Published:Updated:

கேன் வாட்டர் சுத்தமானதா? : 27-ம் தேதி திக்.. திக்..!

கேன் வாட்டர் சுத்தமானதா? : 27-ம் தேதி திக்.. திக்..!
கேன் வாட்டர் சுத்தமானதா? : 27-ம் தேதி திக்.. திக்..!
கேன் வாட்டர் சுத்தமானதா? : 27-ம் தேதி திக்.. திக்..!

தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்​திருக்கிறது. ஒரு பக்கம் கேன் வாட்டர் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக்... இன்னொரு பக்கம் மெட்ரோ பைப்பில் காற்று மட்டும் வர, சென்னை மக்கள் பரிதவித்துவிட்டனர்.

'டுபாக்கூர் கேன் வாட்டர்! கோடை வரப்போகிறது... பொதுமக்களே உஷார்’ என, கடந்த 24.02.13 தேதியிட்ட ஜூ.வி-யில் ஒரு கட்டுரை வெளியிட்டோம். தென் மண்டல தர நிர்ணய அலுவலகத்தில் சீனியர் சயின்டிஸ்டாக பணியாற்றிய வெங்கட்நாரயணன் கேன் வாட்டர் பிளான்ட் லைசென்ஸ் விவகாரத்தில் லஞ்சம் வாங்கி, சி.பி.ஐ-யிடம் சிக்கியது பற்றியது அந்தக் கட்டுரை. இந்த நிலையில், பசுமைத் தீர்ப்பாயமும் வாட்டர் கேன் விவகாரத்தில் சாட்டையை சொடுக்கியுள்ளது. 

கேன், பாட்டில் மற்றும் பாக்கெட் குடிநீரை தயாரிக்கும் நிறுவனங்கள் ஸ்டிரைக் காரணமாக வாட்டர் கேன் விலை 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதுவும் பல இடங்களில் கிடைக்கவில்லை. எதற்காக இந்த ஸ்டிரைக்?

தமிழகத்தின் நகர்ப்புறங்களில், 900-க்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. சென்னை, காஞ்சிபும் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 309 நிறுவனங்கள் செயல்படுகின்றன. சென்னையில் தர நிர்ணயத் துறை நடத்திய சோதனையில், பெரும்பாலான நிறுவனங்கள் ஐ.எஸ்.ஐ. தரச் சான்று பெற்றிருந்தும், அவை தயாரிக்கும் குடிநீர் தரமாக இல்லை என்பது தெரியவந்தது. இந்த விவகாரத்தை, தானாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், உரிய

கேன் வாட்டர் சுத்தமானதா? : 27-ம் தேதி திக்.. திக்..!

அனுமதி இல்லாத குடிநீர் நிறுவனங்களை மூட உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 126 குடிநீர் நிறுவனங்களை, சோதனைசெய்த மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், உரிய முறையில் செயல்பட்ட 23 நிறுவனங்களைத் தவிர, 103 நிறுவனங்களை இழுத்து மூடி சீல் வைத்தனர். அந்த நிறுவனங்களுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னையில் உள்ள கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர். இப்போது, ஸ்டிரைக் வாபஸ் ஆகிவிட்டது. ஆனால், அனைத்து நிறுவனங்களிலும் குடிநீர் மாதிரி எடுத்து, ஆய்வுக்கு அனுப்பி அதன் ரிசல்ட்டை 27-ம் தேதி சமர்ப்பிக்குமாறு மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை உற்பத்தியை நிறுத்திவைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

தென்னிந்திய அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சசிதரனிடம் பேசினோம். ''தரச்சான்று தரவேண்டிய அமைப்பில் உள்ளவர்கள், சில இடைத்தரகர்களால் தரம் தாழ்ந்துபோனதால் வந்த குழப்பம் இது. பொதுமக்கள் மட்டுமல்லாது இந்தத் தொழிலை நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். தரச்சான்று பெற்று தண்ணீர் விற்கும் நாங்கள் ஒரு கேன் 20 ரூபாய்க்கு விற்கிறோம். இதே நடைமுறையைப் பின்பற்றும் சில பன்னாட்டு நிறுவனங்கள் நம் ஊரில் தண்ணீர் எடுத்து, நமக்கே 60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இப்போதைய நடவடிக்கை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக அமைந்துவிடக் கூடாது.

பசுமைத் தீர்ப்பாய நீதியரசர், தொழிற்சாலையை மூடுவது நோக்கம் அல்ல என்று கூறியிருப்பது சற்று

கேன் வாட்டர் சுத்தமானதா? : 27-ம் தேதி திக்.. திக்..!

ஆறுதலான செய்தி. எங்கள் நிறுவனங்களில் இருந்து எந்த விதமான வேதிப் பொருட்களையும் வெளியேற்றுவது இல்லை. எனவே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதில் நுழைய வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்குத் தரமான குடிநீர் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தமிழகத்தில் தரச் சான்று இல்லாமல் சுமார் 600-க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் நிறுவனங்கள் இயங்குகின்றன. தரமற்ற குடிநீர் விநியோகிப்பதும் இவர்கள்தான். முதலில் இந்த நிறுவனங்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டாலே, மொத்தப் பிரச்னையும் முடிந்துவிடும்'' என்றார்.

சமூக ஆர்வலர்களோ, ''கேன்களில் குடிநீர் அடைக்கப்பட்ட வருடம், மாதம் குறிப்பிடுவது இல்லை. கேன்களின் வெளிப்பகுதி சுத்தமாக இல்லை. கேன்களில் பொருத்தப்படும் மூடி 30 பைசாவுக்கு வெளிச் சந்தையில் கிடைக்கிறது. இதை மொத்தமாக வாங்கும் சில டுபாக்கூர் கம்பெனிகள், கண்ட நீரையும் கேனில் நிரப்பில் விற்பனைக்கு அனுப்பி விடுகின்றன. கேன்களின் வாயில் உள்ள பிளாஸ்டிக் மூடியில் உற்பத்தியாளர் அவரது நிறுவன பெயரை சீல் வைத்து விநியோகிக்க வேண்டும். இந்த முறையைக் கையாண்டால் டுபாக்கூர் கம்பெனிகளையும், சில்லறை வியாபாரிகள் குடிநீரை வேறு கேன்களுக்கு மாற்றி விற்பனை செய்வதையும் தடுக்கலாம்'' என்கிறார்கள்.

தாகத்துக்குக் குடிக்கும் தண்ணீரில் விளையாடலாமா?

- தி.கோபிவிஜய்,
படங்கள்: பா.கார்த்திக், செ.நாகராஜ்

ஜூனியர் விகடன் மே 26, 2013