Published:Updated:

20 வருட எக்ஸ்பயரி கொண்ட ஈஃபில் டவரின் வயது 130 #VikatanInfographics

20 வருட எக்ஸ்பயரி கொண்ட ஈஃபில் டவரின் வயது 130 #VikatanInfographics
20 வருட எக்ஸ்பயரி கொண்ட ஈஃபில் டவரின் வயது 130 #VikatanInfographics

முதல் இரண்டு மாடிகளின் பணி முழுவதுமாக முடிந்ததால் முதல் மாடியில் காபி ஷாப் மற்றும் பல்வேறு உணவகங்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து மூன்றாவது மாடிக்கான பணியை முடித்த பிறகு, `எடுக்ஸ் லிஃப்ட்' நிறுவப்படுகிறது. பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்ட கஸ்டவ், குறிப்பிட்ட நாளுக்குள், அதாவது சுமார் இரண்டு ஆண்டு, இரண்டு மாதம், ஐந்து நாளில் 324 மீட்டர் உயரம் உள்ள கோபுரத்தைக் கட்டி முடிக்கிறார்.

லக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் ஈஃபில் டவர், சென்ற மார்ச் 31-ம் தேதியில் 130-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளது. 20 வருடம் மட்டுமே வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டு பாரிஸ் நகரில் கட்டப்பட்ட ஈஃபில், இப்போது 130 வருடத்தைக் கடந்து கம்பீரமாக நின்றுகொண்டிருக்கிறது. 

முதலில், ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் ஈஃபில் டவர் கட்ட, அரசிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், ஸ்பெயின் அரசு மறுத்துவிட்டதால் பாரிஸில் கட்ட முடிவெடுக்கப்பட்டது. 1889-ல் பிரெஞ்சுப் புரட்சியோடு 100-ம் ஆண்டு நினைவைக் கொண்டாடும் வகையில் `எக்ஸ்போ பாரிஸ்' என்ற உலகக் கண்காட்சி விழாவை நடத்த திட்டமிட்டனர். அந்த விழாவின் நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்ட ஈஃபில் டவர், தற்போது பிரான்ஸ் நாட்டின் அடையாளமாக மாறியிருக்கிறது. 

இரண்டு வருடத்தில் கண்காட்சி நடைபெறுவதால் அதற்குள் முடிக்க வேண்டும் என்ற பதிலை மட்டுமே கஸ்டவ் ஈஃபில் அனுமதியாகப் பெற்றிருந்தார். தன்னம்பிக்கையை மட்டுமே தன்னுடன் வைத்துக்கொண்டு 1887-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி டவரைக் கட்ட அடித்தளத்துக்குக் குழி தோண்டும் பணியைத் தொடங்கினார் கஸ்டவ். பணியை ஆரம்பித்தபோதே பல்வேறு தடங்கல்கள் வந்தன. சுற்றுப்புறமெங்கும் பல்வேறு பாதிப்புகள், இடநெருக்கடிகள் ஏற்படும் என, 47 கலைஞர்கள் எதிர்ப்புக் கடிதம் எழுதினர். பல்வேறு தடங்கல்களையும் மீறி பிப்ரவரி 23-ம் தேதி அடித்தளத்துக்குக் குழிதோண்டும் பணியை நிறைவுசெய்தார். பல்வேறுகட்ட ஆலோசனைக்குப் பிறகு, மார்ச் 4-ம் தேதி 300 எஃகு தொழிலாளர்களுடன் அடித்தளம் அமைக்கும் பணி தொடங்கியது.

ஜூன் 16-ம் தேதி அடித்தளம் அமைக்கும் பணி முடிந்தது. ஜூலை மாதம் உலோகக் கட்டமைப்புடன்கூடிய கட்டுமானப்பணி தொடங்கியது. 18,038 இரும்புத் துண்டுகள், 2.5 மில்லியனுக்கும் அதிகமான ஆணிகளுடன் கோபுரம் கட்டி எழுப்பப்பட்டது. இரவு பகல் பாராமல் உழைத்த தொழிலாளர்கள், டிசம்பர் 18-ம் தேதி கோபுரத்தின் தூண்கள், சாரம்கட்டும் பணியை முடித்து, முதல் மாடி பகுதியின் கட்டுமானப்பணியை ஆரம்பித்தனர். அடுத்த மூன்று மாதத்தில் முதல் மாடி கட்டுமானம் முடிந்தது. ஒவ்வொரு முறையும் தொழிலாளர்கள் உணவு உண்ணவும், டீ, காபி குடிக்கவும் கீழே இறங்குவதால் அதிக நேரம் வீணானது. இதற்கு முடிவுகட்ட நினைத்த கஸ்டவ், ஏப்ரல் 1-ம் தேதி தொழிலாளர்களுக்காக முதல் மாடியிலேயே உணவகத்தை நிறுவினார்.

மே 7-ம் தேதி அலங்கார வளைவு கட்டப்பட்டது. `வேலை அதிகம். ஆனால், போதிய சம்பளம் தருவதில்லை’ என்று  தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். பிரச்னையை சுமுகமாக முடித்த கஸ்டவ், மீண்டும் பணியைத் தொடங்கினார். அதன் பிறகு, அடுத்த ஆறு மாதத்தில் இரண்டாவது மாடி வேலை முடிக்கப்பட்டு, மூன்றாவது மாடிக்கான பணியை ஆரம்பித்தார். கட்டுமானப்பணிக்குத் தேவையான பொருள்களை மேலே எடுத்து வருவது சிரமமாக இருந்ததால், 1889 ஜனவரி 5-ம் தேதி வடக்கு மற்றும் தெற்கு தூண்களில் `ஓடிஸ்' என்ற லிஃப்ட் நிறுவப்பட்டது.

முதல் இரண்டு மாடிகளின் பணி முழுவதுமாக முடிந்ததால் முதல் மாடியில் காபி ஷாப் மற்றும் பல்வேறு உணவகங்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து மூன்றாவது மாடிக்கான பணியை முடித்த பிறகு, `எடுக்ஸ் லிஃப்ட்' நிறுவப்படுகிறது. பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்ட கஸ்டவ், குறிப்பிட்ட நாளுக்குள், அதாவது 2 ஆண்டு, 2 மாதம், 5 நாளில் 324 மீட்டர் உயரம் உள்ள கோபுரத்தைக் கட்டி முடிக்கிறார். இதன் உச்சியில் உள்ள ஆண்டனாவின் உயரம் மட்டும் 24 மீட்டர். 40 வருடத்துக்கும்மேல் உலகிலேயே உயரமான கோபுரம் என்ற பெயரைத் தாங்கி நின்றது ஈஃபில் டவர். ஏழு வருடத்துக்கு ஒரு முறை 50 - 60 டன் வண்ணப்பூச்சு அடிக்கப்படுகிறது. கோடைக்காலங்களில் 18 - 20 செ.மீ விரிவடைவதாகவும், குளிர்காலங்களில் 18 - 20 செ.மீ சுருங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது.

1889-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி எக்ஸ்போ பாரிஸ் உலகக் கண்காட்சியில் திறப்பு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் `இரும்புப் பெண்மணி' என்று அழைக்கப்படும் ஈபிள் டவர், மே 15-ம் தேதி பொதுமக்களின் பார்வைக்காக திறந்துவைக்கப்பட்டது. முதல் வருடத்திலேயே 19,68,287 பேர் ஈபிள் டவரைப் பார்வையிட்டனர். தற்போது ஒவ்வொரு வருடமும் 60 முதல் 70 லட்சம் பேர் வரை வந்து செல்வதாக, புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இதுவரை 30 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். ஆரம்பக்கட்டத்தில் பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வந்தாலும், இதன் அழகாலும் காலப்போக்கினாலும் அனைவரும் விரும்பும் ஒன்றாக மாறிவிட்டது. 1950-களில் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பியாகப் பயன்படுத்தப்பட்டது. 2000-த்தில் வானொலி ஒலிபரப்பியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. 2011-ல் அனைத்து ஆன்டனாவும் எடுக்கப்பட்டுவிட்டன. மூன்று தளங்களைக்கொண்ட இதில், முதல் இரண்டு தளங்களில் உணவகங்கள் இருக்கின்றன. மூன்றாவது தளத்தில் பல்வேறு உலக நாடுகளின் கொடிகள் காணப்படுகின்றன. 8.56 மில்லியன் கிலோ எடையுள்ள இந்த ஈஃபில் டவரைக் கட்ட, 7.8 மில்லியன் பிராங்கு செலவானது. அதாவது இந்திய மதிப்பில் 54.215 கோடி ரூபாய்.  

தற்போது 130-வது விழாவைச் சிறப்பிக்கும் வகையில் ஈபிள் டவர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் எனக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு