Published:Updated:

``கீத்து பின்னி ஊருக்கெல்லாம் நிழல் தர்றேன். என் வாழ்க்கை அனல் அடிக்குது!’’ - பார்வைத்திறனற்ற குருசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``கீத்து பின்னி ஊருக்கெல்லாம் நிழல் தர்றேன். என் வாழ்க்கை அனல் அடிக்குது!’’ - பார்வைத்திறனற்ற குருசாமி
``கீத்து பின்னி ஊருக்கெல்லாம் நிழல் தர்றேன். என் வாழ்க்கை அனல் அடிக்குது!’’ - பார்வைத்திறனற்ற குருசாமி

"`ஓட்டு போட்டால், உங்களுக்கு கல்லு வீடு கட்டித் தருவோம்'னு வாய் கூசாமச் சொல்வாங்க. நாங்களும் மனுஷங்கதானே! அவங்க சொல்றதை நம்பி யாரோ ஒருத்தருக்கு ஓட்டு போடுவோம். ஆனா, யாரும் அதுக்கான சின்ன முயற்சிகூட எடுக்கிறதில்லை."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

​​​​​இந்த உலகம் விசித்திரமானது. கோடிகளில் புரளும் மேல்தட்டுவர்க்கம், பணத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் கட்டுக்கட்டாகப் பதுக்கிவைத்துக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம், ஏழ்மையின் விளிம்பில் இருக்கும் ஏராளமான மக்கள், அண்டி வாழச் சிறு குடிசைகூட இல்லாமல் தத்தளிக்கிறார்கள். வறுமைக்கோட்டைத் தாண்டவிடாமல், அவர்களை வறுமையிலேயே உழலவைப்பதுதான் காலம் செய்யும் கோலம். அப்படி ஒரு வம்பாடு வாழ்க்கை வாழ்பவர்தான் குருசாமி. பார்வைத்திறன் இல்லாமல் தத்தளிக்கும் அவர், கரூர் நகரத்தையொட்டி ஓடும் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள படிக்கட்டுத்துறைப் பகுதியைச் சேர்ந்தவர். கீற்று பின்னுவதுதான் அவருக்குத் தொழில்.

``ஊருக்கெல்லாம் கீத்து பின்னி கொடுத்து நிழல் தர்றேன். ஆனா, நான் ஒண்ட சொந்தமா ஒரு குடிசை இல்லை. காலம் முழுக்க உழைச்சும் ஒரு அடி நிலம்கூட மிச்சமில்லை’’ என்று தொண்டையை இறுக்கும் கஷ்ட ஜீவனம் தரும் அல்லலை மென்று விழுங்கியபடி பேசுகிறார் குருசாமி. 

``எனக்கு பூர்வீகம் இதே ஊர்தான். வயசு 75. எங்கப்பா காலத்துலயிருந்து கீத்து பின்றதுதான் குலத்தொழில். ஆனா, சொந்தமா காக்காணி நிலம்கூட இல்லை. நான் அதிகம் படிக்கலை. அதனால, 10 வயசுல கீத்து பின்ற தொழிலுக்கு வந்துட்டேன். 20 வயசுல எனக்கு பார்வதியைக் கட்டிவச்சாங்க. அடுத்தடுத்து, மூணு பையன்கள், ஒரு பொண்ணுன்னு பிள்ளைங்க பொறந்தாங்க. நானும் என் பொண்டாட்டியும் இந்தக் கீத்தைப் பின்னி, அதுல கிடைக்கிற சொற்ப வருமானத்துலதான் பிள்ளைங்களை ஆளாக்கினோம். நாங்க வயித்தக்கட்டி வாயைக்கட்டி சேர்த்த பணத்துல, அதுங்களை நல்லபடியா வளர்த்தோம். காலகாலத்துல ஒவ்வொரு பிள்ளைக்கா கல்யாணம் பண்ணிவச்சோம். 40 வயசுல, எனக்குத் திடீர்னு கண்ணு மங்கலா தெரிய ஆரம்பிச்சது. அடுத்த ரெண்டு வருஷத்துல ரெண்டு கண்ணும் சுத்தமா பார்வைத்திறன் இல்லாமப்போயிட்டு. அரசாங்க ஆஸ்பத்திரியில, `இங்க, உங்க கண்ண சரிபண்ற வசதி இல்லை’னு சொல்லிட்டாங்க. 

தனியார் ஆஸ்பத்திரிகளுக்குப் போகலாம்னா, டாக்டர்களுக்கு பீஸ் கொடுக்கக்கூட என்கிட்ட காசு இல்லை. `நமக்கு வாய்ச்சது அவ்வளவுதான்’னு மனசைக் கல்லாக்கிக்கிட்டேன். `கண்ணுபோனா என்ன, கண்ணுக்குக் கண்ணா நாலு பிள்ளைங்க இருக்கே’னு என்னை நானே ஆறுதல் படுத்திக்கிட்டேன். ஆனா, `முடமான மனுஷன் எதுக்கு?’னு எல்லாப் பிள்ளைகளும் என்னையும் என் பொண்டாட்டியையும் தனியா தவிக்கவிட்டுட்டு, தனித்தனி குடும்பமா போயிட்டுங்க.

என் மனைவிகூட அழுது புரண்டா. ஆனா, நான் கண் கலங்கலை. ஏன்னா, எங்களாலதான் அவங்க பிள்ளைங்க. அவங்களால நாங்க இல்லை. இதை நினைச்சு மனசைத் தேத்திக்கிட்டேன். `கண்ணுபோனா என்ன... கீத்து பின்ற தொழில் செஞ்சு, ரெண்டு பேரும் வயித்தைக் கழுவிக்கலாம்'னு கீத்து பின்ன ஆரம்பிச்சுட்டோம். பார்வை இல்லாம ஆரம்பத்துல கீத்து பின்ன கஷ்டமா இருந்துச்சு. ஆனா, பிள்ளைங்க கொடுத்ததைவிடவா கீத்து பின்றது பொல்லாத கஷ்டம்? மெள்ள மெள்ள பழையபடி கீத்து பின்னப் பழகிட்டேன். `உனக்கு நான்... எனக்கு நீ'னு நானும் என் பொண்டாட்டியும் இந்தா... அந்தான்னு 30 வருஷத்தை ஓட்டிட்டோம். 

மத்த கீத்துப் பின்றவங்களோடு என் பொண்டாட்டியும் கீத்து பின்ன தேவைப்படுற மட்டைகளை வாங்கப் போவா. 10 கிலோமீட்டர் தூரத்துல உள்ள செட்டிபாளையம், அப்புபாளையம்னு தென்னந்தோப்புகள் இருக்கிற பகுதிகளுக்குப் போவாங்க. தேவைக்கு ஏற்ப, கையைக் கடிக்காத தொகைக்குப் பேரம் பேசி, மட்டைகளை வாங்கிக்குவாங்க. அதை ஆட்டோவுல இங்க ஏத்திக்கிட்டு வருவாங்க. அந்த மட்டைகளை ஒரு நாள் முழுக்க, அமராவதி ஆத்துல கிடக்கிற சாயப்பட்டறைக் கழிவுத் தண்ணியில ஊறப்போடுவோம். மறுநாள் அதை எடுத்து, ஒவ்வொரு மட்டையையும் ரெண்டா வகுந்து, கீத்தா பின்னுவோம். அங்க ஒரு மட்டையை ஒன்றரை ரூபாய்னு காசு கொடுத்து வாங்கிட்டு வருவாங்க. அதை நாங்க பின்னினா, கீத்து ஒண்ணு இரண்டரை ரூபாய்க்கு விலைபோகும். நடுவுல ஆட்டோ செலவு, மத்த செலவுகளைக் கூட்டிக் கழிச்சு பார்த்தா, லாபம்னு பெருசா ஒண்ணும் இருக்காது. நான் தினமும் 50 கீத்து வரை பின்னுவேன். 10 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாளைக்கு 200 கீத்துகூடப் பின்னுவேன். 

இப்போ வயசாயிடுச்சுல்ல, உட்கார்ந்தா எழுந்திருக்க முடியலை... எழுந்தா உட்கார முடியலை. மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குது. முட்டிவலி, கால்வலி, நெஞ்சுவலின்னு எல்லாப் பிரச்னைகளும் இருக்கு. மாசம் வருமானம் 2,000 ரூபாயைத் தாண்டாது. அதுல வாடகை 1,000 ரூபாய் போயிரும். மீதம் உள்ள ஆயிரத்தை வெச்சுதான் நாங்க மாசம் முச்சூடும் சோறு சாப்பிடணும்; மாத்திரை, மருந்துகள் வாங்கணும். ரேஷன் அரிசி மட்டும் இல்லைன்னா, எங்க பொழப்பு சீரழிஞ்சுபோயிருக்கும். அதுவும் இப்போ 5 கிலோதான் தர்றாங்க.

எங்க பொழப்பு முன்ன மாதிரியில்லை தம்பி. முன்னாடி குடிசை வீடுகள் அதிகம் இருந்துச்சு. வீடுகள்ல நடக்குற நல்லது கெட்டதுகளுக்கு பந்தல் போடுறதுன்னாகூட, கீத்துலதான் போடுவாங்க. ஆனா, குடிசை வீடுகளெல்லாம் இப்போ மச்சு வீடுகளாயிடுச்சு. போதாக்குறைக்கு, பந்தல் போட சாமியானா வந்துட்டு. நிரந்தரமா பந்தல், கொட்டகை போட, இரும்பு ஷீட்களையும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்களையும் பயன்படுத்துறாங்க. இதனால், எங்க பொழப்புல மண் விழுந்துட்டு. காச போட்டு மட்டைகளை வாங்கி, அதை நாத்தம்புடிச்ச சாயப்பட்டறைக் கழிவுநீரில் ஊறவெச்சு, எடுத்துப் பின்னி வெச்சுக்கிட்டு, அந்தக் கீத்துக்கட்டுகளை வாங்க ஆள் இல்லாம நாங்க அப்பப்போ அவஸ்தைப்படுவோம்.

வெயில் காலத்துல கீத்துகள் கொஞ்சம் விற்பனை ஆகும். எங்க தொழிலையும் எங்களையும் யாருமே மதிக்கிறதில்லை. ஒவ்வொரு தேர்தல்லயும் எங்ககிட்ட ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகள், `ஓட்டு போட்டால், உங்களுக்கு கல்லு வீடு கட்டித் தருவோம்'னு வாய் கூசாமச் சொல்வாங்க. நாங்களும் மனுஷங்கதானே! அவங்க சொல்றதை நம்பி யாரோ ஒருத்தருக்கு ஓட்டு போடுவோம். ஆனா, யாரும் அதுக்கான சின்ன முயற்சிகூட எடுக்கிறதில்லை. அவ்வளவு ஏன், இப்போ மத்திய - மாநில அரசுகள் ஏழைபாழைங்களுக்கு 2,000 ரூபாய் தர்றாங்களாமில்ல. அதுக்குகூட எங்க பெயர்களைச் சேர்க்கலை. ஏன்னா, அரசாங்கத்தைப் பொறுத்தமட்டுல நாங்க வருமானவரி கட்டுற பணக்காரங்கபோல. அவங்களா வந்து கொடுத்தாக்கூட, அந்தக் காசு வேணாம். எங்களுக்கு கைகால் நல்லா இருக்கு. உழைச்சு சாப்பிட மனசுல வைராக்கியம் இருக்கு. எல்லாத்துக்கும்மேல கடவுள் ஒருத்தன் இருக்கான் தம்பி’’ என்றார் நம்பிக்கை மிளிர.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு