``இந்தியாவுக்காக பிரத்யேக கார்கள்!’’ - ரெனோ இந்தியா நிர்வாக இயக்குநர் வெங்கட்ராம் | Renault India CEO venkatram mamillapalle Interview

வெளியிடப்பட்ட நேரம்: 05:22 (02/04/2019)

கடைசி தொடர்பு:05:22 (02/04/2019)

``இந்தியாவுக்காக பிரத்யேக கார்கள்!’’ - ரெனோ இந்தியா நிர்வாக இயக்குநர் வெங்கட்ராம்

``இந்தியாவுக்காக பிரத்யேக கார்கள்!’’ - ரெனோ இந்தியா நிர்வாக இயக்குநர் வெங்கட்ராம்

ரெனோ இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார், வெங்கட்ராம் மாமில்லப்பள்ளி. ரஷ்யாவில் ரெனோ நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தியவர் என்ற பெருமையுடன் தற்போது இந்தியா வந்திருக்கிறார். ரெனோ இந்திய நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் புதிய கார்கள் பற்றி வெங்கட்ராமிடம் பேசினோம்.

ரெனோ இந்தியாவின் புது நிர்வாக இயக்குறர் வெங்கட்ராம்

1. உங்கள் பார்வையில் ரெனோ இந்தியா?

ரெனோ-நிஸான்-மிட்சுபிஷி அலையன்ஸ், உலகளவிலான கார்கள் விற்பனையில் இரண்டாம் இடத்துக்கு வளர்ந்துள்ளது. தற்போது உலகில் விற்பனையாகும் 9 கார்களில் 1 கார் எங்களுடையது. இந்த வளர்ச்சியில் இந்தியாவின் பங்கும் உண்டு. மாருதி, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுடன் போட்டிபோடும் அளவு விற்பனையில்லை என்றாலும், குறைந்த காலத்தில் வலுலாக இந்தியாவில் கால் ஊன்றி விட்டது ரெனோ. க்விட் மற்றும் டஸ்டர், இந்தியாவின் ஃபேவரிட் மாடல்களாக இருக்கின்றன. தற்போது டஸ்ட்டர், க்விட், கேப்சர் மற்றும் லாஜியின் விற்பனை மாருதியின் விற்பனையில் 24 சதவிகிதமாக இருக்கிறது. ஷார்ட் டெர்ம் கோல் என முடிவுசெய்ததை அடைந்துவிட்டோம். இப்போது அடுத்தகட்ட வளர்ச்சிக்கான நேரம் வந்துவிட்டது.

2. ரெனோ இந்தியாவில் நீங்கள் கொண்டுவர திட்டமிட்டிருக்கும் மாற்றங்கள்?

மூன்று விஷயங்கள் முதலில், ரெனோ மட்டுமல்ல, கூட்டணி நிறுவனங்கள், டீலர்கள், டிசைனர்கள், தொழிற்சாலை நிர்வாகிகள் என எல்லோருக்கும் சேர்த்து ஒரே நோக்கத்தை உருவாக்கவேண்டும். இரண்டாவது, காரின் தரம், இன்ஜினீயரிங், சர்வீஸ் என எல்லாத் தரப்பிலும் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். மூன்றாவது, கார் விற்பனையை இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும். இந்த மூன்றில்தான் என் முழுக் கவனமும் இருக்கும்.

3. ரெனோ இந்தியாவின் எதிர்காலத் திட்டம் என்ன?

அடுத்த மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு 1,50,000 கார்களை விற்பனை செய்யவேண்டும். தற்போது 75,000 கார்கள் விற்பனை செய்கிறோம். மாருதி போன்ற பெரிய நிறுவனங்களிடம் போட்டிபோட வேண்டும் என்ற விருப்பமில்லை. அதற்கான நேரமும் இதுவல்ல. புதிய செக்மென்ட்டுகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் கையில் எடுத்திருக்கும் உத்தி. உலகளவில் விற்பனையாகும் கார்களை இந்தியாவுக்குக் கொண்டு வருகிறோம் என்றில்லாமல், இந்தியாவுக்காக பிரத்யேகமான கார்களைத் தயாரிக்கவேண்டும். அதிக விற்பனை மற்றும் புதிய கார்கள் மூலம் டீலர்களுக்கான லாபத்தை அதிகரிக்கவேண்டும்.

ரெனோ டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

4. ரெனோவிடமிருந்து என்னென்ன புதிய கார்களை எதிர்பார்க்கலாம்?

இந்த ஆண்டு இரண்டு ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் வரப்போகின்றன. அதைத் தவிர்த்து, இந்த ஆண்டு ஒரு மாடலும் (டெஸ்ட்டிங்கில் இருக்கும் சிறிய MPV). அடுத்த ஆண்டு ஒரு புது மாடல் காரும் வரப்போகிறது. இரண்டுமே இந்தியாவில் இல்லாத புது செக்மென்ட்டில் வருகின்றன.

Renault RBC

5. டீலர்ஷிப்களை அதிகப்படுத்தும் திட்டம் உள்ளதா?

ரெனோவின் முகமாக இருப்பது டீலர்கள்தாம். தற்போது ரெனோ இந்தியாவிடம் 120 டீலர்கள் இருக்கிறார்கள். இப்போதைக்கு டீலர்களை அதிகரிக்கும் திட்டமில்லை. அதற்குப் பதிலாக, இருக்கும் டீலர்கள் மூலம் அவுட்லெட்களை அதிகரிக்கப்போகிறோம். கிராமப்புறங்களில் ஷோரூம்களை அதிகமாக நிறுவும் திட்டமும் உண்டு.

 

6. இந்தியாவின் எதிர்காலம் மின்சார கார்களா?

எதிர்காலம் என்பது நிச்சயம் மின்சார கார்கள்தாம். ஆனால், தற்போது இந்தியாவில் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 16 ரூபாய். இன்னும் மின்சாரத் தட்டுப்பாடு உள்ள மாநிலங்கள் இங்கு இருக்கின்றன. எலெக்ட்ரிக் கார்களுக்கான சாலைகளும் கட்டுமானமும் முழுமையாக இல்லை. இந்நிலையில் மின்சார கார்கள் என்பது நாம் உடனடியாக விற்பனை செய்யவேண்டிய பொருள் கிடையாது. அதற்கான நேரம் வரும்போது ரெனோவின் மின்சார கார்களை இந்தியாவில் பார்க்கலாம். 


டிரெண்டிங் @ விகடன்