காளையின் பிடியில் பங்குச்சந்தை... சென்செக்ஸ் 178; நிஃப்டி 68 புள்ளிகள் உயர்வு! | Sensex ends 178 pts higher, Nifty tops 11,600

வெளியிடப்பட்ட நேரம்: 18:02 (05/04/2019)

கடைசி தொடர்பு:18:38 (05/04/2019)

காளையின் பிடியில் பங்குச்சந்தை... சென்செக்ஸ் 178; நிஃப்டி 68 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை

நடப்பு வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையிலிருந்தே, மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இரண்டும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகின. பங்கு வர்த்தகத்தின் இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை - 05.04.2019), பி.எஸ்.இ. சென்செக்ஸ் 177.51 புள்ளிகள் அதிகரித்து, 38,862.23 என்கிற நிலையிலும்,  எஸ்.எஸ்.இ நிஃப்டி 67.95 புள்ளிகள் அதிகரித்து 11,665.95 என்கிற நிலையிலும் முடிந்திருக்கிறது.

உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே, வர்த்தகப் போர் நடந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக, இந்திய பங்குச்சந்தையில் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால், இன்றைய வர்த்தகத்தில் மெட்டல் மற்றும் ஐ.டி துறை சார்ந்த பங்குகள் அதிக ஏற்றத்தைச் சந்தித்திருக்கின்றன. அதில், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு 3.36% என்கிற உச்சத்தைச் சந்தித்திருக்கிறது. இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து, வேதாந்தா, பஜாஜ் ஃபைனான்ஸ், டி.சி.எஸ், இண்டஸ்இண்ட் பேங்க், இன்போசிஸ், ஓ.என்.ஜி.சி, கோட்டக் பேங்க், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், ஹெச்.டி.எஃப்.சி, எம் அண்டு எம் மற்றும் ஐ.டி.சி ஆகிய நிறுவனங்கள் டாப் 10 ஏற்றப் பங்குகள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. 

எஸ்.பி.ஐ, பவர் கிரிட், ஹீரோ மோட்டோ கார்ப், என்.டி.பி.சி, சன்பார்மா, ஹெச்.யு.எல், ஹெச்.சி.எல் டெக், யெஸ் பேங் மற்றும் ஆசியன் பெயின்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் டாப் 10 இறக்கப் பங்குகள் பட்டியலில் இருக்கின்றன. இந்த நிறுவனங்களின் பங்குகள் 1.46% வரை குறைந்து வர்த்தகமாகியிருக்கின்றன.