`எங்களோட நிறுத்திடாம, எங்க ஜூனியர்ஸையும் ஊக்கப்படுத்துறோம்!' மாணவர்களின் அசத்தல் முயற்சி | college students encouraging juniors

வெளியிடப்பட்ட நேரம்: 10:51 (30/03/2019)

கடைசி தொடர்பு:10:51 (30/03/2019)

`எங்களோட நிறுத்திடாம, எங்க ஜூனியர்ஸையும் ஊக்கப்படுத்துறோம்!' மாணவர்களின் அசத்தல் முயற்சி

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி மாணவர்களின் Peace club என்ற புதுமையான முயற்சி, பல்வேறு தரப்பினரிடம் வரவேற்பைப் பெற்று , மதுரை கல்லூரி மாணவர்களிடையே கவனம் ஈர்த்துவருகிறது. Peace club என்பது தனிப்பட்ட அமைப்போ, அறக்கட்டளையோ இல்லை. 30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து, ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்து, அவர்களுடைய வாழ்வாதாரத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்துவருகின்றனர். இதுகுறித்து Peace club ஒருங்கிணைப்பாளருள் ஒருவரான யோகேஷிடம் பேசினோம். 

"எங்களுடைய களரி அமைப்பிலிருந்து, சமூக வன்முறைகளுக்கு எதிரான ஒரு சின்ன செயல்பாடாகத்தான் இந்த கிளப் ஆரம்பிச்சோம். சமூகத்துல இப்போ நடக்குற எல்லா பிரச்சனைக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையா இருந்து, உதவி செஞ்சு வாழாம...தனித்தனியா தொடர்புகளற்று இருக்கிறதுதான் காரணம். முழுக்க முழுக்க சமூக அக்கறையுள்ள மாணவர்கள் சேர்ந்து, ஒரு சின்ன மாற்றத்திற்கான விதையையாவது விதைக்கிறதுதான் எங்கள் நோக்கம். 30 மாணவர்கள் சேர்ந்துதான் முதல்ல Peace club ஆரம்பிச்சாங்க. இன்னிக்கு, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களிடமிருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. கிளப்பில் உள்ள மாணவர்கள், மாசத்துக்கு ஒரு தடவையாச்சும் சந்திச்சு, சமூகப் பிரச்னைகளை வெளிப்படையா பேசுவாங்க. எல்லா மாணவர்களும் அவுங்க வீட்ல, 'Peace Bank' வச்சிருப்பாங்க. தினமும் அவுங்க செய்யுற ஏதாவது ஒரு அநாவசியச் செலவை தவிர்த்துவிட்டு, அந்தப் பணத்தை Peace Bankல  போட்டு சேமிப்பாங்க. அது அவுங்களுக்கு கஷ்டமாவும் தெரியாது. 30 நாளுக்குப் பிறகு, 30 பேர்கிட்டையும் ஒரு கணிசமான தொகை மிஞ்சும். அதை வைத்து ஆதரவற்ற குழந்தைகளை சந்திச்சு, அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்வோம்" என்றார்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவரும், ஒருங்கிணைப்பாளருமான சிவாவிடம் தொடர்பு கொண்டபோது, "எங்க பசங்க 40 பேர் இப்போ Peace Club உறுப்பினரா இருக்கோம். இன்னும் வரவேற்பு அதிகரிச்சுக்கிட்டேதான் இருக்கு. பொதுவா, 'காலேஜ் படிக்கிற வயசுலயும், படிச்சு முடிச்ச பிறகும் இப்படிதான் ஆர்வக்கோளாறுல சேவை செய்யணும், அமைப்பு ஆரம்பிக்கணும்னு கெளம்புவீங்க. நாலே மாசம்தான்... நாலு காசு பார்க்க ஆரம்பிச்சுட்டா எல்லாரும் காணாம போயிடுவீங்க' ன்னு நெகட்டிவ் கமென்டுகள் சொல்றதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்கும். இப்படி எத்தனை நாளுக்கு பேசிட்டே இருக்கப்போறோம்? மாற்றம் நமக்குள்ள இருந்துதானே ஆரம்பிக்கணும்னு ஒரே குறிக்கோளோட செயல்படுறோம். கடந்த மாதம் Peace clubல இருந்து, மதுரை சுற்றுவட்டாரத்துல இருக்கிற காப்பகக் குழந்தைகளுக்காக 'Soap-Making' வொர்க்ஷாப் நடத்தினோம். குழந்தைகள் எல்லாரும் ஆர்வமா சோப் செய்றதுக்கு கத்துக்கிட்டாங்க. இந்த கைத்தொழில் இன்னிக்கு இல்லாவிட்டாலும், கண்டிப்பா பின்வரும் காலத்துல நிச்சயம் அவுங்களுக்கு உதவும். எங்களோட நிறுத்திடாம, எங்க ஜூனியர்ஸ்கிட்டயும் Peace-Club பத்தி சொல்லி , இன்னும் நிறையப் பசங்கள ஊக்கப்படுத்துறோம். என்ஜினீயரிங் படிச்சவங்கள்லாம் விஐபி ஸ்டேட்டஸ் போட்டுட்டு புலம்புறதுக்கு மட்டும்தானா? கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்!" என்று சிரித்தார்.