`இனி அப்படி நடக்க வாய்ப்பே இல்லை!'- உணவு பேக்கிங்கில் ஜொமோட்டோ செய்த மாற்றம் | Zomato introduced new packing method to overtake the food tampering issue

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (22/03/2019)

கடைசி தொடர்பு:12:40 (22/03/2019)

`இனி அப்படி நடக்க வாய்ப்பே இல்லை!'- உணவு பேக்கிங்கில் ஜொமோட்டோ செய்த மாற்றம்

ஜொமோட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி எக்ஸ்க்யூட்டிவ் ஒருவர் வாடிக்கையாளருக்கு கொண்டு சென்ற உணவை எடுத்து உண்ணும் வீடியோ கடந்த மூன்று மாதத்துக்கு முன்னர் ஆன்லைனில் வைரலானது. இந்த வீடியோ மக்களிடேயே பெரும் கொந்தளிப்பை  ஏற்படுத்தியது. இதனால் ஜொமோட்டோ நிறுவனம் அந்த உணவைச் சாப்பிட்ட ஊழியரை அடையாளம் கண்டு, பணியிலிருந்து நீக்கியது.  

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஜொமோட்டோ, இதுபோன்ற பிரச்னைகள் இனி வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தது. தற்போது அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். சாப்பாடு பொட்டலங்களைத் திறக்கமுடியாத வகையில், புதிய பேக்கிங் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய பேங்கிங் முறை பாலிமரால் செய்யப்பட்ட ஒரு திரையைக் கொண்டுள்ளது. இது இரண்டு விதமாக உள்ளது. அதாவது சிறிய மற்றும் பெரிய உணவு பார்சல்களை  பேக்கிங் செய்யும் முறையில் அமைந்துள்ளது.

ஜொமோட்டோ

உணவைத் தயார் செய்து டெலிவரி நபரிடம்  தருவதற்கு முன்னர் உணவகத்தில் வைத்து இந்தப் புதிய பேக்கிங் மற்றும் சீல்  செய்யப்படுகிறது. இதனால் டெலிவரி எக்ஸ்க்யூட்டிவ் நபர்கள் வாடிக்கையாளரிடம் பார்சல்களைத் திறக்கப்படாத நிலையில், டெலிவரி செய்ய வேண்டும். பேக்கிங் சீலை வாடிக்கையாளர் கிழித்த பின்னர்தான் உணவை உண்ண முடியும். மேலும், உணவுப் பொட்டலங்கள் திறந்து காணப்பட்டால் உடனடியாக தங்களுக்குப் புகார் அளிக்கும்படி ஜொமோட்டோ வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜொமோட்டோவின் தலைமையிடமான குருகிராமில் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையின் வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் 10 நகரங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்தியாவில் முதற்கட்டமாக டெல்லி என்.சி.ஆர், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், சண்டிகர், நாக்பூர் மற்றும் வதோதரா போன்ற நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

Zomato

அடுத்தகட்டமாக ஜொமோட்டோ சேவை இயங்கும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சிலி, செக் குடியரசு, இந்தோனேசியா, அயர்லாந்து, இத்தாலி, லெபனான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்ச்சுக்கல், கத்தார், சுலோவாக்கியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, அரபு அமீரகம், இங்கிலாந்து, மலேசியா உட்பட 180 நகரங்களிலும் இந்தப் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தின் மூலம் சுமார் 5,000 உணவகங்கள் இனி சீல்டு பேக்குகளில் உணவை வழங்கவுள்ளனர்.