' 30 ஆண்டுகள் கழித்தும் இந்த வடு இன்னும் மறையவில்லை!' எக்ஸான் வால்டெஸ் என்னும் பேரிடர் | Exxon Valdez disaster 30 year anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (24/03/2019)

கடைசி தொடர்பு:11:50 (24/03/2019)

' 30 ஆண்டுகள் கழித்தும் இந்த வடு இன்னும் மறையவில்லை!' எக்ஸான் வால்டெஸ் என்னும் பேரிடர்

கப்பல் விபத்தால் எண்ணெய்க் கசிவு ஏற்படுவது உலகமெங்கும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் வரலாற்றில் இடம் பிடித்தது 'எக்ஸான் வால்டெஸ் கப்பல்' விபத்துதான். 

' 30 ஆண்டுகள் கழித்தும் இந்த வடு இன்னும் மறையவில்லை!' எக்ஸான் வால்டெஸ் என்னும் பேரிடர்

2017 ஜனவரி மாதம் 28-ம் தேதி 'பி.டபிள்யூ மேப்பிள்' என்ற கப்பலும், 'எம்.டி டான் காஞ்சிபுரம்' என்ற கப்பலும் எண்ணூர் துறைமுகத்தில் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், கப்பலில் கொண்டுவரப்பட்ட பீப்பாய்களிலிருந்து கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. 65 டன் கச்சா எண்ணெய் கடலில் கலந்ததாகக் கூறப்படுகிறது. எண்ணெய்க் கசிவால், கடல் நீர் மாசடைந்தது மட்டுமின்றி ஏராளமான கடல் வாழ்உயிரினங்கள் உயிரிழந்தன. இது போன்ற கப்பல் விபத்தால் எண்ணெய்க் கசிவு ஏற்படுவது உலகமெங்கும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் வரலாற்றில் இடம் பிடித்தது என்னவோ 'எக்ஸான் வால்டெஸ் கப்பல்' விபத்துதான். அலாஸ்காவில் நடைபெற்ற இந்த விபத்தில் 3 கோடி லிட்டருக்கும் அதிகமான கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது. கோடிக்கணக்கான மீன்கள், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான கடல் பறவைகள், 5 ஆயிரத்துக்கும் மேல் பாலூட்டிகள் என மிகப்பெரிய உயிரின இழப்பை ஏற்படுத்தியது அந்த விபத்து. 

எக்ஸான் வால்டெஸ் எண்ணெய் விபத்து

மார்ச் 24, 1989. விபத்து நடந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தற்போது எக்ஸான் வால்டெஸ் எண்ணெய் விபத்து நினைவுகூரப்படுகிறது. 1989-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி இரவு 9:12 மணியளவில் 'டிரான்ஸ் அலாஸ்கா பைப்லைன்' என்ற பகுதியிலிருந்து 987 அடி நீளமுள்ள 'எக்ஸான் வால்டெஸ்' கப்பல், 12,64,155 கச்சா எண்ணெய் பேரல்களை ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடங்கியது. 'வில்லியம் மார்ஃபி' என்ற மாலுமி கப்பலை வழிநடத்தினார். கப்பலின் கேப்டன் 'ஜோ ஹேல்வௌட்' உடனிருந்தார். கப்பலை 'ஹெல்ம்ஸ்மேன் ஹாரி கிளார்' இயக்கிக் கொண்டிருந்தார். வால்டெஸ் நேரோஸ் என்ற இடத்தைக் கடந்தபின், 'வில்லியம் மார்ஃபி'  ஓய்வெடுக்கச் சென்றபின், கேப்டன் ஜோ வழிகாட்டும் பணியை மேற்கொண்டார். பல்வேறு சீறும் அலைகளையும், பனிப்பாறைகளையும் கடந்து, அமைதியாகச் சென்று கொண்டிருந்தது கப்பல். செல்லும் வழியெங்கும் பனிப்பாறைகள் அதிகமாக இருந்தன. வளைகுடாவைச் சுற்றிச் செல்லலாம் என்று கேப்டன் ஜோ கட்டளையிட, வளைகுடாவைச் சுற்றிச்செல்வதற்கு முயன்று கொண்டிருப்பதற்குள், கப்பல் பனிப்பாறையை நெருங்கிவிட்டது. எனவே கப்பலை இயக்கிக்கொண்டிருந்த  ஹாரி கிளாருக்கு பதிலாக 'ஹெல்ம்ஸ்மன் ராபல்ர்ட் கேகன்' கப்பலை இயக்கத் தொடங்கினார். அலைகளினாலும், கப்பலின் வழித்தடம் சரியாகத் தெரியாததாலும், தெற்கு அலாஸ்காவில் உள்ள (கற்பாறைகள் நிறைந்த தீவு) 'பிரின்ஸ் வில்லியம் சவுண்ட்' என்ற இடத்தில் சரியாக 12:04 என்ற மணியளவில் அதிக சப்தத்துடன் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. 

கேப்டன் ஜோ ஹேல்வௌட் மது அருந்தியிருந்ததாகவும், கவனக்குறைவாக இருந்ததுமே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 2,57,000 பேரல் எண்ணெய் கடலில் கொட்டியது. 1,300 மைல்களுக்கு மேல் கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. 

எக்ஸான் வால்டெஸ்

இந்த பேரழிவு நிகழ்ந்த போது எந்த வித மனித உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று பெருமைகொள்ளும் அவர்களுக்குக் கடல் வாழ் உயிரினங்கள் மீது அக்கறை இல்லை என்றே சொல்லலாம். எண்ணெய்யில் சிக்கி 2,50,000 கடல் பறவைகள் இறந்தன. ஆயிரக்கணக்கான கடல் நாய்கள், திமிங்கிலங்கள், கடல் பாலூட்டிகள் என்று பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையை அடைந்தன. போரில் மடிவது போலக் கொத்துக் கொத்தாக கோடிக்கணக்கான மீன்கள் நீரில் செத்து மிதந்தன. கடற்கழுகுகளின் இறக்கைகள் முழுவதுமாக எண்ணெய்யில் நனைந்ததால் பறக்க முடியாமல், கடலிலும், கடற்கரையிலும் விழுந்தன. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் எக்ஸான் வால்டெஸ் எண்ணெய்க் கசிவைப் பற்றி விசாரணை நடத்தி, விபத்துக்கான முக்கிய காரணங்களைக் கூறியது. பல்வேறு நாட்களாகப் பயணத்திலிருந்தவர்கள் கப்பலை இயக்கியதால், சோர்வு மற்றும் அதிகப்படியான பணிச்சுமை காரணமாகவும் கப்பலைச் சரியாகக் கையாள முடியவில்லை, கேப்டன் முறையாக வழிகாட்டவில்லை, வழிகாட்டும் கருவியையும் முறையாகப் பயன்படுத்தவில்லை, மேலும், கடலோர காவல்படையும் இதில் கவனம் செலுத்தவில்லை. சிறந்த மற்றும் அனுபவமிக்க மாலுமிகள் உடன் இல்லை என்று பல்வேறு காரணங்களைக் கூறினர். சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அழிவைக் கொடுக்கும் வகையில் பாதிப்பு ஏற்படுத்திய எக்ஸான் வால்டெஸ் நிறுவனத்துக்கு $150 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது. 

எக்ஸான் வால்டெஸ்

மேலும் கடலில் கலந்துள்ள எண்ணெய்க் கசிவைத் தூய்மைப்படுத்தும் பணியையும் அந்த நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டது. தூய்மைப்படுத்த $2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டது. 11,000 பணியாளர்கள், 1,000 படகுகள், 100 ஹெலிகாப்டர்கள் என்று தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியின்போது மட்டும் நான்கு பேர் இறந்துள்ளனர். 2017-ம் ஆண்டு இந்த விபத்தைப் பற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில், கடலில் கலந்த எண்ணெய்யில் கிட்டத்தட்ட 14 சதவிகிதம் மட்டுமே சுத்தம் செய்யப்பட்டது. 50 சதவிகிதம் மட்கிவிட்டது. மேலும் 20 சதவிகிதம் ஆவியாகவும், 13 சதவிகிதம் நுண்ணுயிர்களுடன் கலந்துள்ளது.  மீதமுள்ள 3 சதவிகிதம் கடற்கரையிலும், நீருடனும் கலந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. Exxon Valdez எண்ணெய்க் கசிவு ஓரளவுக்குச் சுத்தம் செய்யப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் அதன் விளைவுகளிலிருந்து இன்னும் முழுவதுமாக மீண்டு வரவில்லை. அந்த விபத்தின் தாக்கம் இன்னும் முழுதாக மறைந்துவிடவில்லை.

Biggest oil spills 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்