வெள்ளைப்படுதல், யூரினரி இன்ஃபெக்‌ஷன் போக்கும். பெண்களின் தோழி பாதாம் பிசின்! | Dear woman try almond gum for your problems

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (08/04/2019)

கடைசி தொடர்பு:11:00 (08/04/2019)

வெள்ளைப்படுதல், யூரினரி இன்ஃபெக்‌ஷன் போக்கும். பெண்களின் தோழி பாதாம் பிசின்!

''கருப்பையில்  லேசான புண் இருந்தாலும், மெல்ல மெல்ல அதை ஆற வைத்து விடும் தன்மை கொண்டது பாதாம் பிசின்.''

பாதாம் பிசின் என்றால், அது ஜிகிர்தண்டாவில் போடப்படுவது என்றுதான் இன்றைய தலைமுறைக்குத் தெரியும். அதனுடைய ஆரோக்கியப் பலன்கள் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், பாதாம் பிசின், இயற்கை கோடை வெப்பத்தைத் தணிக்கும் அருமருந்து என்கிறார் சித்த மருத்துவர் வரலஷ்மி. பாதாம் பிசினின் ஆரோக்கியப் பலன்கள், இதை யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிட வேண்டிய அளவு ஆகியவற்றை அவரிடம் கேட்டோம். 

பாதாம் பிசின்

* வெயில் காலத்தில் நமக்கு வருகிற முதல் பிரச்னை உடல் உஷ்ணம். பாதாம் பிசின் உடல் உஷ்ணத்தைத் தணிப்பதில் செலவுக் குறைவான இயற்கைத் தீர்வு. தவிர, உஷ்ணத்தால் உண்டாகும் சோர்வையும்  நீக்கும்.

*  வாந்தி, மயக்கம், கிறுகிறுப்பு எனப் பித்தம் சார்ந்த நோய்களையும் இந்தப் பிசின் போக்கும். 

சித்த மருத்துவர் வரலஷ்மி* உடலில் ஏதாவது நோய்த்தொற்று இருந்தால், அதற்குக் காரணமான கிருமியை வெளியேற்றி விடும். 

* வெயில் காலத்தில் பல பெண்களும் சந்திக்கிற ஒரு பிரச்னை வெள்ளைப்படுதல். தினமும் ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பிசினை சாப்பிட்டு வர, இந்தப் பிரச்னை சத்தமில்லாமல் சரியாகும். 

* கருப்பையில்  லேசான புண் இருந்தாலும், மெல்ல மெல்ல அதை ஆற வைத்து விடும் தன்மை கொண்டது பாதாம் பிசின். 

* காரம் அதிகமான, மசாலாக்கள் தூக்கலாகச் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு வாயுக் கோளாறு, நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஏற்படும். இந்த மூன்றையும் பாதாம் பிசின் சரியாக்கும். 

*  சிலர் வேலைக் காரணமாக எப்போதும் தாமதமாகவே சாப்பிடுவார்கள். இவர்களுக்கு நெஞ்சரிச்சல் வரும். பழக்கமில்லாமல் திடீரென காரமான உணவுகளைச் சாப்பிட்டால் வயிறு எரிய ஆரம்பிக்கும். இப்படிப்பட்டவர்கள் ஊற வைத்த பாதாம் பிசினைப் பாலுடன் கலந்து குடிக்கலாம். பால் பிடிக்காதவர்கள் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். 

*  கர்ப்பிணிகளுக்கு பொதுவாகவே மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். கோடைக்காலத்தில் மாதமாக இருக்கிறார்களென்றால் இந்தப் பிரச்னை இன்னும் அதிகமாக இருக்கும்.  அப்படிப்பட்ட கர்ப்பிணிகளுக்கும் பாதாம் பிசினை ஊற வைத்துக் கொடுக்கலாம். 

*  சில பெண்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் மெலிவாகவே இருப்பார்கள். அவர்களுக்குப் பாதாம் பிசினை ஊறவைத்து பாலுடன் கலந்து தரலாம். நன்கு புஷ்டியாவார்கள். 

* வெயில் காலம் வந்தாலே பெண்களுக்கு யூரினரி இன்ஃபெக்‌ஷனும் வந்து விடும். அடிக்கடி சிறுநீர் வரும், அதுவும் கடுப்புடன் சொட்டு சொட்டாகத்தான் போகும்.  இந்தப் பிரச்னையையும் பாதாம் பிசின் சரி செய்யும்.

வெள்ளைப்படுதல்

*   சிறுநீரகத்தில் வருகிற கற்கள், சிறுநீர்ப் பாதையில் வளர்கிற சதை இரண்டையும் இந்தப் பிசின் கரைக்கும். அதனால்தான், சித்த மருத்துவம், பாதாம் பிசினை கல்லடைப்பு ,சதையடைப்புப் போக்கும் என்று புகழ்கிறது.

பாதாம் பிசினை எப்படிச் சாப்பிடுவது?

நீங்கள் தினமும் பாதாம் பிசினை சாப்பிடப் போகிறீர்கள் என்றால், 5 கிராம் அளவுக்குப் பாதாம் பிசினை எடுத்து தூசியில்லாமல் சுத்தப்படுத்தி, இரவே தண்ணீரில் ஊற வைத்துவிடுங்கள். காலையில் அதை அப்படியே சாப்பிடலாம். தண்ணீரில் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். பழச்சாறுகளுடன் கலந்து சாப்பிடலாம். நன்னாரி சர்பத்தில், இளநீரில் போட்டும் குடிக்கலாம். 

பாயசம் போல செய்தோ அல்லது ஊற வைத்து தேங்காய்த்துருவல், ஏலக்காய்ப்பொடி தூவி சாப்பிடப் போகிறீர்களென்றால் நிறையச் சாப்பிட்டு விடுவீர்கள். அதனால், இந்த  முறையில் சாப்பிடுபவர்கள் வாரத்துக்கு இரண்டு நாள்  மட்டும் சாப்பிடுங்கள். 

குழந்தைகளும் சாப்பிடலாம்

இது சுலபமாக ஜீரணிக்கக்கூடியது என்பதால், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள்கூட சாப்பிடலாம். எந்தப் பக்க விளைவுகளும் வராது. 


டிரெண்டிங் @ விகடன்