இனி விபத்து நடந்ததைக்கூட எளிதாக அறிந்துகொள்ளலாம்! - லேட்டஸ்ட் அப்டேட்டுடன் கூகுள் மேப் | Google Maps update warns you of Accident

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (20/03/2019)

கடைசி தொடர்பு:12:55 (20/03/2019)

இனி விபத்து நடந்ததைக்கூட எளிதாக அறிந்துகொள்ளலாம்! - லேட்டஸ்ட் அப்டேட்டுடன் கூகுள் மேப்

கூகுள் மேப் பயன்படுத்தி பயணிக்கும்போது நமக்கு முன்னதாக ஏதேனும் விபத்து ஏற்பட்டிருந்தால் அதை அறிவிக்கும் புதிய அப்டேட்டை கூகுள் மேப் அறிமுகம் செய்துள்ளது. 

கூகுள் மேப்

ஸ்மார்ட்போனில் அனைவருக்கும் அவசியமாகத் தேவைப்படும் ஆப்களில் ஒன்றாகக் கூகுள் மேப் மாறிப் பல காலம் ஆகிறது. எந்த ஊராக இருந்தாலும் கூகுள் மேப் துணையிருந்தால் வழியைக் கண்டுபிடித்து விடலாம். பெரும்பாலும் கூகுள் மேப் சரியான வழியையே காட்டுவதால் அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இதனால் கூகுள் மேப் செயலில் தங்களால் முடிந்த வரை புதுப் புது அப்டேட்டுகளை வெளியிட்டு அசத்தி வருகிறது அந்த நிறுவனம். முன்னதாக கூகுள் மேப்பில் 3டி வசதி, லைவ் லொகேஷன் ஷேர் போன்றவை அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. தற்போது பயனாளர்களின் வசதிக்காக புதிய அசத்தலான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம்.

அதன்படி நாம் கூகுள் மேப் பயன்படுத்தி பயணிக்கும்போது நம் வழியில் ஏதேனும் விபத்து நடந்திருந்தால் அதை முன்னதாகவே அறிவித்துவிடும். ஒரு பயனாளர் தன் பகுதியில் விபத்து நடந்துள்ளது என கூகுளில் தெரிவித்தால் அதைக்கொண்டு மற்ற பயனாளர்களுக்கு விபத்து செய்தியைக் கொண்டு சேர்க்கும். மேலும், அவர்கள் பயணிக்க வேறு வழியைக் காட்டும். இதன் மூலம் விபத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். 

இதையடுத்து, சாலையில் அதிக வேகமாகச் செல்பவர்களை கண்காணிக்கப் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களையும் கூகுள் மேப் அடையாளம் கண்டு சொல்லிவிடும். இதனால் பயனாளர்களை சீரான வேகத்தில் பயணிக்கவைக்க முடியும் என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இந்த வசதி ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஐ.ஓ.எஸ் பயனாளர்களுக்கும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.