`முப்பரிமாண வடிவத்தில் செகண்ட்ஹேண்ட் வாகனங்களைப் பார்த்து வாங்கலாம்!' - மாணவர்களின் சூப்பர் ஆப் | Students design an android app to sell and buy the vehicles and got the prize

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (12/03/2019)

கடைசி தொடர்பு:10:47 (13/03/2019)

`முப்பரிமாண வடிவத்தில் செகண்ட்ஹேண்ட் வாகனங்களைப் பார்த்து வாங்கலாம்!' - மாணவர்களின் சூப்பர் ஆப்

ஸ்மார்ட் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அரசின் சேவைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கிவரும் நிலையில் அதைத் தொடர்ந்து தற்போது சில அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்காக மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' போட்டிகளையும் நடத்தி வருகிறது. கோவை குமரகுரு கல்லூரியில்  அண்மையில் நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்புக் கல்லூரியின் மாணவர்கள் 6 பேர் கொண்ட குழு பங்கேற்று ஒரு லட்சம் ரூபாய் பரிசை வென்றனர். புதுவிதமான ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை உருவாக்கி இதைச் சாதித்திருக்கின்றனர் மாணவர்கள்.

மாணவர்கள் உருவாக்கிய ஆப்

என்ன பயன் இந்தச் செயலியால்?

நாளுக்கு நாள் புதிய வாகனங்களின் வருகை அதிகரிக்க அதிகரிக்க பழைய வாகனங்கள் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது. பெரும்பாலான மக்கள் பழைய வாகனங்களைக் குறைந்த விலைக்கு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இடைத்தரகர், பார்ட்டி கமிஷன் எனப் பல்வேறு கஷ்டங்கள் சேர்ந்து கொள்கின்றன. காரணம் ஒருவரையொருவர் சார்ந்திருப்பது. இதைத் தவிர்க்க அதாவது, பழைய பொருள்களை வாங்க, விற்க இடைத்தரகரின்றி நேரடியாக இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் இந்தச் செயலி.

செயலியில் பொருள்களை விற்க விரும்புவோர் வாகனத்தின் முப்பரிமாண உருவத்தில் இந்த செயலியில் பதிவேற்ற முடியும். அதைப்பார்த்து பார்வையாளர்கள் வாங்க விரும்பினால் விற்பனையாளரைத் தொடர்புகொள்ள இயலும். மேலும், ஏலம் அடிப்படையில் வாகனங்களை விற்கும் வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..தற்போது கால்டாக்ஸி நிறுவனங்கள் அனைத்தும் ஷேரிங் முறையில் காரில் அழைத்துச் செல்கின்றனர். அதில் குறிப்பிட்ட நிறுவன கால்டாக்ஸிகளை மட்டுமே பயன்படுத்தமுடியும். ஆனால், இந்த செயலியில் ஷேரிங் முறையில் தாங்கள் செல்லும் பகுதிக்கு வேறு சிலரையும் அழைத்துச் செல்வதற்கான வசதியும் உள்ளது.

மாணவர் குழு

செயலியை வடிவமைத்த மாணவன் ஆகாஷ் கூறுகையில், ``எங்க டீமில் 6 பேர் இருக்கோம் ஏற்கெனவே நிறைய புராஜெக்ட் செஞ்சிருக்கோம். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துதல், தேவையற்ற முறையில் தேங்கி மட்கும் பழைய வாகனங்களைத் தேவையானவர்கள் வாங்குதல் / விற்பனை செய்தல் ஆகியவற்றை எளிதாக்கும் வகையில் ஏதாவது செய்யணும்னு நினைச்சிட்டு இருந்தோம்.

அப்போதுதான் மத்திய அரசு நடத்தி வருகின்ற  'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் பற்றி கேள்விப்பட்டோம். பழைய வாகனங்களை வாங்கும் விற்கும் செயலிகள் (olx, quickr) ஏற்கெனவே சந்தையில் இருந்தாலும் முப்பரிமாண வடிவத்தில் வாகனங்களைப் பார்க்கும் வசதி, வாகனங்களை வாங்குபவர்கள் ஷேரிங் முறையில் தாங்கள் செல்லும் பகுதிக்கு வேறு சிலரையும் அழைத்துச் செல்வதற்கு பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தணும்னு ஆரம்பிச்சி வெற்றிகரமாக புராஜெக்ட்ட  முடிச்சோம். தற்போது ஆப் சோதனை முறையில் உள்ளது. மேலும், சில வசதிகளை மக்களுக்குப் பயனுள்ள வகையில் மேம்படுத்த முயற்சி செய்து வருகிறோம்." என்றார்.


[X] Close

[X] Close