மாணவர்கள் ஆடிய `மங்காத்தா'... 1,493 ஐபோன்களை இழந்த ஆப்பிள் நிறுவனம்! | 2 Chinese students cheat apple using fake iPhones

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:14:18 (06/04/2019)

மாணவர்கள் ஆடிய `மங்காத்தா'... 1,493 ஐபோன்களை இழந்த ஆப்பிள் நிறுவனம்!

இந்த `மங்காத்தா' விளையாட்டில் சிக்கிய ஆப்பிள் நிறுவனம் பல லட்சம் டாலர்களை இழந்திருக்கிறது. ஹைடெக் திருடர்கள் எல்லாம் பெரிய நிறுவனத்திலேயே கைவைக்கிறார்கள், கடைசியில் சிக்கியும் விடுகிறார்கள்.

மாணவர்கள் ஆடிய `மங்காத்தா'... 1,493 ஐபோன்களை இழந்த ஆப்பிள் நிறுவனம்!

வீன டிஜிட்டல் உலகத்தில் பணத்திருட்டு, தகவல் திருட்டு, பொருள்கள் திருட்டு, பண மோசடிகள் எனப் பல்வேறுவிதமான ஏமாற்றுவேலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. லித்துவேனியா நாட்டைச் சேர்ந்த எவால்டாஸ் ரிமாசாஸ்கஸ் (Evaldas Rimasauskas) என்ற நபர், கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களையே ஏமாற்றி கோடிகோடியாக மோசடி செய்த வழக்கில் வரும் ஜூலை 25-ம் தேதி அமெரிக்காவில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. எப்படியெல்லாம் பாதுகாப்பாக இயங்குவது என்று யோசித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பதற்கும் ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு பொறியியல் படிக்க வந்த இரு சீன மாணவர்கள் போலியான ஐபோன்களை இறக்குமதி செய்து, ஆப்பிள் நிறுவனத்தில் புதிய போன்களாக மாற்றி 9,00,000 டாலர் அளவுக்கு பணத்தை மோசடி செய்துள்ளனர்.

ஆப்பிள் ஐபோன்

சீனாவைச் சேர்ந்த Yangyang Zhou என்ற மாணவர் அமெரிக்காவில் உள்ள ஓரிகன் (Oregon) மாநிலப் பல்கலைக்கழகத்தில் தனது பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே ஓரிகனில் லின் பெண்டன் கல்லூரியில் பொறியியல் பயின்று வந்தவர், சீனாவைச் சேர்ந்த குவான் ஜியாங் (Quan Jiang). இரண்டு சீன மாணவர்கள் அமெரிக்காவில் இணைந்து, போலியான ஐபோன்களை சீனாவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்தனர். அந்த ஐபோன்கள் பார்ப்பதற்கு ஒரிஜினல் ஐபோன் வடிவத்தில் இருந்தது. அதை ஆப்பிள் நிறுவனத்தின் கிளையில் கொடுத்து, அதைப் பழுதுபார்த்துக் கொடுக்குமாறும், இல்லையெனில் அதை மாற்றித் தருமாறும் கேட்டிருக்கின்றனர். அதற்குச் சம்மதித்த ஆப்பிள் கிளையும், போலி ஐபோனை வாங்கிக் கொண்டு ஒரிஜினல் ஐபோனைக் கொடுத்திருக்கிறது. தாங்கள் பெற்ற ஒரிஜினல் ஐபோன்களை சீனாவில் விற்பனை செய்து அதற்கான பணம் குவான் ஜியாங்கின் தாயாரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு புதிய ஐபோனுக்கு 600 டாலர் வருமானமாக இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. 

2017-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இருவரும் இந்த மோசடிச் செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இருவரும் எல்லா இடங்களிலும் போலியான முகவரிகள் மற்றும் தொடர்பு எண்களைக் கொடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது, காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இவர்களில் Zhou என்பவர் மீது சட்டவிரோத ஏற்றுமதி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நண்பர் ஜியாங் மீது பொருள்களைக் கடத்துதல் மற்றும் பண மோசடி என வழக்குப் பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.  

ஐபோன்

ஆப்பிள் ஐபோன்களை மாற்றும்போது, போலியான ஐபோன்களை உடனடியாகக் கண்டறியலாமே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், இறக்குமதி செய்யப்பட்டவை எல்லாமே அச்சு அசலாக நிஜ ஐபோன்கள் போலவே தயாரிக்கப்பட்ட போலி ஐபோன்கள். மேலும் இன்னொரு ட்விஸ்ட்டும் இருக்கிறது. அவர்கள் மாற்றிய ஆப்பிள் நிறுவனக் கிளையில் சாதனங்களின் நம்பகத்தன்மையைப் பரிசோதிக்கும் அனுமதி அந்தக் கடையின் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும், கொடுத்த ஐபோன்களும், ஆன் ஆகாமலேயே இருந்திருக்கிறது. ஐபோன் ஆன் ஆகவில்லை என்பதுதான் இங்கு கம்ப்ளெய்ன்ட். இதனால்தான் இரு சீன நபர்களும் அதிக அளவிலான போலி ஐபோன்களை மாற்றி ஒரிஜினல் ஐபோன்களை சீனாவில் விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். முதலில் ஆரம்பித்த இந்தப் பரிமாற்றம் நல்ல வருமானத்தைக் கொடுக்கவே அடுத்த முறை வேறொரு முகவரி மற்றும் தொடர்பு எண்களைக் கொடுத்து, அடுத்த போலி ஐபோன்களை மாற்றியுள்ளனர்.

ஆப்பிள் நிறுவன ஊழியர்களும் ஐபோன் உத்தரவாதத்தின் அடிப்படையின் கீழ் போலி ஐபோனைக் கொண்டு மாற்றிக் கொடுத்துள்ளனர். அதிகமான கம்ப்ளெய்ன்ட்கள் வரவே போனை மாற்ற வரும் ஜியாங்கை நோட்டம் விட ஆரம்பித்தது, ஆப்பிள் நிறுவனம். அதன் பின்னர் கையும் களவுமாக அவரைப் பிடித்து விசாரிக்கும்போதுதான் அவர்கள் இரண்டுபேர் என்பது அந்த நிறுவனத்துக்குத் தெரிந்திருக்கிறது. இதுபோக அதிகமான போன்களை மாற்றியிருப்பது கேட்டு அதிர்ச்சியடைந்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

கைது

இவர்கள் மொத்தமாக மாற்றக் கொடுத்த ஐபோன்களின் எண்ணிக்கை 3,069. இதற்கு ஆப்பிள் 1,493 புதிய ஐபோன்களை வழங்கியிருக்கிறது. ஒரு ஐபோனுக்கு 600 டாலர் என்பது சந்தை மதிப்பு. இதன்மூலம் 9,00,000 டாலர்களை இழந்திருக்கிறது, ஆப்பிள் நிறுவனம். இதை உள்ளிருந்து செய்தவர், ஜியாங். வெளியிலிருந்து ஏற்றுமதி செய்திருக்கிறார், Zhou. ஆப்பிள் நிறுவனம் இதுகுறித்து நோட்டீஸ் விட்டும் ஷீ அதற்குப் பதிலளிக்கவில்லை. அதனால், அமெரிக்க அரசால் ஜி.பி.எஸ் மூலம் கண்காணிக்கப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆக இந்த `மங்காத்தா' விளையாட்டில் சிக்கிய ஆப்பிள் நிறுவனம் பல லட்சம் டாலர்களை இழந்திருக்கிறது. ஹைடெக் திருடர்கள் எல்லாம் பெரிய நிறுவனத்திலேயே கைவைக்கிறார்கள், கடைசியில் சிக்கியும் விடுகிறார்கள். இப்போது இந்த வழக்கு முடிந்தாலும் இவர்களிடமிருந்து பணத்தை வாங்க முடியுமா என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.  


டிரெண்டிங் @ விகடன்