டிஜிட்டல் டீ-ஏஜிங் திரையில் செய்யும் மேஜிக்! - ரஜினி, விக்ரம், அஜித் அட்டென்ஷன் ப்ளீஸ் | Digital De-aging is growing rapidly and 'Captain Marvel' is an evident proof.

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (11/03/2019)

கடைசி தொடர்பு:15:25 (11/03/2019)

டிஜிட்டல் டீ-ஏஜிங் திரையில் செய்யும் மேஜிக்! - ரஜினி, விக்ரம், அஜித் அட்டென்ஷன் ப்ளீஸ்

இன்று ஒரு ரஜினியையோ, கமலையோ 80-களில் இருந்த அதே நிலையில் இந்த தொழில்நுட்பத்தால் கொண்டுவர முடியும். வயது முதிர்ந்த நடிகர்களை மட்டுமல்லாமல் மறைந்த நடிகர்களை மீண்டும் திரைக்கு கொண்டுவரவும் உதவுகிறது இந்த தொழில்நுட்பம்.

டிஜிட்டல் டீ-ஏஜிங் திரையில் செய்யும் மேஜிக்! - ரஜினி, விக்ரம், அஜித் அட்டென்ஷன் ப்ளீஸ்

இத்தனை ஆண்டுகளில் நாம் சினிமா பார்க்கும் முறை மாறியிருக்கிறது, படமெடுக்கும் முறை மாறியிருக்கிறது. சினிமா தொடர்பான தொழில்நுட்பங்கள் அனைத்துமே மாறியிருக்கின்றன. 20 வருடங்களுக்கு முன் ஒரு நடிகரை வயதானவராகக் காட்டவோ, வயது குறைந்தவராகக் காட்டவோ என்ன செய்தனர் திரைத்துறையினர்? விக், மேக் அப், லைட்டிங் தாண்டி அப்போது அவர்கள் கைகளில் எதுவும் இல்லை. அவற்றைக் கொண்டே இளமை தோற்றத்தை உண்டாக்கினர். ஹாலிவுட் தொடங்கி தமிழ்ப் படங்கள்வரை இதே நிலைதான். இதை நாமும் திரையில் பார்த்திருக்கிறோம். சில நேரங்களில் இளம்வயது காட்சிகளுக்கு தங்கள் சொந்த மகன்களையே நடிக்கவைத்திருக்கின்றனர். ஆனால் காலம் மாறிவிட்டது. சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'கேப்டன் மார்வெல்' எதற்காகப் பாராட்டப்படுகிறதோ, இல்லையோ அதில் நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கும் ஒரு தொழில்நுட்பத்திற்காக பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது. 'டிஜிட்டல் டீ-ஏஜிங்' (Digital De-Aging) என்ற விஷுவல் எஃபெக்ட் முறைக்காகத்தான் அது.

Captain Marvel

அவெஞ்சர்ஸ் படங்களில் வரும் 'நிக் ஃப்யூரி' என்னும் கதாபாத்திரத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஜாக்சன் நடித்திருப்பார். இந்த அவெஞ்சர் படங்கள் இந்நாளில் (2012-19) நடப்பதாக இருக்கும். ஆனால், 'கேப்டன் மார்வெல்' படம் 1990-களில் நடப்பதாக இருக்கிறது. இதில் இளம்வயது 'நிக் ஃப்யூரி'யாக இன்னொருவர் நடிக்காமல் சாமுவேல் ஜாக்சனே நடித்திருக்கிறார். இங்குதான் பெருமளவில் 'டிஜிட்டல் டீ-ஏஜிங்' இவர்களுக்குக் கைகொடுத்து இருக்கிறது. அப்படியே இளம்வயதில் சாமுவேல் ஜாக்சன் எப்படி இருப்பாரோ அதைத் திரையில் கொண்டுவந்திருக்கின்றனர். இந்த டீ-ஏஜிங் விஷுவல் எஃபெக்ட்ஸ் முறை ஒன்றும் புதிதானதெல்லாம் இல்லை. 2006-ம் ஆண்டு 'எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டாண்ட்' படத்திலேயே இது முயற்சி செய்து பார்க்கப்பட்டுவிட்டது. ஆனால் அது சிறிது நேரமே வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு மட்டும்தான். அதிலும் சில பிசிறுகள் இருக்கவே செய்தன. ஆனால் இப்போது 'கேப்டன் மார்வெல்' படம் முழுவதும் சாமுவேல் ஜாக்சன் இளம்வயதிலேயே வருகிறார். அதுவும் எவரின் கண்ணுக்கும் உறுத்தாத வகையில். 2006-ல் 'எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டாண்ட்' படத்திற்கு இந்த 'டிஜிட்டல் டீ-ஏஜிங்' செய்த அதே Lola VFX நிறுவனம்தான் இப்போது கேப்டன் மார்வெல் படத்திற்கும் இந்த டீ-ஏஜிங்கை செய்துதந்திருக்கிறது. இத்தனை வருட அனுபவத்தில் இந்த முறையை ஓரளவு நன்றாகக் கையாள தொடங்கியிருக்கிறது இந்த நிறுவனம்.

'டிஜிட்டல் டீ-ஏஜிங்' எப்படிச் செய்யப்படுகிறது?

எளிமையாக விளக்கவேண்டும் என்றால் முக்கிய நடிகர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் வயது குறைந்தவராக தெரிவதற்கான மேக்அப் மற்றும் மற்ற விஷயங்களுடன் நடித்துக் கொடுத்துவிடுவார். சில நேரங்களில் வேறு ஒரு இளம் நடிகரும் இதை நடிப்பார். இது ஒவ்வொரு முறையும் சூழலுக்கு ஏற்ப மாறும். இப்படி எடுக்கப்படும் காட்சியில் இருக்கும் முக்கிய நடிகரின் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கண்ணிற்குக் கீழ் விழும் குழிகள், தாடை அமைப்பு போன்றவற்றை மட்டும் விசுவல் எஃபெக்ட்ஸ் மூலம் சரிசெய்வர். இதற்காக இவர்களின் இளம்வயது புகைப்படங்கள் அல்லது காட்சிகள் குறிப்புகளாக எடுத்துக்கொள்ளப்படும். சில நேரங்களில் இன்னொரு நடிகரின் முகத்தின் மேல் இவரின் முகம் சூப்பர் இம்போஸ் செய்யப்படும். இதைச் சரியாக செய்வதன் மூலம் அந்த நடிகரின் இளம்வயது தோற்றத்தை திரைக்கு எடுத்துவருவர். செயற்கை நுண்ணறிவு தொடங்கி பல தொழில்நுட்பங்கள் இதற்குப்பின் நிற்கின்றன.

டிஜிட்டல் டி-ஏஜிங்

இடது: டீ-ஏஜிங்கிற்கு முன்  வலது: டீ-ஏஜிங்கிற்கு பின், 'எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டாண்ட்' (2006)

என்னதான் பார்க்க இளம்வயது போலவே நன்றாக இருந்தாலும்; பேசும் போதும், சில அசைவுகளின் போதும் முகங்களில் ஏதோ ஒன்று செயற்கையாக இருப்பதை மக்கள் உணர்ந்துகொண்டே இருந்தனர். டைனோசரையே திரைக்குக் கொண்டுவரும் இவர்களால் நல்லமுறையில் மனித முகத்தைத் திரைக்கு கொண்டுவருவது கடினமாக இருந்தது. காரணம் அத்தனை சிக்கல்களும், நுணுக்கங்களும் உடையது நம் முகம். இந்த சிக்கல்களை முடிந்தளவு உடைத்திருக்கிறது 'கேப்டன் மார்வெல்'. சொல்லப்போனால் இந்த தொழில்நுட்பம் இன்று இந்நிலையை எட்டியிருப்பதற்கு மார்வெல் படங்கள் அனைத்திற்குமே முக்கிய பங்கு இருக்கிறது. எக்ஸ்-மென் தொடங்கி தொடர்ந்து தங்கள் படங்களில் தொடர்ச்சியாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது மார்வெல். வருடங்கள் நகர நகர இது இன்னும் மேம்படவே போகிறது. 

இதன் வருங்காலம் என்ன?

இது அளிக்கும் வாய்ப்புகள் ஏராளம். இன்று ஒரு ரஜினியையோ, கமலையோ 80-களில் இருந்த அதே நிலையில் இந்த தொழில்நுட்பத்தால் கொண்டுவர முடியும். வயது முதிர்ந்த நடிகர்களை மட்டுமல்லாமல் மறைந்த நடிகர்களை மீண்டும் திரைக்கு கொண்டுவரவும் உதவுகிறது இந்த தொழில்நுட்பம். 'ரோக் ஓன்: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி' படம் அதைச் செய்தது. பழைய ஸ்டார் வார்ஸ் படங்களில் நடித்த பீட்டர் கஷிங் இந்த படத்தில் இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொண்டுவரப்பட்டார். சில பிசிறுகளுடன். தங்களது நட்சத்திரங்களுக்கு மனதில் பெரிய கோட்டைகள் கட்டிவைத்திருக்கும் இந்தியாவையும் விரைவில் இந்த VFX அலை விரைவில் தாக்கும். தங்கள் அபிமான நட்சத்திரங்களை இளம் தோற்றத்தில் அன்று இருந்ததைப் போல் பார்க்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. 

Samuel Jackson

'டிஜிட்டல் பியூட்டி' அல்லது 'டிஜிட்டல் ரீ-டச்சிங்' என்ற முறையில் டிஜிட்டலாக தங்களை அழகுபடுத்திக்கொள்ளும் முறையும் இங்கிருக்கும் சில நட்சத்திரங்கள்வரை வந்துவிட்டது. முகத்தில் சில மாற்றங்கள் தொடங்கி சிக்ஸ்-பக்ஸ் வரை அனைத்திற்கும் இவை பயன்படுமாம். பிளாஸ்டிக் சர்ஜெரியின் அவசியத்தை நீக்குகிறது இது!

இதிலும் இருக்கும் சிக்கல்கள் என்ன?

இன்றே ஹாலிவுட்டில் படப்பிடிப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் எந்த அளவு VFX கொண்டு தங்கள் தோற்றத்தை மாற்றலாம், மாற்றக் கூடாது எனக் கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர் நடிகர்கள். இன்று பல முன்னணி நடிகர்களின் 3D வடிவம் ஸ்கேன் செய்து சேமித்துவைக்கப்பட்டுள்ளது. இது வருங்காலத்தில் பயன்படுத்தப்படலாம். ஆனால், ஒருவர் இறந்த பின் அவர் முகத்தை ('Digital Likeness') பயன்படுத்த யாரிடம் அனுமதி கேட்கவேண்டும். அந்த உரிமம் யாரிடம் செல்லவேண்டும் என்பதற்காகச் சரியான பதில்கள் நம்மிடத்தில் இல்லை. தவறான முறையில் இந்த தொழில்நுட்பம் பயன்படவும் வாய்ப்பிருக்கிறது. இதற்கான சரியான சட்டதிட்டங்கள் இன்னும் பெரும்பாலான நாடுகளில் அமைக்கப்படவில்லை. 

மறைந்த நடிகர் பீட்டர் கஷிங்

மறைந்த நடிகர் பீட்டர் கஷிங்கை VFX-ன் மூலம் மீண்டும் கொண்டுவந்த காட்சி, 'ரோக் ஓன்: எ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி'(2016)

இன்னும் சிலர் கேட்கும் கேள்விகள், எதற்காக இப்படிச் செய்யவேண்டும்? இது அவசியம் தானா? தொழில்நுட்பம் இருக்கிறது என்பதற்காகப் பயன்படுத்துவதா? படப்பிடிப்பின் நடுவே ஒருவர் இறந்துவிட்டார் என்பதைப் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் சரி. (ஃப்யூரியஸ் 7 படத்தில் பால் வாக்கரின் பகுதிகள் அவரின் சகோதரரின் உதவியுடனும், VFX-ன் உதவியுடனும் சில அப்படிதான் படமாக்கப்பட்டது). ஆனால் ஒருவர் நடித்து அதன் மேல் இன்னொருவரின் முகத்தை வைப்பதற்கு அவரையே நடிக்க வைத்துவிட்டுவிடலாமே என்கின்றனர் சிலர். இது தேவையில்லாத ஆணி என்கின்றனர் அவர்கள்.

இப்படியாக விமர்சனங்கள் இருந்தாலும், இந்த தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வரவேற்கத்தக்கது தான். சிக்கல்களுக்குத் தீர்வுகள் காண்பதும் இதன் வருங்கால வளர்ச்சியில் அடங்கும். கலை மற்றும் தொழில்நுட்பம் கைகோர்த்துச் செல்லும் இன்றைய டிஜிட்டல் சூழலில் இதைத் தடுக்கவும் முடியாது. இதைப் பயன்படுத்துவதென்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமே! இந்த வருடத்தின் மிக முக்கிய படங்களில் ஒன்றான ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர் மார்டின் ஸ்கோர்சேஸி இயக்கும் 'தி ஐரிஷ் மேன்' படத்தில் பிரபல நடிகர் ராபர்ட் டெ நீரோ இந்த டிஜிட்டல் டீ-ஏஜிங் மூலம் இளம்வயது கதாபாத்திரமாக நடிக்கவுள்ளார். படத்தில் அவரது லுக்கை பார்ப்பதற்கு உலகமே தற்போது வெயிட்டிங்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close