Published:Updated:

`உங்களை மறக்க மாட்டேன்' - போலீஸாருக்குத் தமிழில் நன்றி கூறிய சூடான் மாணவன் 

`உங்களை மறக்க மாட்டேன்' - போலீஸாருக்குத் தமிழில் நன்றி கூறிய சூடான் மாணவன் 
`உங்களை மறக்க மாட்டேன்' - போலீஸாருக்குத் தமிழில் நன்றி கூறிய சூடான் மாணவன் 

சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் சென்னையில் சுற்றித்திரிந்த சூடான் நாட்டு மாணவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து போலீஸார் சொந்த உருக்கு அனுப்பி வைத்தனர். 

சூடான் நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது முஸ்தபா (22). ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர், நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் `டிப்ளோமா இன் பார்மஸிஸ்ட்’ படிப்பிற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்தார். தேர்வில் தேர்ச்சி பெறாததால் பட்டம் பெறவில்லை. இதனால் நாகப்பட்டினத்திலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை மெரினா பீச்சுக்கு வந்தார். அங்கு அவருக்கும் சிலருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் மெரினா போலீஸார் அவரைக் கைது செய்து சென்னைப் புழல் சிறையில் அடைத்தனர். சிறைத் தண்டனை முடிந்து அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியில் வந்தார். அவரது விசாவும் கடந்த 2016ம் ஆண்டே காலாவதியாகி விட்டது. இதனால் அவர் அபராதத் தொகை செலுத்த முடியாமல் சாப்பாட்டுக்கு வழியின்றி மெரினாவில் தங்கினார். அப்போது மெரினா போலீஸாரிடம் சிக்கினார்.  

அவரிடம் விசாரித்தபோது மாணவனின் முழுக் கதையும் போலீஸாருக்கு தெரியவந்தது. உடனடியாக இந்தத் தகவல் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனுக்கு மெரினா போலீஸார் தெரிவித்தனர். உடனடியாக அந்த மாணவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யும்படி கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், எஸ்ஐ தினேஷ் ஆகியார் சூடான் மாணவர் முஸ்தபாவுக்கு உதவிக்கரம் நீட்டினர். விசா காலாவதியாகி விட்டதால் இந்திய அரசாங்கத்துக்கு ரூ.20,000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும் விமான டிக்கெட்டுக்கு ரூ.40,000 வேண்டும் என்ற தகவலை மாணவர் தெரிவித்தார். 

உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மாணவர் முஸ்தபா செலுத்த வேண்டிய தொகை மற்றும் விமான டிக்கெட்டுக்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் சென்னை விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகளிடம் மாணவரின் நிலைமையை எடுத்துச் சொல்லி அவரை எந்தப் பிரச்னையுமின்றி சூடானுக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தொடர்ந்து முஹம்மது முஸ்தபா இன்று மதியம் 12.30 மணி விமானத்தில் `சவுதி அரேபியன்’ ஏர்லைன்ஸ் விமானத்தில் சூடான் நாட்டுக்குப் புறப்பட்டார். உதவி செய்த சென்னை போலீஸாருக்கு மாணவர் முஸ்தபா கண்ணீர்மல்க நன்றி கூறிவிட்டு விமானத்தில் ஏறினார். அப்போது `என்றுமே உங்களை மறக்க மாட்டேன்' என்று தமிழில் கூறினார்.  

இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் கூறுகையில், ``இதற்கு காரணம் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் சார்தான். மாணவருக்கு உதவும்படி கமிஷனர் உத்தரவிட்டார். உடனடியாக உதவிசெய்தோம். சூடான் மாணவரை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப முயற்சி செய்தோம். அது நல்லபடியாகவே முடிந்தது’’ என்றார்.