900 விவசாயிகளுக்கு மறுவாழ்வு... மஞ்சள் மூலம் சாதித்த மேகாலயா ஆசிரியர்! | 900 farmers got life from turmeric with the help of one teacher

வெளியிடப்பட்ட நேரம்: 19:26 (16/03/2019)

கடைசி தொடர்பு:20:15 (16/03/2019)

900 விவசாயிகளுக்கு மறுவாழ்வு... மஞ்சள் மூலம் சாதித்த மேகாலயா ஆசிரியர்!

மேகாலயாவில் உள்ள மேற்கு ஜெயின்டியா மலைகளில் பல ஆண்டுகளாக லாகாடொங் மஞ்சள் ஏன் உற்பத்தி செய்யப்படவில்லை என்ற கேள்விக்குப் பின்னால் ஒரு கதையும் இருக்கிறது.

900 விவசாயிகளுக்கு மறுவாழ்வு... மஞ்சள் மூலம் சாதித்த மேகாலயா ஆசிரியர்!

மிகவும் உக்கிரமான கோடைக்காலம் அது. அந்தக் காலகட்டத்தில் மேகாலயாவிலுள்ள முலிச் (Mulieh) கிராமத்தைச் சேர்ந்த டிரினிட்டி சாயூ (Trinity Saioo) எனும் பெண்மணி வறுமையால் இருக்கும் தனது குடும்பத்தைப் பாதுகாக்க விவசாயத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறார். அப்பகுதியில் மஞ்சள் விவசாயம் பிரதானம் என்பதால் மஞ்சள் பயிரிட ஆரம்பிக்கிறார். அந்த முயற்சிதான் மேகாலயாவில் இருக்கும் 900 - க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வை மாற்றப்போகிறார் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்போது சாயூ ஒரு ஆசிரியரும்கூட.

மேகாலயா பெண்மணி

16 ஆண்டுகளுக்கு முன்னர் சாயூ மஞ்சள் வளர்க்க ஆரம்பித்தபோது, மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா மலைகள் (West Jaintia Hills) மாவட்டத்தில், மூன்று வகையான மஞ்சள் பயிரிடுவதைக் கவனித்தார். அந்த மூன்று வகை மஞ்சள்களிலும் குர்குமின் வேதிப்பொருள் குறைவாக இருப்பதைத் தெரிந்துகொண்டார். சந்தையில் அது மாதிரியான மஞ்சளுக்கு விலை குறைவாக இருப்பதையும் கவனிக்க ஆரம்பிக்கிறார். இதைத் தவிர்க்க முன்னோர்கள் பயிரிட்ட மஞ்சள் ரகங்களைத் தேட ஆரம்பிக்கிறார். அப்போது லாச்சின் ( lachein) என்ற பழைமையான மஞ்சள் ரகத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு தேட ஆரம்பிக்கிறார். குர்குமின் வேதிப்பொருள் அதிகமாகக் கிடைக்கும் லாச்சின் வகையில் மகசூல் குறைவாகக் கிடைக்கிறது. ஒரு லாச்சின் வகை மஞ்சள் செடியில் குர்குமின் அளவு 5 சதவிகிதமாக இருக்கிறது. குர்குமின் வேதிப்பொருளானது புற்றுநோய்க்கு மருந்தாகும் ஒரு வேதிப் பொருளாகும். 

லாச்சினை தேடியவருக்கு, அதைவிட அதிகமான குர்குமின் வேதிப்பொருள் கொண்ட லாகாடொங் (lakadong) வகை மஞ்சள் கிடைக்கிறது. இது லாச்சின் வகை மஞ்சளைவிட 2 மடங்கு அதிகமான குர்குமின் வேதிப்பொருள் கொண்டுள்ளதைத் தெரிந்துகொள்கிறார் சாயூ. அதைக் கொண்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தபோது, அக்கம்பக்கம் இருக்கும் கிராம மக்களும் சாயூவைத் தேடி வந்து லாகாடொங் மஞ்சளைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கின்றனர். இதையடுத்து சுற்றியுள்ள கிராமத் தலைவர்களும் சாயூவை தங்கள் கிராமத்துக்கு ஆலோசனை கொடுக்க அழைக்கின்றனர். அப்போது சாயூ ஆரம்பித்த பயணம் 900-க்கும் மேற்பட்ட மஞ்சள் விவசாயிகள் வளரும் வரைக்கும் கொண்டு வந்திருக்கிறது.

பல ஆண்டுகளாக லாகாடொங் மஞ்சள் ஏன் உற்பத்தி செய்யப்படவில்லை என்ற கேள்விக்குப் பின்னால் ஒரு கதையும் இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர், பெரும்பாலான விவசாயிகள் அப்போது ஆரம்பிக்கப்பட்ட சுரங்க வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். விவசாயத்தைவிடச் சுரங்க வேலைகளில் வருமானம் அதிகமாகக் கிடைத்ததுதான் இதற்குக் காரணம். இதனால் லாகாடொங் மஞ்சள் விவசாயம் கைவிடப்பட்டது. காலப்போக்கில் லாகாடொங் மஞ்சளும் மறைந்துபோனது. 2014-ம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சுரங்கத்துக்குத் தடை விதித்தது. அதனால் மீண்டும் விவசாயிகள் விவசாயத்துக்குத் திரும்பினர். ஆனால், லாகாடெங் உற்பத்தி பற்றி விவசாயிகளுக்குப் பெரிதளவில் தெரிந்திருக்கவில்லை. அதனால் சாதாரண மஞ்சளைப் பயிரிட ஆரம்பித்தனர். சுரங்க வேலையைவிடக் கிடைத்த குறைந்த வருமானம் அவர்களுக்குப் போதவில்லை. அவர்களின் குறையைக் கேட்ட சாயூ அரசு அதிகாரிகளின் உதவியை நாடினார்.

மேகாலயா

மஞ்சள் சாகுபடி ஆரம்பிக்கும் காலகட்டத்துக்கு முன்னர், சாயூ மேகாலயாவின் தோட்டக்கலைத்துறையில் பயிற்சி எடுத்தார். தனது கிராமத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு, நறுமணப் பொருள்கள் துறையினருடன் இணைந்து, லாகாடொங் மஞ்சள் விதைக் கிழங்குகளுக்கு மானியம் கிடைக்க உதவினார். மேலும், விவசாயிகளுக்கு அதிகமான மகசூலை இயற்கை முறையில் பெறுவது பற்றிய பயிற்சிகளையும் தோட்டக்கலைத்துறை கொடுத்தது. கூடவே இயற்கை முறையில் விளைவிப்போருக்கு இயற்கை சான்றிதழ்களையும் கொடுக்கிறது. விவசாயிகள் விவசாயம் செய்ய ஆரம்பித்த பின்னர், பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகமாக உபயோகித்ததால் செலவு கூடியிருக்கிறது. தோட்டக்கலைத்துறை அறிவுறுத்திய மாட்டுச் சாணம், மாட்டு சிறுநீர் மற்றும் மண்புழு உரங்களை விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கினர். இவை பூச்சிகளின் தாக்கத்திலிருந்து காப்பது மட்டும் அல்லாமல், மண்ணை வளப்படுத்தவும் உதவியது. இதுதவிர, பயிர்களின் வளர்ச்சியையும் தரத்தையும் இயற்கை வேளாண்மை முறை கூட்டிக் கொடுத்தது. 

இப்போது விவசாயிகளுக்கு அடுத்த சவால். உற்பத்தி செய்த பொருளைச் சந்தைப்படுத்த முடியாமல் தவித்தனர். பெரும்பாலான விவசாயிகள் லாகாடொங் மஞ்சளை உற்பத்தி செய்ததால் விதைகளுக்குச் சந்தையில் டிமாண்ட் அதிகமானது. விதைக் கிழங்குகளின் விலையும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டது. அதனால் மாநில விவசாயத்துறை அதிகாரிகள் விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினர். அதையும் பெற்றுக் கொடுத்தவர், சாயூதான். உற்பத்தியுடன் நிறுத்தினால் போதுமா என்று யோசித்தார் சாயூ. அதன் பின்னர், ஒரு குழு ஆரம்பித்து, அதன்மூலம் மதிப்புக் கூட்டி விற்பனை செய்து அதிகமான வருமானம் பெறுவதை நோக்கி நகர ஆரம்பித்தார். அதனால் மாநில விவசாயத்துறையின் துணையுடன் ஒரு சிறிய சேமிப்புக் கிடங்கை உருவாக்கி, அதில் பெண்களுக்கு வேலையும் கொடுத்தார். அங்கு மஞ்சளைப் பொடியாக்குவது மாதிரியான மதிப்புக் கூட்டல் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தனர் பெண்கள். இவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு மூலம் கேரளா, கர்நாடகா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு லாகாடெங் மஞ்சளை ஏற்றுமதி செய்து வருகிறார். 

மேகாலயா

சாயூவின் கிராமங்களிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் சுமார் 900-க்கும் அதிகமான விவசாயிகள் லாகாடெங் மஞ்சளைப் பயிரிட்டு வருகின்றனர். வேளாண்மை ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலும் குர்குமின் அதிகமான மஞ்சள் கொண்ட பகுதியாக இப்பகுதியைக் குறிப்பிடுகிறது. இப்போது லாகாடெங் மஞ்சள் 1,000 ஹெக்டேர் பரப்பளவில் விளைவிக்கப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் 300 டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல விவசாயிகளின் ஒருமித்த கைகளும் சாயூவைக் காட்டுகிறது. ஆனால், இவரோ 2023-ம் ஆண்டுக்குள் 50,000 டன் மஞ்சளை ஏற்றுமதி செய்வதை லட்சியமாகக் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். என்னதான் ஆசிரியையாக வாழ்வை ஆரம்பித்தாலும், விவசாயம்தான் தனது முதன்மையான தொழில் என்பதில் உறுதியுடன் இருக்கிறார் சாயூ. தனது கிராமங்களில் சுற்றியுள்ள மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கூடவே பாடமும் எடுத்து வருகிறார். 

தோட்டக்கலைத்துறை உற்பத்தியில் சிறந்து விளங்கியதற்காக மத்திய வேளாண் அமைச்சகம் சிறந்த விவசாயிக்கான விருதை சாயூவுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close