`வயிற்றில் இருந்த 22 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்'...இறந்து கரை ஒதுங்கிய கர்ப்பிணித் திமிங்கிலம் | Plastic found in Dead Pregnant Sperm Whale

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (04/04/2019)

கடைசி தொடர்பு:07:58 (04/04/2019)

`வயிற்றில் இருந்த 22 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்'...இறந்து கரை ஒதுங்கிய கர்ப்பிணித் திமிங்கிலம்

திமிங்கிலம்

வயிற்றில் கருவுடன் இறந்து போன பெண் திமிங்கிலம் ஒன்று கடந்த வாரம் வியாழக்கிழமையன்று இத்தாலிக்கு அருகே இருக்கும் சர்டினியா என்ற தீவின் கடற்பகுதியில் கரை ஒதுங்கியிருக்கிறது. அதன் வயிற்றிலிருந்து சுமார் 22 கிலோ கிராம் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்தக் கழிவுகளே இரண்டு உயிர்களின் இறப்புக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. இது போலத் திமிங்கிலம் ஒன்று இறந்து கரை ஒதுங்குவதும் அதன் வயிற்றிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் கிலோ கணக்கில் கண்டெடுக்கப்படுவதும் முதல் முறையல்ல என்றாலும் சமீப காலமாக இது போலச் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. மனிதன் இதுவரை இல்லாத அளவுக்கு இயற்கையின் கட்டமைப்பைச் சிதைத்துக்கொண்டிருக்கிறான் என்பதற்குச் சாட்சியாக இருக்கின்றன இது போன்று இறக்கும் திமிங்கிலங்கள். 

கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள்

திமிங்கிலம்

திமிங்கிலம் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் உணவுக்காக வேட்டையாடும் போது உணவுடன் சேர்ந்து பிளாஸ்டிக் கழிவுகளும் வாயினுள் சென்று விடுகின்றன. சிறிய அளவு பிளாஸ்டிக் துண்டுகள் என்றால் திமிங்கிலத்தின் கழிவுகளுடன் வெளியேறி விடும். அதே நேரம் பெரிய அளவில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற வழியில்லாமல் வயிற்றினுள்ளேயே தங்கி விடுகின்றன. இவற்றின் வாய்ப்பகுதி பெரிதாக இருக்கும் என்பதால் பெரிய அளவு கழிவுகள் செல்வதற்கு வசதியாக அமைந்து விடுகிறது. சர்டினியாவில் கரை  ஒதுங்கியது திமிங்கிலம் நீளம் 26 அடியாக இருந்திருக்கிறது. இது Sperm Whale என்ற வகையைச் சேர்ந்தது. அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து 22 கிலோ அளவு எடை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் கழிவுகள்

``மின்சார வேலைகளுக்குப் பயன்படும் குழாய், பிளாஸ்டிக் தகடு, ஷாப்பிங் பைகள், மீன் தூண்டிலில் பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் பார் கோடு அழியாத நிலையில் இருக்கும் சோப்புத் தூள் பாக்கெட்டுகள்" ஆகியவை இதில் அடக்கம் என இதைப் பரிசோதனை செய்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த பிளாஸ்டிக் குப்பைகள் வயிற்றின் அளவில் மூன்றில் இரண்டு பங்கு இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றன. அதிகக் கழிவுகள் காரணமாக  உட்கொண்ட உணவைச் செரிமானம் செய்ய முடியாமல் இறந்திருக்கிறது திமிங்கிலம். அதோடு சேர்த்து வயிற்றில் இருந்த கருவும் இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மத்திய தரைக்கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அபாயத்தைப் பற்றி எச்சரிக்கை விடுத்திருக்கிறது உலக வனவிலங்கு அறக்கட்டளை அமைப்பு. 1,50,000 முதல்  5,00,000 டன்கள் வரை ஒவ்வொரு வருடமும் மனிதர்கள் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் போய்ச் சேர்கிறது என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கிறது உலக வனவிலங்கு அறக்கட்டளை அமைப்பு. 

இறந்து போய் கரை ஒதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளின் படங்கள் இவை:

பிளாஸ்டிக் கழிவு குவியல் 

பிளாஸ்டிக் கழிவு குவியல் 

தூண்டில் கயிறு 

தூண்டில் கயிறு 

பிளாஸ்டிக் பாக்கெட் 

பிளாஸ்டிக் பாக்கெட்