Published:Updated:

ஆடு, கோழி இல்லை... அசைவ உணவுக்கு அனுமதியில்லை... வள்ளலார் வழி நடக்கும் அதிசய கிராமம்! 

ஆடு, கோழி இல்லை... அசைவ உணவுக்கு அனுமதியில்லை... வள்ளலார் வழி நடக்கும் அதிசய கிராமம்! 

இளைஞர்கள் யாரும் மதுக்கடைகளை தேடிச் செல்வதில்லை. அடிதடி, வெட்டுக்குத்து என்று யாரும் இதுவரை காவல் நிலையத்துக்குச் சென்றதில்லை.

ஆடு, கோழி இல்லை... அசைவ உணவுக்கு அனுமதியில்லை... வள்ளலார் வழி நடக்கும் அதிசய கிராமம்! 

இளைஞர்கள் யாரும் மதுக்கடைகளை தேடிச் செல்வதில்லை. அடிதடி, வெட்டுக்குத்து என்று யாரும் இதுவரை காவல் நிலையத்துக்குச் சென்றதில்லை.

Published:Updated:
ஆடு, கோழி இல்லை... அசைவ உணவுக்கு அனுமதியில்லை... வள்ளலார் வழி நடக்கும் அதிசய கிராமம்! 

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியிலிருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது வாடிமனைப்பட்டி கிராமம். வள்ளலார் சன்மார்க்க நெறிகளைப் பின்பற்றும் 45 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் இந்தச் சிறிய கிராமத்தில் பல்வேறு ஆச்சர்யங்களும் சுவாரஸ்யங்களும் கொட்டிக்கிடக்கின்றன. 


வாடிமனைப்பட்டி கிராமத்தினர் அனைவருமே வள்ளலாரின் சுத்த சமரச சன்மார்க்க நெறியைக் கடைப்பிடிப்பவர்களாக உள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள எவரும் அசைவ உணவுகளைச் சாப்பிடுவதில்லை. சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுகின்றனர். வெளியூரைச் சேர்ந்தவர் இந்த கிராமத்திற்குள் நுழைந்தாலும் அவர்களுக்கு அன்பும், உபசரிப்பும் கட்டாயம் கிடைக்கும். அதேபோல், தங்களைத் தேடி வந்தவர்களை, சாப்பிடாமல் வெறும் கையோடு அனுப்புவதில்லை. ஆடு, கோழிகளுக்கு ஊரில் அனுமதியில்லை. விவசாயம்தான் இவர்களின் பிரதான தொழில். 

விவசாயம் பொய்த்துப் போனதால் பலருக்குப் பசுமாடுகளால் கிடைக்கும் வருமானத்தில்தான் ஜீவனம். இங்கு நடக்கும் திருமணங்களில் ஹோமங்கள், மந்திரங்கள் போன்ற சடங்குகளுக்கு இடமில்லை. சன்மார்க்க முறைப்படியே திருமணங்கள் நடக்கின்றன. ஒரே ஒரு விநாயகர் கோயில் மட்டுமே இங்குள்ளது. 50 ஆண்டுகளைக் கடந்தும் நெறி தவறாமல் இந்தக் கிராமத்தினர் தொன்மையான சடங்குகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றி வருகின்றனர் என்பதுதான் ஆச்சர்யம். 

``அப்போதெல்லாம் அடிக்கடி சன்மார்க்கக் கூட்டங்கள் நடக்கும். வெவ்வேறு ஊர்கள்ல இருந்து சன்மார்க்க வாதிகள் எங்க கிராமத்துக்கு வருவாங்க. விழிப்புணர்வு நாடகங்கள்லாம் நடத்துவாங்க. வள்ளலார் உபதேசித்த சன்மார்க்க நெறிமுறைகளை எங்களுக்குச் சொல்லிக்கொடுப்பாங்க. ஆரம்பத்தில எங்க மண்டையில ஏதும் ஏறலை.

ஆனாலும், அவங்க சளைக்காம சன்மார்க்கக் கொள்கைகளைச் சொல்லிக் கொடுத்தாங்க. நாள்கள் போகப் போக, எங்களுக்கு சன்மார்க்கத்தின் மேல தீவிர பற்று வந்திருச்சு. இப்போ சன்மார்க்கம் இல்லைன்னா நாங்க இல்லை” என்றுகூறும் ராமமூர்த்தி, இந்த ஊரில் உள்ள முக்கிய தலைக்கட்டுகளில் ஒருவர். இவர் கிராம மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நிதி திரட்டி வள்ளலார் மடம் ஒன்றை உருவாக்கி வருகிறார். 

``1963-ல் மாத்தூரைச் சேர்ந்த முத்தையா சுவாமிகள்தான் சன்மார்க்க நெறியை எங்க ஊர்ல விதைச்சவர். ஜீவ காருண்யத்தைப் பத்தியும் அசைவ உணவுகளால ஏற்படுற தீமைகள் பற்றியும் சைவ உணவுகள்ல உள்ள நன்மைகள் பற்றியும் ஒவ்வொண்ணா விளக்குவார். மிதிவண்டியை எடுத்துக்கிட்டு ஊர், ஊரா சுற்றி சன்மார்க்க கொள்கைகளைப் பரப்புவார்.

அவரின் கொள்கைகள் எங்களுக்குப் பிடிச்சுப்போகவே, நாங்களும் அவரோட சேர்ந்து பயணிக்கத் தொடங்குனோம். சன்மார்க்க நாடகங்கள்ல நாங்களும் நடிக்க ஆரம்பிச்சோம். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாசம் நடக்குற திருவிழாவில வள்ளலாரை வணங்கிடு எல்லாருக்கும் அன்னதானம் வழங்குவோம். 

பக்கத்து ஊரான மாத்தூர்ல வள்ளலார் மாணவர் இல்லம் உருவாக்கியிருக்கோம். ராஜாங்கத்து ஐயா, அருணாசல சுவாமிகள் ரெண்டு பேர்தான் அதுக்குக் காரணம். இவர்களோட அருளால இன்னைக்கு நூத்துக்கணக்கான மாணவர்கள் பயனடையுறாங்க.
சன்மார்க்க நெறிகளைப் பின்பற்றுறது மட்டுமல்ல... அடிக்கடி கூட்டங்கள் நடத்தி அதன் அவசியத்தை அடுத்த தலைமுறைக்கு உணர்த்திக்கிட்டே இருப்போம். அதனால்தானோ என்னவோ எங்களால இரண்டு தலைமுறைகளைக் கடந்தும் சன்மார்க்க கொள்கையைப் பின்பற்ற முடியுது” என்கிறார்.

 `அருட்பெருஞ்சோதி... அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி'' என்று சொல்லிவிட்டே பேசத்தொடங்கும் பெரியவர் துரைக்கண்ணு, ``இறைவன் ஜோதி வடிவானவன்; அவரே அருட்பெரும் ஜோதியாகத் திகழ்கிறார்; பசி மற்றும் வறுமையே சமூகத்தில் அனைத்துத் தீமைகளுக்கும் காரணம்; மனிதர்களிடம் மட்டுமல்லாமல் பிற உயிர்களிடத்தும் அன்பு கொள்ளவேண்டும்'' என்கிறார். இன்றைக்கும் சன்மார்க்கக் கொள்கைகள் குறித்து தொடர்ந்து மக்களிடம் பேசி வருகிறார் இவர்.

``1963-ல் இருந்து சைவ உணவுகளை மட்டும்தான் சாப்பிடுகிறோம். எத்தனை கவலைகள் வந்தாலும், திருவருட்பா வாசிக்கும்போது அத்தனையும் பறந்துபோகும். ஒருநாள்கூட திருவருட்பாவை வாசிக்காமல் இருக்க மாட்டேன். பசியில் வாடுபவர்களுக்கு நாம் கொடுக்கும் சாப்பாடுதான் அமிர்தம். அதில்தான் ஆத்ம  திருப்தி இருக்கிறது. அதைத்தான் நாங்கள் செய்ய நினைக்கிறோம். தாய், தந்தைக்கு பாத பூஜை செய்தலில் தொடங்கி திருவருட்பா வாசித்த பிறகு சன்மார்க்கவாதிகளின் முன்னிலையில் திருமணச் சடங்குகள் சன்மார்க்க முறைப்படி மட்டுமே நடைபெறும்.

நெறி தவறாமல் நாம் வாழ வேண்டும் என்று பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்ப்பதால்தான், ஒரே சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்குள் எந்தச் சண்டை, சச்சரவுகளும் இல்லாமல் வாழ்கிறோம். இளைஞர்கள் யாரும் மதுக்கடைகளை தேடிச் செல்வதில்லை. அடிதடி, வெட்டுக்குத்து என்று யாரும் இதுவரை  காவல் நிலையத்துக்குச் சென்றதில்லை. தற்போது 3 தலைமுறைகளாக இந்தச் சன்மார்க்க நெறிமுறைகளைக்  கடைப்பிடித்து வருகிறோம். இனி வரும் தலைமுறையினரும் சன்மார்க்க நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை” என்கிறார்.

``உள்ளூரில் இருப்பவர்கள் சைவத்தைக் கடைப்பிடிப்பது சாத்தியம்தான். வெளியூரிலிருந்து இந்த ஊருக்கு மருமக்களாக வருபவர்கள் எப்படிச் சைவத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்..?" அம்மாக்கண்ணு பாட்டியிடம் கேட்டோம், 

``நான் கல்லாணம் கட்டிக்கிட்டு வந்து இப்போ 30 வருஷமாச்சு. அதுக்கு முன்னாடி, அசைவம் சாப்பிட்டுக்கிட்டுதான் இருந்தேன். வாடிமனைப்பட்டிக்கு எப்போ மருமகளாக வந்தேனோ, அப்போதிருந்து அசைவம் சாப்பிடுறத விட்டுவிட்டேன்.

தலைமுறை, தலைமுறையாப் பின்பற்றிக்கிட்டு வருகிற கொள்கை நம்மால் கெட்டுடக்கூடாதுல்லயா... நானும் முழுசா சைவத்துக்கு மாறிட்டேன்.

இந்த ஊருக்கு மருமகளா வர்ற ஒவ்வொருத்தரும் என்னைப் போலவே  நினைக்கிறதால, எங்களால் தொடர்ந்து சைவத்தைத் தொடரமுடியுது. அதுமட்டுமல்ல, சைவம் சாப்பிடறதால எங்க ஊர்ல பலபேரு 100 வயசுக்கு மேலே ஆரோக்கியமா இருக்காங்க.

இந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மருமகளாப் போற பெண்கள், புகுந்த வீட்டிலுள்ளவங்களுக்காக அசைவம் சமைச்சாலும்கூட, அவங்க சைவம் மட்டுமே சாப்பிடுவாங்க'' என்று பெருமிதத்துடன் கூறினார் அம்மாக்கண்ணு பாட்டி.