மீண்டும் இந்தியாவுக்கு வரும் Peugeot நிறுவனம்... என்ன கார்களை எதிர்பார்க்கலாம்?! | PSA Group Plans to Re-Enter India With Citroen... What Car Can We Expect First?

வெளியிடப்பட்ட நேரம்: 17:56 (23/03/2019)

கடைசி தொடர்பு:17:59 (23/03/2019)

மீண்டும் இந்தியாவுக்கு வரும் Peugeot நிறுவனம்... என்ன கார்களை எதிர்பார்க்கலாம்?!

உள்நாட்டுப் பாகங்களைக்கொண்டு உற்பத்தியை மனதில்வைத்துக் களமிறங்கும் Citroen நிறுவனம், இதில் எந்த காரை முதலில் களமிறக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

PSA குழுமம் (Peugeot - Citroen), இந்தியாவில் கம்பேக் கொடுக்கவிருக்கிறது. சி.கே.பிர்லா குழுமத்துடன் கூட்டணி வைத்து, நம் ஊரில் இந்த நிறுவனம் வர்த்தகம் செய்யவுள்ளது. அதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக, ஓசூரில் கார்களுக்கான இன்ஜின் - கியர்பாக்ஸ் தயாரிக்கும் ஆலையை, கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கியிருக்கிறது இந்தக் கூட்டணி. மேலும் சி.கே.பிர்லா குழுமத்துக்குச் சொந்தமாக, திருவள்ளூரில் இருக்கும் கார் தொழிற்சாலையில், இந்தியாவுக்கான தனது வருங்கால கார்களைக் கட்டமைக்க உள்ளது PSA குழுமம். முக்கியமான விஷயங்களுக்குத் தெளிவு கிடைத்துவிட்ட நிலையில், Citroen நிறுவன தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்திருப்பதுடன், நம் ஊருக்கான முதல் காரை வரும் ஏப்ரல் 3, 2019 அன்று வெளிக்காட்ட உள்ளது, PSA குழுமம்.

Peugeot

சர்வதேசச் சந்தைகளில் Citroen நிறுவனம் விற்பனைசெய்யும் C5 Aircross எஸ்யூவியே, இந்தியாவுக்கான முதல் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2021-ம் ஆண்டுக்குள் விற்பனைக்கு வரும் என நம்பலாம். உலகளவில் ஹேட்ச்பேக், செடான், எம்பிவி, எஸ்யூவி எனப் பலவகையான கார்களை Citroen நிறுவனம் விற்பனை செய்கிறது என்றாலும், இந்தியச் சந்தையில் நிலவும் எஸ்யூவி டிரெண்டை மனதில்வைத்து, இந்த நிறுவனத்தின் எஸ்யூவி-களைப் பற்றி முதலில் பார்ப்போம்.

Citroen C3 Aircross

Citroen C3 Aircross

கடந்த 2017-ம் ஆண்டின் இறுதியில் வெளிவந்த இந்த காம்பேக்ட் எஸ்யூவி, அந்த ஆண்டு நடைபெற்ற ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட C-Aircross கான்செப்ட்டை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட கார். பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், UK ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் C3 Aircross, இந்த பிரெஞ்சு நிறுவனத்தின் புகழ்பெற்ற கார்களில் ஒன்றாக இருக்கிறது. ஸ்டைலான டிசைன் - அதிக வசதிகளைக்கொண்ட கேபின் - லேட்டஸ்ட் பாதுகாப்பு வசதிகள் என அசத்தும் இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யில், கிரிப் கன்ட்ரோல் எனும் வசதி இருக்கிறது. இது முன்பக்க வீல்களுக்குத் தேவையான ரோடு கிரிப்பை அளிக்கும் என்பதுடன், காரின் ஆப் ரோடிங் திறனுக்கும் கைகொடுக்கிறது. 

Citroen C3 Aircross

4,154மிமீ நீளம்/1,765மிமீ அகலம்/1,637மிமீ உயரம்/2,604மிமீ வீல்பேஸ் என, காரின் அளவுகளை வைத்துப்பார்க்கும்போது, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து காம்பேக்ட் எஸ்யூவிகளைவிடவும் பெரிதாக இருக்கிறது C3 Aircross. மேலும், காரில் இருக்கும் அம்சங்களை வைத்துப்பார்க்கும்போது, இது விலை விஷயத்தில் மஹிந்திரா XUV 3OO மற்றும் ஃபோர்டு எக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு நெருக்கமாக இருக்கலாம். இதில் 83bhp பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் NA பெட்ரோல், 110bhp/130bhp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 102bhp பவரை வெளிப்படுத்தும் 1. 5 லிட்டர் டர்போ பெட்ரோல் எனப் பல இன்ஜின் ஆப்ஷன்களில் C3 Aircross கிடைக்கிறது. 5/6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இருப்பது ப்ளஸ். 

Citroen C4 Cactus

Citroen C4 Cactus

இந்த நிறுவனத்தின் எஸ்யூவி-களில், இது கொஞ்சம் புரியாதபுதிர் ரகம்தான்! அதாவது UK சந்தையில் ஹேட்ச்பேக்காக அறியப்படும் C4 Cactus, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா கார் சந்தையில் எஸ்யுவி-யாக பொசிஷன் செய்யப்படுகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகமான இந்த கார், கடந்தாண்டில் பேஸ்லிஃப்ட் செய்யப்பட்டது. எனவே, லேட்டஸ்ட்டான Citroen கார்களுக்கான அம்சங்களுடன்கூடிய (டிசைன் மற்றும் வசதிகள்) காராக அது முன்னேற்றம் கண்டது. இதில் C3 Aircross காரில் இருக்கும் அதே பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் மற்றும் மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் என்றாலும், கூடுதலாக 120bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷனும் உண்டு. 

Citroen C4 Cactus

இது முன்பக்கச் சக்கரங்களுக்கு, 6 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வாயிலாக பவரைச் செலுத்தும். 4,170மிமீ நீளம்/1,714மிமீ அகலம்/1,480-1,563மிமீ உயரம் என இதுவும் நம் ஊரில் இருக்கும் காம்பேக்ட் எஸ்யூவிகளைவிட நீளமாக இருக்கிறது. ஆனால், உயரம் மற்றும் அகலத்தில் இது பின்தங்கிவிடுவதையும் குறிப்பிட்டாக வேண்டும். தவிர, C4 Cactus காரை ஒருவேளை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முடிவில் Citroen இருந்தால், அது எந்த செக்மென்ட்டில் பொசிஷன் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Dongfeng Citroen C4 Aircross

Citroen C4 Aircross

இது, C3 Aircross காரின் சீன வெர்ஷன். 4,200மிமீ நீளம்/1,770மிமீ அகலம்/1,655மிமீ உயரம்/2,655மிமீ வீல்பேஸ் எனும் அளவுகளைக்கொண்டிருக்கும் Dongfeng Citroen C4 Aircross, ஐரோப்பிய மாடலைவிட 116மிமீ நீளம்/5மிமீ அகலம்/18மிமீ உயரம்/51மிமீ கூடுதல் வீல்பேஸ் என வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நம் ஊர் சந்தையைப்போலவே சீனாவிலும் பின்பக்க இடவசதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்பதால், பிரான்ஸுக்கு அடுத்தபடியாக Citroen நிறுவனத்துக்குப் பெரிய சந்தையாக இருக்கும் சீனாவுக்கு எனப் பிரத்யேகமாக அந்த நிறுவனம் தயாரித்ததுதான் Dongfeng Citroen C4 Aircross.

Citroen C4 Aircross

ஹூண்டாய் க்ரெட்டாவுக்குச் சமமான சைஸில் இருக்கும் இந்த எஸ்யூவி, ரெனோ - நிஸான் கூட்டணியின் டஸ்ட்டர் - கிக்ஸ் - கேப்ச்சர் ஆகிய கார்களைவிட சிறிதாக உள்ளது. 136bhp பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 167bhp பவரை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் கிடைக்கிறது Dongfeng Citroen C4 Aircross. 

Citroen C5 Aircross

Citroen C5 Aircross

மிட்சைஸ் எஸ்யூவியான இது, கடந்த 2017-ம் ஆண்டு ஷாங்காயில் வெளியிடப்பட்டது. சீனா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், UK ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இது சமீபத்தில் நம் ஊர் சாலைகளில் டெஸ்ட்டிங்கில் இருப்பதுபோன்ற படங்கள், இணைய உலகில் வைரலாகப் பரவியது. எனவே, இது போட்டிமிகுந்த இந்தியச் சந்தையில், Citroen வெளியிடப்போகும் முதல் காராக இருக்குமோ என்ற பேச்சும் எழுந்திருக்கிறது.

PSA குழுமத்தின் EMP2 பிளாட்பார்மில் தயாரிக்கப்படும் C5 Aircross, 4,500மிமீ நீளம்/1,859மிமீ அகலம்/1,670மிமீ உயரம்/2,730மிமீ வீல்பேஸ் எனும் அளவுகளைக்கொண்டிருக்கிறது. எனவே, இந்தியாவில் இது விற்பனைக்கு வந்தால், அது டாடா ஹேரியர் - ஜீப் காம்பஸ் - மஹிந்திரா XUV 5OO - ஹூண்டாய் டூஸான் ஆகிய கார்களுடன் போட்டிபோடவேண்டியிருக்கும். ஆனால், முன்னே சொன்ன கார்களில் ஹேரியர்தான் அளவில் பெரிய எஸ்யூவி! 

Citroen C5 Aircross

Citroen கார்களுக்கே உரித்தான ஸ்பிளிட் ஹெட்லைட்களைக்கொண்டுள்ள C5 Aircross, நகர்ப்புறச் சாலைகளுக்கான எஸ்யூவி போலத் தோற்றமளிக்கிறது. ஹேரியரின் டெரெய்ன் ரெஸ்பான்ஸ் மோடு மற்றும் காம்பஸின் செலெக் டெரெய்ன் சிஸ்டம்போல இதிலும் கிரிப் கன்ட்ரோல் வசதி உண்டு. சர்வதேசச் சந்தைகளில் பலவிதமான பெட்ரோல்/டீசல் இன்ஜின் மற்றும் மேனுவல்/கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் இந்த மிட்சைஸ் எஸ்யூவி கிடைக்கிறது. 130bhp பவரை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல், 130bhp பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ டீசல், 180bhp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின்களுக்கு, 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

Peugeot

உள்நாட்டுப் பாகங்களைக்கொண்டு உற்பத்தியை மனதில்வைத்துக் களமிறங்கும் Citroen நிறுவனம், இதில் எந்த காரை முதலில் களமிறக்கப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. ஆனால், தனித்துவமான டிசைன் மற்றும் உயர் தரத்தைக்கொண்டிருக்கும் இந்த பிரெஞ்சு நிறுவன கார்கள், நம் ஊர் இதுவரை காணாத புதுமையான படைப்புகளாக நிச்சயம் இருக்கும் என்பது நிதர்சனம். இதற்கு, பரந்துவிரிந்த டீலர் நெட்வோர்க் -  சிறப்பான சர்வீஸ் தரமும் - நம்பகத்தன்மையான பிராண்டு மதிப்பும் முக்கியம் அமைச்சரே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்