ஒரு வருடமாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் இல்லை... இப்படியும் ஒரு நாடு! - காரணம் தெரியுமா | This country doesn't get WhatsApp facebook for last one year

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (29/03/2019)

கடைசி தொடர்பு:18:40 (29/03/2019)

ஒரு வருடமாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் இல்லை... இப்படியும் ஒரு நாடு! - காரணம் தெரியுமா

ரிரு மணி நேரம் வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் முடங்கினாலே பலரும் பரபரக்கும் சூழ்நிலையில், கடந்த ஒரு வருடமாக இவற்றைப் பயன்படுத்தாமலேயே வாழ்ந்துவருகின்றனர் ஆப்பிரிக்காவில் உள்ள சாடு (Chad) நாட்டு மக்கள். இதற்குக் காரணம் அந்நாட்டு மக்கள் அல்ல; அந்நாட்டு அரசு. 2018-ல் சமூக வலைதளங்களுக்கு அரசால் விதிக்கப்பட்டுள்ள தடைதான், மக்களின் இந்த ஒரு வருட `வாட்ஸ்அப் வனவாசத்துக்கு' காரணம்.

இட்ரிஸ் டெபி

2016-லிருந்து சாடு நாட்டின் அதிபராக இருப்பவர் இட்ரிஸ் டெபி. இவருக்கு எதிராக தேசம் முழுக்கவே எதிர்ப்பலை இருந்தாலும், அதையும் மீறி பதவியில் அமர்ந்தவர். இந்த நிலையில் டெபி, 2033 வரை தொடர்ந்து அதிபராகவே தொடரலாம் என கடந்த ஆண்டு திடீரென அந்நாட்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இவருக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி அதிகரித்தது. சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் ஒன்றுதிரண்டு போராடத் தொடங்கினர். இதனால் தன்னுடைய ஆட்சிக்கு பாதிப்பு வரும் என நினைத்த டெபி, தேசத்திலுள்ள ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப், வைபர் போன்ற இன்டர்நெட் மெசேஞ்சர்கள் உட்பட அனைத்து இணைய தகவல்தொடர்பு சாதனங்களையும் முடக்க உத்தரவிட்டார். இது முதலில் மக்களிடையே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பேஸ்புக்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதியிலிருந்து இந்த சேவைகள் அனைத்தும் திடீரென முடங்கவே பொதுமக்கள் அந்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களைத் தொடர்புகொண்டு கேள்வியெழுப்பினர். தொடக்கத்தில் இது வெறும் தொழில்நுட்பக் கோளாறு எனச் சமாளித்த நிறுவனங்கள், பின்னர் இது அதிபரின் உத்தரவு எனச்சொல்லி ஒதுங்கிக்கொண்டன. மக்களிடையே இது பெரும் சிரமங்களை விளைவித்தாலும், டெபி நினைத்ததுபோலவே மக்களின் போராட்டங்கள் பெருமளவு குறைய ஆரம்பித்தது. இது போதாதா? எனவே தேசத்தின் பாதுகாப்பைச் சுட்டிக்காட்டி தொடர்ந்து இணைய சேவைகளை முடக்கிவைத்திருக்கிறது அந்நாட்டு அரசு. இது மக்களின் அன்றாட வாழ்வில் மட்டுமின்றி, தொழில்நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. ஏற்கெனவே வேலைவாய்ப்பு, தொழிலாளர் போராட்டங்கள், வறுமை, பசி பட்டினி எனப் பல காரணங்களைக் குறிப்பிட்டுப் போராடிய மக்களையே கண்டுகொள்ளாத அதிபர் இதற்கு மட்டும் செவிமடுப்பாரா என்ன? எனவே, இணைய துயரம் இன்னும் தொடர்கிறது.

வாட்ஸ்அப்

இதையடுத்து, இந்தத் தடையை நீக்கக்கோரி சமீபத்தில்கூட அந்நாட்டு நீதிமன்றத்தில் முறையிட்டனர் சிலர். ஆனால், நீதிமன்றமோ அதற்கு மறுத்துவிட்டது. மேலும், அரசும் இந்தத் தடையை தனக்கு சாதகமாகவே பார்ப்பதால் இப்போதைக்கு இதை நீக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க