உஷார்... இந்த 12 காரணங்களுக்காக மோட்டார் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் ரத்தாகலாம்! | 12 Reasons for your claim to get rejected

வெளியிடப்பட்ட நேரம்: 19:18 (18/03/2019)

கடைசி தொடர்பு:19:18 (18/03/2019)

உஷார்... இந்த 12 காரணங்களுக்காக மோட்டார் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் ரத்தாகலாம்!

சம்பவம் 1:

காஞ்சிபுரத்தில் வசிக்கும் நண்பர் ஒருவரின் செலெரியோ கார் தொலைந்துவிட்டது. தொலைந்த அந்த கார் மோதி ஒருவர் இறந்துவிட்டார். கார் இன்ஷூர் செய்யப்பட்டிருந்ததால், இறந்தவரின் குடும்பத்தினர் வாகனத்தின் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டுள்ளார்கள். மோட்டார் இன்ஷூரன்ஸ்திருடப்பட்ட கார் என்பதால் நிறுவனம் மறுத்துவிட்டது. சில மாதங்கள் நடைபெற்ற இந்த வழக்கில், '10 லட்சம் ரூபாய் பணத்தை, காரைத் திருடிய திருடன்தான் கொடுக்க வேண்டும். மோட்டார் இன்ஷூரன்ஸ் நிறுவனமோ, காரின் சொந்தக்காரரோ தரத் தேவையில்லை' என்று சொல்லிவிட்டது நீதிமன்றம்.

சம்பவம் 2:

இன்ஷூரன்ஸ்நம் வாசகர் ஒருவர், 6.5 லட்சம் ரூபாய் காரை EMI-ல் வாங்கியுள்ளார். வீட்டில் பார்க்கிங் இல்லை என்பதால் வீட்டுக்கு வெளியே நிறுத்தியுள்ளார். கார் திருடுபோய்விட்டது. காவல் துறையினர், புகார் கொடுத்து மூன்று மாதம் கழித்து Non-traceable என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், 1 லட்சம் ரூபாய்க்குமேல் வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் தொகை தர வேண்டும் என்றால், கோர்ட் ஆர்டர் தேவை என்று இன்ஷூரன்ஸ் நிறுவனம் சொல்ல, கோர்ட்டில் நின்றுள்ளார்கள். "மூணு மாசத்துல எப்படி கார் கிடைக்கலனு சொல்றீங்க... திரும்பவும் காரைத் தேடுங்க" என வழக்கை மூன்று மாதம் தள்ளிவைத்துவிட்டது. ஓலா, ஊபெரில் சம்பாதிக்கலாம் என கார் வாங்கியவருக்கு, கடைசியில் காரும் கிடைக்கவில்லை; இன்ஷூரன்ஸ் தொகையும் கிடைக்கவில்லை. இது போதாதென மாதா மாதம் ஃபைனான்ஸ் கம்பெனிக்கும் பணம் கட்டிக்கொண்டிருக்கிறார்.

இந்த இரண்டு சம்பவங்களும், மோட்டார் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடாது என்பதற்கு உதாரணம். முடிந்தவரை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்மை குறைக்கவும், க்ளெய்மை ரத்துசெய்யவும் முயல்வார்கள். எந்தெந்தக் காரணங்களுக்காக உங்களின் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் ரத்தாகலாம் எனத் தெரிந்துவைத்திருப்பது அவசியம். மோட்டார் இன்ஷூரன்ஸ் சார்ந்த வழக்கறிஞர்களிடம் விசாரித்தவரை, உங்கள் க்ளெய்ம் ரத்தாக பொதுவான சில காரணங்கள் இவை.

Motor Vehicle Insurance

1. விபத்து நடைபெறும்போது உங்களிடம் ஓட்டுநர் உரிமம் இருப்பது அவசியம். ஒருவேளை லைசென்ஸ் இல்லையென்றால், உங்களின் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் தொகை குறைக்கப்படும். கமர்ஷியல் வாகனம் ஓட்டுபவர்களிடம் கமர்ஷியல் லைசென்ஸ் இல்லை என்றால், அவர்களுக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்காது. ஓட்டுநர் உரிமம் காலாவதியாகாமல் உரிய நிலையில் இருக்க வேண்டும். 

2. 18 வயது பூர்த்தியாகாதவர்கள் கார் அல்லது பைக்கை ஓட்டி விபத்து ஏற்படுத்திவிட்டால், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்ய முடியாது. ஆனால், சில வழக்குகளில் நீதிமன்றம், பாதிக்கப்பட்டவரின் நிலையைக் கருத்தில்கொண்டு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கான தொகையைக் கொடுத்துவிட்டு, அதை விபத்து ஏற்படுத்திய நபரிடம் பெற்றுக்கொள்ளும்படி தீர்ப்புகள் வழங்கியுள்ளன.

வாகன காப்பீடு

3. ஓவர்லோடு என்றால் இன்ஷூரன்ஸ் கிடையாது. அதாவது, 4 பேர் பயணிக்கவேண்டிய வாகனத்தில் 6 பேர் பயணிக்கக் கூடாது. ஓவர்லோடினால்தான் விபத்து நடந்தது என நிரூபித்துவிட்டால், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்காது.  

4. LLR வைத்திருப்பவர்கள், கார் ஓட்டும்போது அவருடன் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் நபர் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், இன்ஷூரன்ஸ் கிடையாது.

5. குடிபோதையில் வாகனம் ஓட்டினாலும், சரியான மனநிலை இல்லாதவர்கள் வாகனம் ஓட்டினாலும் உங்கள் க்ளெய்ம் ரத்தாகிவிடும்.

6. டாடா ஏஸ், லாரி, டிரெய்லர் போன்ற கமர்ஷியல் வாகனங்களில் ஆள்களை ஏற்றிச்சென்றாலோ, கமர்ஷியல் காரணங்களுக்காக கார் வாங்கிவிட்டு, அதில் பொருள்களை ஏற்றிச்சென்றாலோ இன்ஷூரன்ஸ் கிடையாது. White Board வாகனத்தை அலுவலக கார் எனச் சொல்லி கமர்ஷியலுக்காகப் பயன்படுத்தினாலும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் ரத்தாகிவிடும். 

வாகன காப்பீடு ரத்தாகலாம்

7. FC இல்லாத வாகனங்களுக்கும், கமர்ஷியல் பேட்ஜ் போடாத வாகனங்களுக்கும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடையாது. நேஷனல் பர்மிட் இல்லாத வாகனங்கள், வெளி மாநிலங்களில் விபத்தில் சிக்கினால் க்ளெய்ம் கிடைக்காது.

8. விபத்து ஏற்பட்ட இரண்டு நாள்களுக்குள் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்ய வேண்டும். க்ளெய்ம் செய்யாததற்கு சரியான காரணம் இருந்தால் பிரச்னையில்லை. ஆனால், அலட்சியத்தன்மை என்றால், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைப்பதில் சிக்கல் உண்டாகும்.

9. காரில் கூடுதலாக பம்ப்பர் பொருத்துவது, அதிக லைட்டுகள் பொருத்துவது போன்றவற்றை செய்யக் கூடாது. மேலும், பைக் மற்றும் காரில் செய்யப்பட்டுள்ள மாடிஃபிகேஷன்கள் RC புக்கில் பதிவுசெய்யவில்லை என்றால், குறைவான தொகைதான் கிடைக்கும். பல வழக்குகளில் நீதிமன்றம், ’விபத்தை நீங்களே அழைக்கிறீர்கள்’ என்று சொல்லி, மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார்களுக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்மை குறைத்துள்ளது.

இன்ஷூரன்ஸ் ரத்தாக காரணம் என்ன10. நோ பார்க்கிங்கில் இருக்கும் வாகனத்துக்கு சேதாரம் ஏற்பட்டால், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் குறைவாகத்தான் கிடைக்கும். இதை Contributor negligence என்கிறார்கள். 

11. இயற்கைப் பேரிடரின்போது கமர்ஷியல் வாகனங்கள் சேதமாகிவிட்டது என்றால், வாகனத்துக்கு மட்டுமே இன்ஷூரன்ஸ் தொகை தரப்படும். வாகனத்தில் ஏற்றப்படும் சரக்குகளுக்குத் தனியாக இன்ஷூரன்ஸ் போட வேண்டும்.

12.  காரில் CNG கிட் பொருத்துவதற்கு முன், RTO அலுவலகத்தில் பர்மிட் வாங்கி, பிறகு RC புக்கில் Fuel Change என சீல் அடிக்க வேண்டும். உங்கள் காருக்கு இன்ஷூரன்ஸ் இருக்கிறது என்றால், CNG கிட் பொருத்திய பிறகு புதிய இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும். இன்ஷூரன்ஸில் CNG கிட் பொருத்தியிருப்பதைக் குறிப்பிடுவது முக்கியம். பழைய இன்ஷூரன்ஸை வைத்து க்ளெய்ம் செய்ய முடியாது.


டிரெண்டிங் @ விகடன்