`உலக நாடுகளின் யுத்தக்களமா விண்வெளி?’ மிஷன் சக்தியின் அவசியம் என்ன? | Importance of Anti-satellite weapon in india

வெளியிடப்பட்ட நேரம்: 19:27 (28/03/2019)

கடைசி தொடர்பு:20:35 (28/03/2019)

`உலக நாடுகளின் யுத்தக்களமா விண்வெளி?’ மிஷன் சக்தியின் அவசியம் என்ன?

இந்த ஏவுகணையை வடிவமைக்க நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வருடங்களாக உழைத்திருக்கிறார்கள். இறுதிக்கட்டப் பரிசோதனை பற்றிய தகவல் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது.

`உலக நாடுகளின் யுத்தக்களமா விண்வெளி?’ மிஷன் சக்தியின் அவசியம் என்ன?

விண்வெளியில் உலக நாடுகளுக்கு இடையேயான போட்டி என்பது கடந்த நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. விண்வெளிக்கு யார் முதலில் செல்வது எனத் தொடங்கிய போட்டி இப்போது செயற்கைக்கோளை அழிப்பது வரை வந்திருக்கிறது. நேற்று வானில் இருக்கும் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாகப் பரிசோதனை செய்திருக்கிறது இந்தியா. மிஷன் சக்தி எனப்படும் இதன் மூலமாக விண்வெளி பாதுகாப்பில் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது. தொடர்ந்து விண்வெளியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வரும் இந்தியாவுக்கு மிஷன் சக்தி போன்ற ஒரு ஏவுகணைத் தொழில்நுட்பம்  தேவைப்படுவதற்கான அவசியம் என்ன?

போட்டியைத் தொடங்கி வைத்த அமெரிக்கா

மிஷன் சக்தி

பூமியிலிருந்து ஏவப்படும் ஏவுகணை, சரியாக வானில் இருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்க வேண்டும். இதுதான் இந்த செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் சுருக்கமான செயல்திட்டம். இந்த வகை ஏவுகணையை உருவாக்குவதற்கான முதல் அடியை எடுத்து வைத்த நாடு அமெரிக்காதான். 1950-களிலேயே அதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டது. அடுத்த சில வருடங்களில் A-SAT வகை ஏவுகணையை வடிவமைத்துவிட்டது. அப்போது அதன் போட்டியாளராக இருந்த சோவியத் யூனியனுக்கும் அதைப் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. எனவே, 1960-களில் அதற்கான பணிகளைத் தொடங்கிய சோவியத் யூனியனுக்கும் சில வருடங்களிலேயே அந்தத் திறனைப் பெற்றுவிட்டது. இதற்கடுத்து இந்தியாவுக்கு முன்னால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பரிசோதனை செய்த நாடு சீனா. யாருமே எதிர்பார்க்காதபோது இந்தப் பரிசோதனையை நடத்தியது. விண்ணில் 800 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த FY-1C என்ற வானிலை செயற்கைக்கோள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதைச் சீனாவின் ஏவுகணை சரியாகச் சென்று தாக்கியது. வெளி உலகுக்குத் தெரியாமல் நடத்தப்பட்ட இந்தப் பரிசோதனையைக் கண்டறிந்து உறுதிசெய்தது அமெரிக்கா. அதன் பிறகு தற்போது இந்தியா வெற்றிகரமாக  A-SAT வகை ஏவுகணையைப் பரிசோதனை செய்திருக்கிறது.

Microsat-R

நேற்று காலையில் ஒடிசாவுக்கு அருகே உள்ள தீவிலிருந்து இந்த மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்ட ஏவுகணைப் பரிசோதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. விண்ணில் பாய்ந்த ஏவுகணை பூமியின் கீழ்வட்டப் பாதையிலிருந்த செயற்கைக்கோள் ஒன்றைச் சரியாகத் தாக்கியது. செயற்கைக்கோளின் பெயரைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதன் அறிக்கையில் குறிப்பிடவில்லை. ஆனால், இலக்கு Microsat-R என்ற செயற்கைக்கோளாக இருந்திருக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. DRDO-வால் உருவாக்கப்பட்ட இதைக் கடந்த ஜனவரி மாதம்தான் இந்தச் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியிருக்கிறது இஸ்ரோ. 740 கிலோ கிராம் எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள் பூமியிருந்து 274 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. எனவே, இந்த ஏவுகணையைப் பரிசோதனை செய்யும் முடிவு திடீரென எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இரண்டு வருடம்... நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள்

அக்னி-5

இதுபோன்ற ஏவுகணை ஒன்றை வடிவமைக்கும் முயற்சியில் இந்தியா பல காலமாகவே ஈடுபட்டிருக்கிறது. 2007-ல் சீனா செய்த பரிசோதனைக்குப் பிறகு, அந்த முயற்சி தீவிரமடைந்தது. இந்தத் தொழில்நுட்பம் கடந்த 2012-ம் ஆண்டிலேயே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கைவசம் இருந்ததாக அன்றைக்குத் தெரிவித்திருக்கிறார் அப்போது அதன் தலைவராக இருந்த வி.கே.சரஸ்வத். அதற்குக் காரணம் அன்றைய வருடம் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டிருந்த அக்னி-5 வகை ஏவுகணைதான். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வகையான இதன் தாக்கும் தொலைவு 5,000 - 8,000 கிலோமீட்டர்கள். அக்னி-5 ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி  2014-ம் ஆண்டுக்குள்ளாக முழுத்திறன் படைத்த செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை உருவாக்கப்பட்டுவிடும் என அப்போதே வி.கே.சரஸ்வத் தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த 2 வருடங்களுக்கு முன்னால்தான் அரசிடமிருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு அதற்கான முறையான அனுமதி கிடைத்திருக்கிறது. அதன் பிறகு, DRDO-வைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பணியில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார்கள். கடந்த 6 மாதமாக இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் DRDO இருந்திருக்கிறது. இந்தத் தகவலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சதீஷ் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

செயற்கைக்கோள்கள்

விண்வெளியில் பூமியின் கீழ்வட்டப் பாதை என்பது 160 கி.மீ முதல் 2,000 கி.மீ வரை உள்ள பகுதிதான். இதில்தான் பெரும்பாலான தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் மற்றும் நேவிகேஷன் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டிருக்கும். இவை தவிர மற்ற நாடுகளைக் கண்காணிக்கும் வகையில் உளவு செயற்கைக்கோள்களும் இந்தப் பகுதியில் இருக்கும். இவை அதிவேகத்தில் பூமியைச் சுற்றிவந்துகொண்டிருக்கும். ஒரு செயற்கைக்கோளின் வேகம் நொடிக்கு 7.8 கி.மீ என்ற அளவில் இருக்கும். அதன்படி பார்த்தால் ஒரு மணி நேரத்தில் 28,000 கி.மீ தூரத்தை அது கடந்திருக்கும். இப்போது ஒரு செயற்கைக்கோளைத் தாக்கும் ஏவுகணையை மேல்நோக்கிச் செலுத்தும்போது அதிவேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோளைச் சரியாகத் தாக்க வேண்டும்.

மிஷன் சக்தி

3 பகுதிகளைக் கொண்ட இந்த ஏவுகணையின் முனைப் பகுதியில்தான் செயற்கைக்கோளைத் தாக்கும் கருவி வைக்கப்பட்டிருக்கும். ஏவுகணையின் அடிப்பகுதியில் இருக்கும் 2 பகுதிகள் எரிபொருளுக்காகக் கொடுக்கப்பட்டவை. இவை ஏவுகணையை அதன் இலக்கை நோக்கிச் செலுத்த உதவும். குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் அதன் முனைப் பகுதியிலிருந்து தாக்குதலுக்கான ஆயுதம் பிரிந்து செல்லும். நொடிக்கு 7.8 கி.மீ என்ற வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் செயற்கைக்கோளைத் தாக்க வேண்டும் என்றால் அதற்கான கணக்கீடுகள் மிகத் துல்லியமாக இருக்க வேண்டியது அவசியம். அதற்காகத் தரைப் பகுதியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதற்கேற்ற வகையில் சரியான கட்டளைகள் தொடர்ச்சியாகப் பிறப்பிக்கப்படும். தற்பொழுது DRDO பரிசோதித்த ஏவுகணை, `Kinetic kill’ என்ற முறையில் செயற்கைக்கோளை நேரடியாகத் தாக்கி அழித்துள்ளது. இந்த ஏவுகணை முழுக்க முழுக்க இந்தியத் தொழில்நுட்பம் மூலமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்துக்கான யுத்தகளமாக மாறுகிறதா விண்வெளி

A-SAT வகை ஏவுகணை

மிஷன் சக்தி பரிசோதனை வெற்றியடைந்ததற்கு பல்வேறு உலக நாடுகள் கருத்துத் தெரிவித்து வருகின்றன. அதில் தற்போது இந்தத் தொழில்நுட்பத்தைக் கையில் வைத்திருக்கும் அமெரிக்கா, சீனா தொடங்கி  A-SAT வகையை இன்னும் கண்ணிலேயே கண்டிராத பாகிஸ்தான் வரை அவர்களின் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். வார்த்தைகள் வெவ்வேறாக இருந்தாலும் விண்வெளியை இதுபோன்ற  ராணுவ நடவடிக்கைகளுக்காக  இந்தியா பயன்படுத்தக் கூடாது என்பதே அவர்கள் சொல்லவரும் கருத்தாக இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே அமெரிக்கா, சீனா இரண்டு நாடுகளும் இதே போன்ற பரிசோதனையை விண்வெளியில் செய்து பார்த்துள்ளன. இரண்டாம் உலகப் போரின் போதுதான் வான்வெளியின் முக்கியத்துவத்தைப் பல நாடுகள் உணர்ந்துகொண்டன. அப்போரில் போர் விமானங்களின் பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. போர் விமானங்களுக்கு அடுத்தகட்டமாக அதைவிடச் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு பாயும் ஏவுகணையை உருவாக்கும் முயற்சியில் உலக நாடுகள் கவனம் செலுத்தத் தொடங்கின. தற்போது அதற்கடுத்தபடியாக விண்வெளியிலேயே நிலைநிறுத்தப்படும் வகை ஆயுதங்களின் பக்கமாகப் பல நாடுகள் தங்கள் பார்வையைத் திருப்பியிருக்கின்றன. எதிர்காலத்தில் உலகில் அடுத்த வல்லரசாக யார் இருக்கப்போகிறார்கள் என்பது விண்வெளியில் யாருடைய ஆதிக்கம் அதிகமாக இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்துதான் அமையப்போகிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கும் இடையே இந்த மோதல் சமீபமாக அதிக அளவில் நடக்கிறது. கடந்த மாதம் வெளியான அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பெண்டகனின் ரகசிய அறிக்கையை அதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் மூலமாக விண்வெளியில் ஆயுதக் கட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குற்றம்சாட்டியிருந்தது அமெரிக்கா.

சீனா

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, ``விண்வெளி என்பது அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது. அதன் மீது எந்த ஒரு தனி நாடும் உரிமை கோர முடியாது. குறிப்பாக, அது ஒன்றும் அமெரிக்காவின் தனிப்பட்ட சொத்து கிடையாது’’ எனக் கடுமையான முறையில் பதில் அளித்தது. அந்த அறிக்கை வெளியாகி சில நாள்களிலேயே எதிர்கால ஆற்றல் தேவையைக் கருத்தில்கொண்டு விண்வெளி சோலார் பவர் பிளான்ட் ஒன்றை அமைக்கப்போவதாகத் தெரிவித்தது சீனா. விண்வெளியில் சேமிக்கப்படும் ஆற்றல் லேசர் கற்றைகளாகப் பூமிக்கு அனுப்பப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படும் எனக் கூறியது சீனா. அதன் பிறகுதான், ஒருவேளை விண்வெளி சோலார் பவர் பிளான்ட் என்பது சக்தி வாய்ந்த லேசர் ஆயுதமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டது. இதேபோல அமெரிக்காவும் விண்வெளியில் சக்தி வாய்ந்த லேசர் ஆயுதம் ஒன்றை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதுபோன்ற ஆயுதங்கள் மூலமாக ஒரு நாட்டின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் சில நொடிகளில் தாக்க முடியும். இப்படிப் பல நாடுகள் விண்வெளியை ஆயுதமயமாக்க முயலும்போது செயற்கைக்கோள் தடுப்பு அமைப்பு என்பது எதிர்காலத்தில் ஒரு நாட்டுக்கு அவசியமானதாக இருக்கும். மேலும், சில நாடுகள் உளவு செயற்கைக் கோள்கள் மூலமாகக் கண்காணிக்கும்போது அவற்றைத் தாக்கி அழிக்கவும் இதனால் முடியும். இதுபோன்ற விண்வெளி ஆயுதங்கள், செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மூலமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது ஒரு விஷயம்தான். எதிர்காலத்தில் போர் என்று வந்துவிட்டால் விண்வெளி என்பது முக்கியமான யுத்தக் களமாக இருக்கும். 


டிரெண்டிங் @ விகடன்