருக்கிறது.

AMW மோட்டார்சைக்கிள்ஸ் - கூட்டணி

 

CFMoto

 

செப்டம்பர் 2018-ல் தொடங்கப்பட்ட AMW மோட்டார்சைக்கிள்ஸ், பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமாகும். பைக்குகளைத் தயாரிக்கத் தேவையான தொழிற்சாலையைக் கட்டமைக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், ஹைதராபாத் சாலைகளில் CFMoto பைக்குகளை டெஸ்ட் செய்துகொண்டிருக்கிறது. இதே பெயரைக் கொண்ட AMW டிரக்ஸ் (மும்பை) நிறுவனத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பைக்குகளை விரைவில் வெளியிடும் நோக்கத்தில் இருப்பதால், தனக்கென ஒரு இணையதளம், சமூக வலைதளங்கள் ஆகியவற்றை தயாராக வைத்திருக்கிறது CFMoto - AMW. இந்தியாவில் 250NK, 400NK, 650NK, 650MT ஆகிய பைக்குகள் முதற்கட்டமாக அறிமுகமாகும் எனத் தெரிகிறது. இதில் 650NK தவிர மற்றவற்றின் ஸ்பை படங்கள் கிடைத்தாகிவிட்டன. இதில் 250NK பைக்கைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்துவிட்டோம். 

 

என்னென்ன பைக்குகள் இந்தியாவில் வரும்?

 

400NK

 

400NK, அடிப்படையில் மினி 650NK பைக் ஆகும். எனவே பெரிய பைக்கின் பாடி பேனல்கள் - மெக்கானிக்கல் அம்சங்கள் (41மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் - மோனோஷாக் - டியூப்லர் டைமண்ட் ஸ்டீல் ஃப்ரேம்) ஆகியவற்றுடன் LED செட்டிங் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ஆகியவையே சிறிய மாடலிலும் உண்டு. முன்பக்க இரட்டை 300மிமீ டிஸ்க் - 120/70 ZR17 CST டயர் மற்றும் பின்பக்க ஒற்றை 240மிமீ டிஸ்க் - 160/60ZR17 CST டயர் ஆகியவையும் இரண்டு பைக்குகளுக்கும் பொதுவானதே. 400NK பைக்கில் இருக்கும் 400.4சிசி பேரலல் ட்வின் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, DOHC - 8 வால்வ் - லிக்விட் கூலிங் - ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் அமைப்பைக் கொண்டுள்ளது. இவையெல்லாம் சேர்ந்து, 41.4bhp@9,500rpm பவர் மற்றும் 3.44kgm@7,650rpm டார்க்கையும் பின்பக்கச் சக்கரத்துக்குக் கடத்துகின்றன. 650NK பைக்கில் எதிர்பார்த்தபடியே அளவில் பெரிய 649.3சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு இடம்பெற்றுள்ளது. இது 61bhp@9,000rpm பவர் மற்றும் 5.6kgm@7,000rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இரண்டு பைக்கின் எடையும் 206 கிலோதான்!

 

650MT

 

அட்வென்ச்சர் டூரர் வகை பைக்கான 650MT பைக்கில் இருப்பது, 650NK பைக்கில் இருக்கும் அதே 649.சிசி ட்வின் சிலிண்டர் இன்ஜின்தான். ஆனால், இது அதிகமான செயல்திறனை வெளிப்படுத்தும்படி ரீ-டியூன் செய்யப்பட்டுள்ளது (70.7bhp@8,750rpm பவர் மற்றும் 6.2kgm@7,000rpm டார்க்). 650NK உடன் ஒப்பிடும்போது வேறு பாடி பேனல்கள் 650MT பைக்கில் இருப்பதால், இதன் எடை 213 கிலோவாக அதிகரித்துவிட்டது. அட்வென்ச்சர் டூரர் என்பதைப் பறைசாற்றும் விதமாக பெரிய விண்ட் ஸ்க்ரீன் மற்றும் ஃபேரிங் -நீளமான சிங்கிள் பீஸ் சீட் - Hand Guards - க்ராஷ் கார்டு ஆகியவை, இந்த பைக்கில் ஸ்டாண்டர்டு அம்சம். வழக்கமான சீட்டின் 840மிமீ அதிகம் என நினைப்பவர்களுக்கு, 820மிமீ Low Seat ஆப்ஷனல். தவிர அலுமினியத்தால் ஆன Panniers ஆக்ஸசரீஸில் வாங்கிக் கொள்ளலாம். 650NK பைக்கின் சேஸி - சஸ்பென்ஷன் - பிரேக்ஸ்தான் 650MT பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

CFMoto பைக்ஸ்... என்ன விலையில் இந்தியாவில் வாங்கலாம்?

 

250NK

 

சர்வதேச அளவில், தனது தயாரிப்புகளை அனைவருக்கும் கட்டுபடியாகக் கூடிய விலையைக் கொண்டுவரும் நிறுவனம் என்ற பெயரைக் கொண்டுள்ளது CFMoto. ஆஸ்திரேலியாவில் 650NK பைக்கின் விலை AUD 6,490 (இந்திய மதிப்பில் 3.2 லட்ச ரூபாய்). இதற்குப் போட்டியாக விளங்கும் கவாஸாகி Z650 பைக்கின் விலையோ AUD 9,799 (இந்திய மதிப்பில் 4.84 லட்ச ரூபாய்)! எனவே இந்த சீன நிறுவனம், தான் சர்வதேச அளவில் கொண்ட நற்பெயருக்கு ஏற்ப இந்தியாவில் செயல்பட்டால், நம் ஊரின் Price Sensitive பைக் சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பதற்கான சாத்தியம் இருக்கிறது.

கடந்த காலத் தவறை CFMoto மீண்டும் செய்யாது என்பதால், டீலர் விஷயத்தில் அவர்கள் உஷாராகவே இருப்பார்கள். ஆனால், ஒரு ப்ரீமியம் பைக்குக்கு சிறப்பான டீலர் நெட்வோர்க் தவிர, உதிரிபாகங்களின் விலை - பராமரிப்புச் செலவுகள் - வாரன்ட்டி/AMC ஆகியவையும் முக்கியம். எனவே, அந்த ஏரியாவில் இந்த சீன நிறுவனம் எப்படி விளையாடப் போகிறது என்பது போகப்போகத்தான் தெரியும். மேலும் இந்த பிரிவில் இந்தியாவில் ஏற்கெனவே வலுவாகக் காலூன்றி இருக்கும் கவாஸாகி - ஹார்லி டேவிட்சன் - பிஎம்டபிள்யூ/டிவிஎஸ் - ராயல் என்ஃபீல்டு - கேடிஎம்/பஜாஜ் - ஹயோசங் - ஹோண்டா - சுஸூகி - யமஹா - ட்ரையம்ப் - பெனெல்லி ஆகியோரை எப்படிச் சமாளிக்கப் போகிறது CFMoto?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close