எலும்புகள் உடைந்து... உடல் சிதைந்து... கரை ஒதுங்கிய 1100 டால்பின்கள்! | 1100 mutilated Dolphins are washed up in France beach

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (29/03/2019)

கடைசி தொடர்பு:22:00 (29/03/2019)

எலும்புகள் உடைந்து... உடல் சிதைந்து... கரை ஒதுங்கிய 1100 டால்பின்கள்!

பிரான்ஸ் நாட்டின் கடற்கரைகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக அளவிலான டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. 2019-ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து கடந்த மூன்று மாதங்களில் 1100 டால்பின்கள் இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளன. கரை ஒதுங்கிய அனைத்து டால்பின்களும் உடல் சிதைந்து எலும்புகள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதை உலகம் முழுவதிலும் உள்ள கடல்வாழ் உயிரின ஆர்வலர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மிகப்பெரிய பேசுபொருளாக மாற்றியுள்ளனர். அதிகப்படியான டால்பின்கள் இறப்புக்குத் தொழில்முறை மீன்பிடி முறைகளே காரணம் என்கின்றனர்.

ஒதுங்கிய டால்பின்கள்

சாதாரணமாக மீன்பிடிப்பவர்களைவிட இவர்கள் பெரிய பெரிய கப்பல்களில் பல்வேறு சாதனங்களைப் பயன்படுத்தி மீன் பிடித்தலை மேற்கொள்கின்றனர். இதனால் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுவதாக நெடுங்காலமாகப் பலரும் கூறிவருகின்றனர். டால்பின்களின் உடற்கூராய்வு அறிக்கைகளின்படி அதன் உடல்கள் பலமாக சிதைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தவறுதலாகத் தொழில்முறை மீன்பிடி வலைகளில் மாட்டிக்கொண்ட டால்பின்களை வலைகளைக் காப்பாற்றுவதற்காக வெட்டி கடலில் எறிந்துவிடுவதே இதற்குக் காரணம் என கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், டால்பின்களைப் பிடிப்பதும் தடை செய்யப்பட்ட ஒன்று. 

பிரான்ஸின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஃபிரான்சோஸ் டி ருகி (Francois de Rugy) டால்பின்களின் இறப்பைக் கட்டுப்படுத்துவதற்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். இதற்கான ஆய்வுகளும் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார். மீன்பிடி வலைகளில் ஆபத்தை உணர்த்தும்விதமான ஒலிக்கருவிகளைப் பொருத்தினால் டால்பின்கள் அந்த ஒலியைக் கேட்டு சென்றுவிடும், தவறுதலாக வலைகளில் சிக்காது என யோசனையும் கூறியுள்ளார். ஆனால், இதை எவரும் கடைப்பிடிக்கமாட்டார்கள், ஏனென்றால் மற்ற மீன்களும் வலையில் இருந்து தப்பிவிட வாய்ப்பிருப்பதாகப் பயன்படுத்தவே மாட்டார்கள்.

Dolphin

மேலும், இவை கடலுக்குள் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தலாம் எனவும் கூறிவருகின்றனர். பிரான்ஸில் கடந்த மூன்று மாதங்களில் இறந்த டால்பின்களின் எண்ணிக்கையானது கடந்த ஒரு வருடத்தில் இறந்த டால்பின்களின் எண்ணிக்கையைவிட அதிகம். 2017-ம் ஆண்டுதான் அதிகமான டால்பின்கள் இறந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 40 வருடங்களில் இதுதான் அதிகம். கடந்த மூன்று வருடங்களில்தான் மிக அதிகமான டால்பின்கள் இறந்துள்ளன. பிரான்ஸின் மீன்சந்தையில் குறைவான விலையில் மீன்களை விற்று லாபமிடும் போக்கு அதிகரித்ததால் போட்டியைத் தக்க வைக்க அதிகப்படியான மீன்பிடித்தல் நிகழ்கிறது. அதற்கு பிரான்ஸ் அரசும் அனுமதி அளித்துள்ளது.