‘ஓட்டு போட்டால் சிகிச்சை இலவசம்!’ - இப்படியும் ஒரு மருத்துவர் | poll vote get free treatment

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:09 (02/04/2019)

‘ஓட்டு போட்டால் சிகிச்சை இலவசம்!’ - இப்படியும் ஒரு மருத்துவர்

'வாக்களித்துவிட்டு கைவிரலில் உள்ள அடையாள மையைக் காட்டும் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கத் தயார்' என்று சருமநோய் மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

'வாக்களித்துவிட்டு, கைவிரலில் உள்ள அடையாள மையைக் காட்டும் நோயாளிகளுக்கு, இலவச சிகிச்சை அளிக்கத் தயார்' என்று சருமநோய் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்

மருத்துவர்கள், தங்களிடம் சிகிச்சைக்காக வருபவர்களிடம் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகப் பெற்றுக்கொள்வது வழக்கம். ஒரு சில டாக்டர்கள் குறைந்த தொகையை வாங்கிக்கொள்வது, இலவசமாக சிகிச்சை அளிப்பது என விதிவிலக்காக இருப்பார்கள். ஆனால், கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த சருமம் மற்றும் வெண்புள்ளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணரான டாக்டர் ஸ்ரீதர், வித்தியாசமாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, இந்தச் சலுகையை அளிக்க இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் வாக்களித்துவிட்டு வருபவர்கள், தமது விரலில் இடப்பட்டுள்ள அடையாள மையைக் காட்டி, இவரிடம்  இலவசமாக சிகிச்சைபெற்றுக் கொள்ளலாம்.  

அவரது இந்த அறிவிப்பு எல்லோருக்கும் தெரியும்விதமாக, மங்களூர் பன்ட்ஸ் ஹாஸ்டல் சர்க்கிளில் உள்ள அவரது கிளினிக் வாசலில் ஒரு போர்டு வைத்துள்ளார். இதுபோன்று வித்தியாசமான செயல்களை அடிக்கடி செய்வதில் அவர் வல்லவர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, தொடர்ந்து மூன்று மாதங்கள் யாரிடமும் கட்டணம் வாங்கிக்கொள்ளாமல் இலவசமாக சிகிச்சை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து அவர் கூறும்போது, 'வேட்பாளர் சரியில்லை என்பதைக் காரணமாகக் கூறி பலர் வாக்களிப்பதில்லை; அது தவறு. ஒவ்வொருவரும் தமது  ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவேண்டியது முக்கியம். அதற்காகவே, இந்த இலவச சேவையை அறிவித்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.