சென்னையில் தேசிய அளவிலான மகாபாரதம் மாநாடு | A three day national conference on 'The Mahabharata in Indian art and culture'

வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (14/03/2019)

கடைசி தொடர்பு:21:10 (14/03/2019)

சென்னையில் தேசிய அளவிலான மகாபாரதம் மாநாடு

'இந்தியக் கலை மற்றும் கலாசாரத்தில் மகாபாரதம்' என்னும் மூன்று நாள் தேசிய மாநாடு, இன்று சென்னையில் தொடங்கியது.

மகாபாரதம்

சென்னை, சி.பி. ராமசாமி ஐயர் ஆய்வு நிறுவனத்தின், இந்தியவியல் துறை சார்பாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மகாபாரதம் தொடர்பான மூன்று நாள் தேசிய மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டின் கருப்பொருளான  'இந்தியக் கலை மற்றும் கலாசாரத்தில் மகாபாரதம் ' என்னும் தலைப்பில், இந்தியா முழுவதும் இருந்து மகாபாரத ஆய்வாளர்கள் கலந்துகொண்டு கட்டுரை வாசிக்கின்றனர்.

இந்த மாநாட்டின் தொடக்க விழா, இன்று காலை ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி ஐயர் ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்றது. இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் பி. ஜாம்கேத்கர் இந்த மாநாட்டைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் சி.பி. ராமசாமி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா, மாநாடுகுறித்த அறிமுகத்தை வழங்கினார்.  

எம். ஜி. ஆர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், மகாபாரதம் இந்திய மக்களின் வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருக்கும் தன்மையை விளக்கிப் பேசினார்.

 

 

மகாபாரதமும் தொல்லியல் துறையும், மகாபாரதமும் இசையும், மகாபாரதமும் இலக்கியமும், மகாபாரதமும் தமிழகமும் என்னும் பல்வேறு முக்கியமான தலைப்புகளில்  மூன்று நாள்களும், 40-க்கும் மேற்பட்ட  கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன. மாலையில், மகாபாரதம் சார்ந்த கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, நாளை (15.3.19) மாலை 6.30 மணிக்கு திருச்சி பெரியசாமி வழங்கும் 'பாஞ்சாலக் குறவஞ்சி' என்னும் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

மாநாட்டு ஏற்பாடுகள்குறித்து சி.பி. ராமசாமி ஆய்வு நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி சீனிவாசனிடம் கேட்டபோது, "மூன்று நாள்கள் நடைபெற இருக்கும் இந்தக் கண்காட்சியில், நாடு முழுவதும் இருந்து கலை மற்றும் கலாசாரத் துறை சார்ந்த அறிஞர்கள் பங்கேற்கின்றனர். மகாபாரதத்தை மையமிட்டு, பல்வேறு துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் இங்கு சமர்ப்பிக்கப்படும். இதையொட்டி, இங்கிருக்கும் கலைக்கூடத்தில், ஓவியர் ரவிவர்மா வரைந்த மகாபாரதம் தொடர்பான ஓவியங்களின் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். மார்ச் 16 அன்று,  4  மணிக்கு இந்த மாநாடு நிறைவுபெறும்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close