விண்ணில் வெடித்துச் சிதறிய 10 அணுகுண்டுகள்... சத்தமின்றி `சம்பவம்' செய்த விண்கல்! | Nasa release new photos of meteor explosion

வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (27/03/2019)

கடைசி தொடர்பு:16:04 (27/03/2019)

விண்ணில் வெடித்துச் சிதறிய 10 அணுகுண்டுகள்... சத்தமின்றி `சம்பவம்' செய்த விண்கல்!

பல கிலோமீட்டர் உயரத்தில் கடலுக்கு மேல் வெடித்ததால் இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஒருவேளை விண்கல் பூமியைத் தொட்டிருந்தால் அதன் விளைவு வேறு விதமாக இருந்திருக்கும்.

விண்ணில் வெடித்துச் சிதறிய 10 அணுகுண்டுகள்... சத்தமின்றி `சம்பவம்' செய்த விண்கல்!

ரு நாளில் விண்வெளியிலிருந்து பல விண்கற்கள் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இது இன்றைக்கு அல்ல பல மில்லியன் வருடங்களாக நடைபெற்று வரும் ஒரு வழக்கமான நிகழ்வு. இப்படி உள்ளே அதி வேகத்தில் நுழையும் ஒரு விண்கல் அளவில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் வளிமண்டலத்தில் உராய்வதால் எரிந்து சாம்பலாகி விடும்.

விண்கல்

சிறிய அளவில் உள்ளவை தவிர்த்து பெரிய அளவில் வானில் எரியும்போது அந்த விண்கற்கள் யார் கண்ணிலாவது தென்பட்டு விடும். ஆனால் அதற்கு மாறாகக் கடந்த வருட இறுதியில் சத்தமே இல்லாமல் சம்பவம் செய்துவிட்டுப் போயிருக்கிறது ஒரு விண்கல் ஒன்று. ஆனால், அதைப் பற்றிய தகவல் அப்போது எதுவுமே வெளியாகவில்லை என்பதுதான் இங்கே ஆச்சர்யமான விஷயம். இந்த விண்கல் வானில் வெடித்த போது அதிலிருந்து வெளிப்பட்ட ஆற்றலைக் கணக்கிட்டுப் பார்த்து தலைசுற்றிப் போயிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

பத்து அணுகுண்டுகளுக்குச் சமம்

விண்கல்

இந்தச் சம்பவம் நடந்த நாள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18-ம் தேதி. பூமியின் காற்று மண்டலத்தில் ஊடுருவிய அந்த விண்கல் வந்த வேகத்தில் வெடித்த இடம் ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka) தீபகற்பப் பகுதிக்கு அருகே உள்ள பேரிங் (Bering) கடலின் வான் பரப்பில். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்து விட்ட பிறகே இப்படி ஒரு சம்பவம் நடந்தது பலருக்குத் தெரிய வந்திருக்கிறது. விண்கல் வானில் வெடித்த போது இதை யாருமே பார்க்கவில்லை. இந்தத் தகவல் வெளியாகி ஒரு வாரம் கடந்து விட்ட பின்னரும் கூடப் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை. ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. விண்கல் வெடித்த போது செயற்கைக்கோள் எடுத்த படத்தை புதிதாக நேற்று முன்தினம் வெளியிட்டிருக்கிறது நாசா.

நாசா

33 அடி சுற்றளவு கொண்ட இந்த விண்கல்லின் எடை1500 டன்கள் வரைக்கும் இருந்திருக்கக் கூடும் என்று கணித்திருக்கிறார்கள் நாசா விஞ்ஞானிகள். மணிக்கு 1,15,200 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று மண்டலத்தில் நுழைந்த இந்த விண்கல் சரியாகக் கடலுக்கு மேற்புறத்தில் 25 கிலோமீட்டர் உயரத்தில் வெடித்திருக்கிறது. அப்போது அதிலிருந்து 173 கிலோ டன் TNT வெடித்தால் எவ்வளவு ஆற்றல் வெளிப்படுமோ அதற்கு இணையான ஆற்றல் வெளிப்பட்டிருக்கிறது. இது அமெரிக்கா 1945-ம் ஆண்டில் ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது போட்ட அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட ஆற்றலைப் போல பத்து மடங்கு அதிகம். வானில் மேகங்களுக்கு இடையே இந்த விண்கல் வெடித்த போது அதிலிருந்து வெளிப்பட்ட புகையை ஜப்பானின் வானிலை செயற்கைக்கோளான ஹிமாவரி-8 தற்செயலாகப் படம் பிடித்திருக்கிறது.

இதுவே கடந்த வாரம் விண்கல் வெடித்ததற்கான முக்கிய ஆதாரமாக இருந்தது. தற்போது அதே நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய படங்களை வெளியிட்டிருக்கிறது நாசா. டெரா என்ற செயற்கைக்கோள் இந்த விண்கல் வெடிப்பைச் சரியான நேரத்தில் படம் பிடித்திருக்கிறது. கடந்த 100 வருடங்களில் பூமிக்குள் நிகழ்ந்த மூன்றாவது மிகப்பெரிய விண்கல் வெடிப்பு இதுவாகத்தான் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பூமியில் விழுந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ?

பூமியை நோக்கி வரும் விண்கற்கள் அப்படியே நிலத்தில் விழுவது என்பது அவ்வளவு எளிதாக நடக்கும் விஷயமில்லை. ஆனால், அப்படி நடக்கவே நடக்காது என்றும் இருந்து விட முடியாது. கடந்த கால வரலாறு அப்படித்தான் இருக்கிறது.

Chelyabinsk Meteor

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த டைனோசர்கள் தடயமே இல்லாமல் அழிந்ததற்குக் காரணம் ஒரு விண்கல் பூமியில் வந்து மோதியதுதான் என்ற கூற்று பல காலமாகக் கூறப்பட்டு வருகிறது. தற்பொழுது வானில் வெடித்த விண்கல் ஒரு வேளை பூமியில் விழுந்திருக்குமானால் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருந்திருக்கும். இதே போல கடந்த 2013-ம் ஆண்டில் விண்கல் வெடிப்புச் சம்பவம் ஒன்று ரஷ்யாவில் நிகழ்ந்தது. செல்யபின்ஸ்க் நகரத்தில் அருகே விண்கல் வெடித்த போது அதன் தாக்கத்தை அந்நகரத்தில் உள்ள பலர்  உணர்ந்தனர். கட்டடங்களின் உள்ளே இருந்த பொருள்கள் கீழே விழுந்தன; ஜன்னல் கண்ணாடிகள் சிதறி விழுந்தன. இந்தச் சம்பவத்தில் சுமார் 1,200 பேர் காயமடைந்தனர். ஆனால் யாரும் இறக்கவில்லை. அந்த விண்கல் வெடித்தது நகர்ப்பகுதி என்பதால் பல கேமராக்களில் அந்தச் சம்பவம் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சிகள் உலகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் இந்த முறை வெடித்த கம்சட்கா தீபகற்பப் பகுதி, மக்கள் நடமாட்டமே இல்லாத ஓர் இடம். அதுவும் கடலின் மேல் வான் பரப்பில் விண்கல் வெடித்ததால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அந்தப் பகுதி, விமானங்கள் செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது.  அவர்கள் மூலமாக சில கூடுதலான தகவல்களைப் பெற முடியும் என்பதால் அன்றைய தினம் அந்த வழியே பயணம் செய்த விமானங்களை விண்கல் ஆராய்ச்சியாளர்கள் விசாரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 


டிரெண்டிங் @ விகடன்