`பியர் க்ரில்ஸை நீங்க காப்பாத்துவீங்களா... கைவிடுவீங்களா..!?’ நெட்ஃப்ளிக்ஸின் புது இன்ட்ராக்ட்டிவ் அனுபவம் | Netflix announces new interactive series with Bear Grylls

வெளியிடப்பட்ட நேரம்: 09:32 (23/03/2019)

கடைசி தொடர்பு:18:31 (01/04/2019)

`பியர் க்ரில்ஸை நீங்க காப்பாத்துவீங்களா... கைவிடுவீங்களா..!?’ நெட்ஃப்ளிக்ஸின் புது இன்ட்ராக்ட்டிவ் அனுபவம்

8 எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸில் `மேன் வெர்சஸ் வைல்ட்'-டில் பியர் க்ரில்ஸ் என்ன செய்தாரோ அதையேதான் இதிலும் செய்யப்போகிறார். காடு, மலை, பனி என ஆபத்தான பிரதேசங்களில் நடக்கும் அவரது சர்வைவல் பயணம். ஆனால், ஒரே ஒரு ட்விஸ்ட்!

`பியர் க்ரில்ஸை நீங்க காப்பாத்துவீங்களா... கைவிடுவீங்களா..!?’ நெட்ஃப்ளிக்ஸின் புது இன்ட்ராக்ட்டிவ் அனுபவம்

டிஸ்கவரி சேனல் முதன்முதலாகத் தமிழில் தனது ஒளிபரப்பைத் தொடங்கிய போது நம்மில் பலரும் `மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியைக் கடந்துவராமல் இருந்திருக்கமாட்டோம். கடுமையான சூழல்களில் இறக்கிவிடப்படும் ஒருவர் எப்படி அங்கிருந்து உயிர்பிழைத்து வெளியே வருகிறார் என்னும் சாதாரண சர்வைவல் சீரிஸிற்கான டெம்ப்ளேட்தான். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கென்ற உலகமெங்கும் தனி ரசிகர்களை உண்டாக்கியவர் இதில் வரும் சர்வைவல் எக்ஸ்பெர்ட் பியர் க்ரில்ஸ். உயிர்பிழைக்க, பாம்பு தொடங்கி சிறிய பூச்சிகள் வரை எதையும் சாப்பிடும் இவரைப் பார்ப்பதற்கே டிவி முன் ஒரு கூட்டம் கூடும். ``அங்க இருக்கு பாருங்க, அது மிகவும் ஆபத்தான மிருகம்" என இதன் தமிழ் டப்பிங்க்கும் ரொம்பவே ஸ்பெஷல். தற்போது இவரை வைத்து `யூ வெர்சஸ் வைல்ட்' என்னும் இன்ட்ராக்ட்டிவ் சீரிஸ் ஒன்றை ஏப்ரல் மாதம் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது நெட்ஃப்ளிக்ஸ்.

யூ வெர்சஸ் வைல்ட் இன்ட்ராக்ட்டிவ்

கடந்த வருடம் மட்டும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரித்த `ஒரிஜினல் கன்டென்ட்'-டை பார்த்துமுடிக்க 1,500 மணிநேரங்கள் ஆகியிருக்கும். அதாவது கடந்த வருடம் எல்லா நாளும் 4 மணிநேரங்கள் இதற்கென ஒதுக்கியிருக்கவேண்டும். இதுபோக மற்ற தயாரிப்பு நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் வேறு. அந்த அளவுக்கு இன்று ஸ்ட்ரீமிங் சந்தையில் முன்னணி சேவையாக நெட்ஃபிளிக்ஸ்  வளர்ந்திருக்கின்றது. அத்தனை வாடிக்கையாளர்களை இன்று பெற்றிருக்கிறது. இப்படிப் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் நெட்ஃபிளிக்ஸ் ஒவ்வொருவரின் விருப்பத்திற்கும் தீனிபோடும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தங்கள் தளத்தில் வெளியாகிக்கொண்டே இருக்கிறதா என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக்கொண்டே இருக்கும். அப்படித் தயாரிக்கப்படும் சாதாரணமான நிகழ்ச்சிகளுடன் சமீபத்தில் புதிய முயற்சியாக `இன்ட்ராக்ட்டிவ் கன்டென்ட்' தயாரிப்பிலும் முனைப்பு காட்டிவருகிறது அந்த நிறுவனம். அதன் பகுதியாகதான் சமீபத்தில் பிளாக் மிரர்: `பேண்டர்ஸ்னேட்ச்’ (Bandersnatch) என்னும் தங்களது முதல் இன்ட்ராக்ட்டிவ் படத்தை வெளியிட்டது அந்த நிறுவனம். அது உலகமெங்கும் இருக்கும் மக்களின் பேராதரவைப் பெற்றது. இந்த `இன்ட்ராக்ட்டிவ் கன்டென்ட்' தயாரிப்பு முயற்சிகளில் அடுத்ததுதான் இந்த `யூ வெர்சஸ் வைல்ட்'.

Bandersnatch

8 எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸில் `மேன் வெர்சஸ் வைல்ட்'-டில் பியர் க்ரில்ஸ் என்ன செய்தாரோ அதையேதான் இதிலும் செய்யப்போகிறார். காடு, மலை, பனி என ஆபத்தான பிரதேசங்களில் நடக்கும் அவரது சர்வைவல் பயணம். ஒரே ஒரு ட்விஸ்ட், இந்த உயிர்பிழைக்கும் பயணத்தில் அவருக்குப் பதிலாக முடிவுகள் எடுக்கப்போவது பார்வையாளரான நாம்தான். நடந்துபோவதா, தவழ்ந்துபோவதா போன்ற கேள்விகளையும், இரண்டு ஆப்ஷன்களையும் உங்கள் முன் வைப்பார் பியர் க்ரில்ஸ். அதில் ஏதேனும் ஒன்றை நீங்கள் தேர்வுசெய்ய வேண்டும். நீங்கள் தேர்வுசெய்யும் பதில்களை வைத்தே அடுத்த அடியை எடுத்துவைப்பார் பியர் க்ரில்ஸ். இதன்மூலம், நீங்களே இந்தப் பயணத்தில் பங்குகொள்ளும் உணர்வைப் பெறமுடியும் என நம்புகிறது நெட்ஃப்ளிக்ஸ். 

தவறான முடிவுகள் எடுத்தால் அவர் ஆபத்துக்குள்ளாவாரா எனக் கேட்டதற்கு, ``பேண்டர்ஸ்னேட்ச் அளவிற்கு யூ வெர்சஸ் வைல்ட் டார்க்காக இருக்காது" என்றார் நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தயாரிப்பு பிரிவின் துணைத்தலைவர் சிண்டி ஹாலாந்து. இதனால் முக்கியமான முடிவுகளை பியர் க்ரில்ஸ்தான் எடுப்பார் எனத் தெரிகிறது. அப்படியும் இந்தத் தொடர் புது அனுபவமாகத்தான் இருக்கப்போகிறது. இதற்கான டீஸர் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே தங்கள் தளத்தில் `இன்ட்ராக்ட்டிவ் கன்டென்ட்' செயல்படுத்துவதற்கான முழு பேஸ்மென்ட் வேலைகளையும் நெட்ஃப்ளிக்ஸ் பார்த்துவிட்டது என்பதால் இனித் தொடர்ந்து இவற்றுக்கான `கன்டென்ட்' தயாரிப்பது மட்டும்தான் நெட்ஃப்ளிக்ஸின் வேலை. எனவே மேலும் பல புதிய வடிவங்களில் இன்ட்ராக்ட்டிவ் கன்டென்ட் முயற்சி செய்துபார்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள் முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சியில் இந்தத் தயாரிப்புகள் மூலம் தற்போது முன்னணியில் இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். 

பொழுதுபோக்கின் அடுத்த கட்டமாக இருக்கப்போவது இந்த `இன்ட்ராக்ட்டிவ் கன்டென்ட்' முறைதான் என்பதே பலரின் கணிப்பாக இருக்கிறது. அதில் `யூ வெர்சஸ் வைல்ட்' புதிய மைல்கல்லாக அமையும். அனிமேஷன் படத்தில் இன்ட்ராக்ட்டிவ் வசதி கொண்டுவருவது வேறு, லைவ் ஆக்ஷன் படத்தில் கொண்டுவருவது வேறு. படம் என்றால் ரத்தமும் சதையுமாக அனைத்துத் தேர்வுகளுக்கும் தனித்தனியாகக் காட்சிகளை படம்பிடிக்கவேண்டும். அதுவும் இதைப் போன்ற சாகசப் பயணங்கள் என்றால் யோசித்துப் பாருங்கள். மக்களிடையே இந்தப் புது ஃபார்மட்டை முன்னெடுத்துச் செல்லப்போவது இந்தப் புதிய வடிவிலான நிகழ்ச்சிகள்தான். இப்போதே பலரும் இந்த நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில் எங்கள் தரப்பிலிருந்து நெட்ஃப்ளிக்ஸிடம் ஒரே ஒரு வேண்டுகோள்தான். அந்தத் தமிழ் டப்பிங்கிற்கும் பண்ணா நல்லாயிருக்கும்!

நெட்ஃப்ளிக்ஸ் இதை எப்படிச் சாத்தியப்படுத்தியது என்பதைத் தெரிந்துகொள்ள விருப்பமா?

ஆம் இல்லை

You vs Wild

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்