Published:Updated:

’’பெற்றோரிடம் பகிர முடியாதா... அதைச் செய்ய வேண்டாமே..!’’ மனநல மருத்துவர்

’’பெற்றோரிடம் பகிர முடியாதா... அதைச் செய்ய வேண்டாமே..!’’ மனநல மருத்துவர்
’’பெற்றோரிடம் பகிர முடியாதா... அதைச் செய்ய வேண்டாமே..!’’ மனநல மருத்துவர்

`சமூக வலைதளத்தில் சாதக, பாதகங்கள் இருக்கவே செய்கிறது. பல நேரங்களில் அது, பெண்களை அச்சுறுத்தித் தொடரும் ஒரு எமன் போலாகி விடுகிறது. எப்படி போதைக்கு அடிமையானால் அதிலிருந்து மீண்டுவர முடியாமல் கஷ்டப்படுவார்களோ அப்படித்தான் சமூகவலைதளங்களும்! தங்களுடைய ஒரிஜினல் அடையாளத்தை மறைத்து, பெண்களை வீழ்த்தி காரியம் சாதிக்கும் ஏகப்பட்ட கயவர்கள் சமூகவலைதளங்களின் வசம் இருக்கிறார்கள். பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை அவ்வளவு எளிதாக நம்மால் கடந்துவிட முடியாது. அந்தக் கொடூர சம்பவத்திற்கு முக்கிய காரணமே இந்தச் சமூகவலைதளங்கள்தான். பெண்கள் சமூகவலைதளங்களை எப்படிக் கையாள வேண்டும் என அறிவுரை வழங்குகிறார் மனநல மருத்துவர், குறிஞ்சி.

``சமூக வலைதளங்களைப் பொறுத்தவரையில் முகநூலில்தான் அதிக அளவில் பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். முகநூலில் போலியான ஆதாரங்களை வைத்து கணக்குத் தொடர முடியும். சில ஆண்களே, பெண்கள் பெயரில் போலி அக்கவுன்ட்களை மெயின்டெயின் செய்யலாம். இதுபோல பல போலியான தகவல்கள் முகநூலில் சாத்தியம் என்பது இன்றைய தலைமுறை பெண்களுக்குத் தெரிந்த நிதர்சனமான உண்மை. முன்பின் தெரியாத நபர்களை நண்பர்களாகச் சேர்க்காமல் அவர்களுடைய பக்கத்திற்குச் சென்று அவர் யார், உங்களுக்கு அவரைப் பற்றி தெரியுமா அல்லது அவர்கள் உங்களுடைய நண்பர்களின் நண்பர்களா என்பதைப் பரிசோதிக்க வேண்டும். அப்படி இல்லாத முன்பின் தெரியாத நபர்களை நண்பர்களாக்கிக் கொள்வதை தவிர்க்கலாம். தொடர்ந்து மெசேஜ் அனுப்புவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், மெசேஜ் அனுப்பிப் பழகிவிட்டால் ஒருநாள் அவர் அனுப்பவில்லை என்றாலும் ஏன் அனுப்பலைன்னு மனம் தேட ஆரம்பிச்சிடும். யாராக இருந்தாலும் தினசரி ஒரு விஷயம் தொடர்ந்து பண்ணிட்டே இருக்கோம். திடீர்னு ஒருநாள் அதெல்லாம் இல்லைன்னா அந்த இழப்பைக் கடந்து வர முடியாது. அதுதான் மற்றவர்களுடைய பலம். அதனால, ஆரம்பத்திலிருந்தே லிமிட்டோடு பழகுவது நல்லது.

 பர்சனல் விஷயங்களை பொது இடத்தில் பகிரக் கூடாது. தேவையில்லாத புகைப்படங்களை அப்லோடு  செய்வதைத் தவிர்க்கலாம். அதே மாதிரி நீங்க எங்க இருக்கீங்க என்ன பண்றீங்க போன்ற விஷயங்களைப் பொது வெளியில் பகிரத் தேவையில்லையே. என்ன விஷயம் ஷேர் பண்றோம், யார்கிட்ட ஷேர் பண்றோம் எனப் பார்க்க வேண்டும். சமூகவலைதளங்களில் ஒரு பதிவை போடுவதற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை யோசித்துவிட்டுப் போட வேண்டும். ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் சரி, திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் என்றாலும் சரி, பர்சனல் புகைப்படங்களை எக்காரணத்திற்காகவும் பகிரக் கூடாது.  எந்த விஷயத்தை உங்களுடைய பெற்றோர்களிடம் உங்களால் பகிர முடியவில்லையோ அந்த விஷயத்தை நீங்கள் செய்யாமல் இருப்பதே நல்லது. பெற்றோர்கள் நம்மளை கன்ட்ரோல் பண்றாங்க என்று யோசிக்காமல் நாம பண்றது சரியா.. தவறா என யோசித்து எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுங்கள்.

வீட்டிலுள்ளவங்ககிட்ட நாம எங்கே போகிறோம்.. யார்கூடப் போகிறோம் என்பதைக் கண்டிப்பாச் சொல்லணும். யார்கூட பேசிட்டு இருக்கோம் என்பதையும் ஓரளவு பெத்தவங்ககிட்ட சொல்லிடணும். எல்லாமே ரகசியமா இருக்கும் போது அந்த ரகசியமே ஒரு திரில் கொடுக்கும். ஷேர் பண்ணும்போது இது சரி, தவறுன்னு நம்ம ஷேர் பண்றவங்க ஆலோசனை கூறுவாங்க. அதனால கொஞ்சம் யோசிக்க ஆரம்பிப்போம். அவன் தப்பாப் பேசுறான்னு தெரியுறப்பவே அந்த ரிலேஷன்ஷிப்பை அங்கேயே ஸ்டாப் பண்ணிடணும். சாரி கேட்குறாங்க அல்லது இனிமே இப்படி நடக்காதுன்னு சொல்றாங்கன்னு அவங்களை அக்செப்ட் பண்ணிக்கவே கூடாது. எல்லாப் பெண்களுக்கும் இது சரியா போகுமா.. போகாதாங்குற தெளிவு இருக்கும். அந்த டைம்ல அவங்களுக்கு இது சரியா இருக்குமா என்கிற எண்ணம் வந்துட்டாலே அவங்க பேசுறதை நிறுத்திக்கிறது நல்லது.

எந்த இடத்திலாவது யாராவது நமக்கு சப்போர்ட் வருவாங்கன்னு எதிர்பார்க்கக் கூடாது. நமக்கு நாம மட்டும்தான் என்கிற எண்ணம் இருக்கணும். நாம தைரியமா ஒரு பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்கிற எண்ணத்தை உறுதியாக்கிக் கொள்ளணும். எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் நாம வீக்கா இருக்குறோம் என்கிற உணர்வு வரும். எக்ஸாம் ஃபெயிலியரா இருக்கலாம். பிரேக் அப் ஆன நேரமா இருக்கலாம். நாம தனியா ஃபீல் பண்ணும் போது ஆறுதல் சொல்லிட்டு யாராச்சும் வந்தாங்கன்னா அவங்களை அப்படியே ஏத்துப்போம். அது ரொம்ப தவறான விஷயம். பலர் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவங்களுக்கு வேண்டிய காரியத்தைச் சாதிச்சுப்பாங்க. அந்தச் சமயத்தில் ரொம்பவே கேர்புல்லா இருக்கணும். முன்பின் தெரியாத நபர்களிடம் அந்தச் சமயத்தில் பேசாமல் இருப்பது நல்லது. 

தனியா இருந்தால் யார்கூடயாவது சாட் பண்ணத் தோணுதா அதைத் தவிர்த்துட்டு படம் பார்க்குறது, பாட்டு கேட்குறதுன்னு மனசை டைவர்ட் பண்ண பழகிக்கணும். வெளியில் யாரையாவது சந்திக்கப் போகும்போது பெற்றோர்களிடம் சொல்லிட்டுப் போகலாம். அப்படியில்லைன்னா, லைவ் லொக்கேஷனை ஃப்ரெண்ட்கிட்ட ஷேர் பண்ணி ஏதாவது பிரச்னைன்னா ஹெல்ப் பண்ணச் சொல்லலாம். டெக்னாலஜியை ஆபத்தான சூழ்நிலையில் எப்படிக் கையாளலாம்னு தெரிஞ்சுக்கோங்க. முதல் முறை ஒருத்தரைச் சந்திக்கப் போறீங்கன்னா நண்பர்கள் யாரையாவது கூட்டிட்டுப் போங்க. பிரச்னை எதுவும் ஏற்படாமல் தப்பிக்கவும் சிறந்த வழியாக இருக்கும்.

ஏதாவது பிரச்னை வருதுன்னா பெற்றோர்கள், ஆசிரியர்கள்கிட்ட ஹெல்ப் கேட்கலாம். இல்லைன்னா, நிறைய ஹெல்ப் ஆப் இருக்கு. ஆன்லைன் மூலமாகவே கம்ப்ளைன்ட் பண்ணலாம். ஒரு தடவை பயந்து அவங்க சொல்றதை செய்ய ஆரம்பிச்சோம்னா அது தொடர்ந்துட்டேதான் போகுமே தவிர முடிவடையாது. ஓகே! இந்தப் பிரச்னையை நாம எப்படிக் கடந்து போகலாம்னு யோசிக்கிறதுதான் நல்லது. `பயம்' என்கிற ஆயுதம் மூலமா நம்மளை வீழ்த்த நினைக்கிறவங்களை எதிர்த்து போராடுறது ரொம்பவே முக்கியம்.