``கேப்டன் மார்வெல் சூட் வடிவமைக்க எட்டு மாசமாச்சு!’’ - ஆடை வடிவமைப்பாளர் ஹெய்ஸ் | It took 8 months to design captain marvel suit says costume designer Sanja Milkovic Hays

வெளியிடப்பட்ட நேரம்: 10:50 (25/03/2019)

கடைசி தொடர்பு:10:50 (25/03/2019)

``கேப்டன் மார்வெல் சூட் வடிவமைக்க எட்டு மாசமாச்சு!’’ - ஆடை வடிவமைப்பாளர் ஹெய்ஸ்

``கேப்டன் மார்வெல் சூட் வடிவமைக்க எட்டு மாசமாச்சு!’’ - ஆடை வடிவமைப்பாளர் ஹெய்ஸ்

மீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் திரைப்படம் `கேப்டன் மார்வெல்'. இது மார்வெலின் முதல் முழுநீளப் பெண் சூப்பர்ஹீரோ திரைப்படம். பாலின ஸ்டீரியோ டைப்களை உடைத்து, பெண்களை மையப்படுத்தி வெளிவந்த `சில சூப்பர்ஹீரோ' திரைப்படங்களில் இது மிகவும் முக்கியமான திரைப்படம். சூப்பர்ஹீரோக்களுக்குத் தனிப்பட்ட அடையாளங்களைக் கொடுப்பது, அவர்கள் உடுத்தியிருக்கும் உடைகள்தாம். அந்த வகையில் கேப்டன் மார்வெலின் கதாபாத்திரத்துக்கேற்ற `சூப்பர் கூல்' உடையை வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர் சஞ்சா மில்கோவிக் ஹெய்ஸ் அந்நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்ட சில சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு இங்கே.

கேப்டன் மார்வெல்

கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ப்ரீ லார்சன், இந்தத் திரைப்படத்தில் இரண்டு வெவ்வேறு சூட்களை உடுத்தியிருப்பார். நீலம், சிவப்பு மற்றும் கோல்டு ஷேடுகளில் `திரவ லெதர்' மெட்டீரியலில் ஆன ஸ்டார் ஃபோர்ஸ் சூட் மற்றும் எலாஸ்டிக், லெதர் மெட்டீரியல்கள் இணைத்து சில 3D கூறுகளால் நிரப்பப்பட்ட பச்சை ஷேடு சூட். இரண்டும் லார்சனுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கும். இந்த சூப்பர்ஹீரோ சூட்டை வடிவமைக்க, ஹெய்ஸ் தலைமையிலான ஆடை வடிவமைப்புக் குழு எடுத்துக்கொண்ட கால அவகாசம், எட்டு மாதம்!

Designer Hays

`பிளேட்', `பாஸ்ட் அண்ட் பியூரியஸ்', `மேஸ் ரன்னர்', `மிஷன் டு மார்ஸ்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்த ஹெய்ஸிடம் மார்வெலோடு இணைந்ததைப் பற்றிக் கேட்டபோது, ``பெண்களை முன்னிலைப்படுத்தி எடுக்கும் திரைப்படங்களை அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அதிலும் மிகவும் வலுவான, சக்திவாய்ந்த கதாபாத்திரங்களைப் பார்ப்பதே அரிது. அந்த வகையில் கேப்டன் மார்வெல் எனக்கும் சவாலான படம்தான். இந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்தது மிகவும் பெருமையாக உள்ளது" என்று பகிர்ந்துகொண்டார் ஹெய்ஸ்.

Captain Marvel

மார்வெல் ஸ்டுடியோஸின் விஷுவல் துறையின் தலைமை அதிகாரியான ஆண்டி பார்க் (Andy Park), கேப்டன் மார்வெலின் இறுதிக்கட்ட ஆடைகளின் முதன்மை டிசைன்களை வடிவமைத்திருந்தார். பிறகு, பார்க் உடன் இணைந்து ஹெய்ஸ், மார்வெலின் முழுவடிவ ஆடையை வடிவமைத்துள்ளார். பெண்கள் ஆடைகளை வடிவமைப்பதில் இருக்கும் வழக்கமான அடிப்படைகளைப் பின்பற்றாமலும், கவர்ச்சியாய் இல்லாமலும் வடிவமைக்கவேண்டும் என்பது ஹெய்ஸுக்கு வழங்கப்பட்ட விதிமுறைகள்.

ஆண் சூப்பர்ஹீரோக்களின் ஆடையைப்போலவும் `ஃபிட்டிங்' இருக்கக் கூடாது என்பது அவருக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சவால். ``மிகவும் பகட்டான, அழகான சூப்பர்ஹீரோவாகக் காண்பிக்கக் கூடாது என்பதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டேன். அவர் உடுத்தியிருக்கும் உடையே அவரின் முழு ஆட்டிட்யூடையும் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முழு காஸ்ட்யூமையும் வடிவமைத்தேன்" என்கிறார் ஹெய்ஸ்.

பாலின வேறுபாடுகளின்றி மற்ற சூப்பர்ஹீரோக்களின் சூட்களில் இருக்கும் தனிப்பட்ட சிறப்பம்சங்கள் அனைத்தும், இந்தச் சூட்டிலும் இருக்கின்றன. இந்தக் கதாபாத்திரத்தின் `ஐகானிக் முகமூடி' அணிந்துவரும் காட்சிகளில், அவரின் `மோஹாக்' ஹேர்ஸ்டைல், இதுவரை எந்தப் பெண் சூப்பர்ஹீரோ படங்களிலும் நாம் பார்த்திடாத ஒன்று. `Wonder Woman' போன்ற திரைப்படங்களில், மைய கதாபாத்திரம் ஹீல்ஸ் பொருத்திய பூட்ஸ் அணிந்திருப்பார்கள். ஆனால், கேப்டன் மார்வெலின் சாய்ஸ் ஹீல்ஸ் இல்லாத `கனமான பூட்ஸ்' மட்டுமே.

Mohawk hairstyle

``இந்தப் படத்துக்காக உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள லார்சன் கடுமையாக உழைத்தார். நாங்கள் எதிர்பார்த்தபடி அவரின் உடலமைப்பு மாறியது. வடிவமைத்து வைத்திருந்த மார்வெல் சூட்டை அவ்வப்போது அணிந்து, உடலோடு சரியாகப் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்வார் லார்சன். மார்வெல் சூட் உடலோடு ஒட்டியிருந்தால் ஓடும் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் நடிப்பது கடினமாகிவிடும். இதில் ஏராளமான `geometric' வேலைப்பாடுகள் உள்ளன. எனவே, ஃபிட்டிங்கில் அதிக கவனம் எடுத்துக்கொண்டோம். அதற்கேற்றபடி லார்சனும் ஒத்துழைத்தார்" என்றார் ஹெய்ஸ்.


டிரெண்டிங் @ விகடன்