Published:Updated:

`அவளோட ஒவ்வொரு இதயத்துடிப்பிலும், கருணைகாட்டியவர்கள் எப்போதும் இருப்பாங்க!'- நெகிழும் அட்சயாவின் தாய்

`அவளோட ஒவ்வொரு இதயத்துடிப்பிலும், கருணைகாட்டியவர்கள் எப்போதும் இருப்பாங்க!'- நெகிழும் அட்சயாவின் தாய்
`அவளோட ஒவ்வொரு இதயத்துடிப்பிலும், கருணைகாட்டியவர்கள் எப்போதும் இருப்பாங்க!'- நெகிழும் அட்சயாவின் தாய்

கேரள மழை வெள்ள பாதிப்புக்கு, தனது இதய ஆபரேஷன் செலவுக்காக வைத்திருந்த பணத்தில் 5,000 ரூபாயைக் கொடுத்து, அனைவரையும் நெகிழவைத்த கரூர் சிறுமி அட்சயாவை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு, இரண்டாவது இதய ஆபரேஷனும் வெற்றிரமாக முடிய, மகிழ்ச்சியில் இருக்கிறது அட்சயாவின் குடும்பம்.

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை ஒன்றியத்தில் இருக்கிறது குமாரபாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி-ஜோதிமணி தம்பதியின் ஏழாம் வகுப்பு படிக்கும் மகள்தான் அட்சயா. சுப்பிரமணி மறைந்துவிட, கூலி வேலைக்குப் போய் மகளைக் காப்பாற்றி வருகிறார் ஜோதிமணி. இந்நிலையில், அட்சயாவுக்கு பிறந்ததிலிருந்து இதயத்தில் பிரச்னை இருக்கிறது. லட்சக்கணக்கில் செலவுசெய்து அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வழியில்லாத ஜோதிமணி, 'மகளை இழந்துவிடுவோமோ' என்று கலங்கிவந்தார். அவரின் அல்லலைத் தீர்க்க முன்வந்த கரூரைச் சேர்ந்த சமூக அமைப்பு ஒன்று, சமூக வலைதளங்கள் மூலம் நிதிதிரட்டி, கடந்த வருடம் சென்னை அப்போலோவில் இதய அறுவைசிகிச்சை செய்தனர். 'இன்னும் ஒரு வருடத்தில் இரண்டாவதா ஒரு ஆபரேஷனும் பண்ணணும்; அப்போதான், அட்சயா முழுமையா குணமாவா' என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்காக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்கள்மூலம் நிதி திரட்டினர். 20,000 ரூபாய் வரை சேர்ந்தது. அப்போதுதான், கேரளாவை வரலாறு காணாத மழை வெள்ளம் புரட்டிப்போட்டது.

அந்த கோரக்காட்சிகளை டி.வி-யில் பார்த்த அட்சயா, 'எனக்கு ஆபரேஷன் பண்ண கிடைத்த பணத்தில், 5,000 ரூபாயை கேரள நிவாரண நிதியா தர்றேன்' என்று, தனது தாயின் எதிர்ப்பையும் மீறி, 'மக்கள் பாதை' என்ற அமைப்பின்மூலம் அனுப்பினார். இந்தச் சிறுமியின் மனிதாபிமானத்தைப் பார்த்து தமிழ்நாடே வியந்தது. இந்திய அளவில் மட்டுமல்ல, லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனைகூட அட்சயாவுக்கு இரண்டாவது ஆபரேஷனை இலவசமாகச் செய்வதாக போட்டிபோட்டுக்கொண்டு அழைத்தது. ஆனால், 'முன்பு அறுவை சிகிச்சை செய்த அப்போலோ மருத்துவமனையிலேயே அறுவைசிகிச்சை செய்வதுதான் நல்லது' என்று முடிவெடுத்தனர். இதற்கிடையில்,  சிறுமி அட்சயாவைப் பாராட்ட நினைத்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகன் மோகன் குமாரமங்கலம், அட்சயா வீட்டிற்கு வருகைதந்தார். "இப்படிப்பட்ட சிறுமியைப் பெற்றதற்கு, காலத்திற்கும் பெருமைப்படலாம்" என்று உச்சிமுகர்ந்ததோடு, அட்சயாவுக்கு 25,000 ரூபாய் நிதியுதவியும் செய்தார். அதோடு, அட்சயாவின் இரண்டாவது இதய ஆபரேஷனுக்கான அத்தனை செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்து சென்றார்.

ஆனால், 'இலவசமாகவே இதய ஆபரேஷன் செய்கிறோம்' என்று அப்போலோ நிர்வாகம் சொன்னதால்,  தனக்கு கலெக்டான இரண்டு லட்சம் வரையிலான நிதியை கிருத்திகா என்ற சிறுமியின் இதய ஆபரேஷனுக்கு வழங்கி, எல்லோரையும் ஆனந்தக் கண்ணீர் வடிக்க வைத்தார் அட்சயா. இந்நிலையில், கடந்த  20 தினங்களுக்கு முன்பு, ஆபரேஷன் செய்வதற்காக சென்னைக்கு அட்சயாவை அழைத்துச் சென்றனர். அங்கே எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, அட்சயா பெரிய மனுஷியாகிவிட, 'இப்போதைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டாம்' என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதனால், கரூருக்கு திரும்பினார்கள்:

இந்நிலையில், பெரிய மனுஷியான அட்சயாவுக்கு, அவரது வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட மோகன் குமாரமங்கலம், அட்சயாவின் தாயை போனில் அழைத்து, "இந்த ஃபங்ஷனை உங்க தம்பியாக இருந்தும்,  அட்சயாவின் தாய்மாமனாக முன்னின்றும், நானே நடத்துகிறேன். சீர் செனத்தி செய்கிறேன்' என்று சொல்லி, அட்சயா குடும்பத்தை கண்கலங்க வைத்தார். சொன்னதுபோலவே, அட்சயாவின் பூப்புனித நீராட்டு விழாவில் தாய்மாமன் போல கலந்துகொண்ட மோகன் குமாரமங்கலம், அட்சயாவுக்கு ரூ.20,000 சீர்வரிசை பணமாக வழங்கினார். அங்கே நடைபெற்ற விருந்தில் உணவருந்திவிட்டும் போனார். இந்நிலையில், சென்னை அப்போலோவில் அட்சயாவுக்கு வெற்றிகரமாக இரண்டாவது ஆபரேஷன் முடிந்திருக்கிறது.

அந்த மகிழ்ச்சி குறையாமல் நம்மிடம் பேசிய அட்சயாவின் தாய் ஜோதிமணி, "போன வருடம் வரை, 'அட்சயாவுக்கு இப்படி ஆயிட்டே. புருஷனையும் இழந்து, இப்போ புள்ளையையும் இழந்துருவோமோ?'னு கலங்கி நின்னேன். 'நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு துன்பம்'னு குமுறிப்போனேன். ஆனா, அட்சயாவால் இப்போ அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கேன். ஆண்டவன் என் மகளுக்கு பலகீனமான இதயத்தைக் கொடுத்தாலும், அடுத்தவங்களுக்கு உதவுற மனிதாபிமான இதயமா படைச்சிருக்கான். அதனால்தான், இத்தனை பெருமையும் எங்களைத் தேடிவந்திருக்கு. மோகன் குமாரமங்கலம், அட்சயாவுக்கு தாய்மாமனா மாறினார். அவள், கேரளாவுக்கு நிதி அளித்ததை விகடன்தான் முதலில் பதிவுசெஞ்சுச்சு. அதைப் படிச்சுட்டு, பல்லாயிரக்கணக்கான பேர், 'அட்சயாவின் இதயம் நலமாக வேண்டும்'னு வேண்டிக்கிட்டாங்க. தேவைக்கு அதிகமாகவே பணமும் அனுப்பினாங்க.

ஆனா அந்தப் பணத்தை, வேற யாருக்கும் பயன்படட்டுமேனு சமூக நல அமைப்பிடமே கொடுக்கச் சொல்லிட்டா. அதைவிட, தனது நிகழ்ச்சிக்கு வந்த பணத்தையும் மத்தவங்களுக்கு பயன்படட்டுமேனு கொடுக்கச் சொன்னா. இப்போ, அவளுக்கு இரண்டாவது ஆபரேஷனும் நல்லபடியா முடிஞ்சுட்டு. 'இனி பயம் இல்லை'னு மருத்துவர்கள் சொல்லிட்டாங்க. அவளோட ஒவ்வொரு இதயத் துடிப்பிலும், அவளுக்காக கருணைகாட்டிய அத்தனை பேர்களும் எப்போதும் இருப்பாங்க. 'இப்படி ஒரு பிள்ளை என் வயித்துல பிறந்ததுக்கு, நான் என்ன தவம் செய்திருப்பேன்'னு உருகிப்போய்ட்டேன். இவளைப் பெத்த சந்தோஷம் ஒண்ணே போதும் சார். என் வாழ்க்கையில வேற எதுவும் எனக்கு வேண்டாம்" என்றார் நெக்குருக.