முதல்முறையாக வெளியாகப்போகும் 'பிளாக் ஹோல்' புகைப்படம்... விஞ்ஞானிகள் அறிவிப்பால் எகிறும் எதிர்பார்ப்பு! | Nasa to release first photograph of a black hole

வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (09/04/2019)

கடைசி தொடர்பு:19:35 (10/04/2019)

முதல்முறையாக வெளியாகப்போகும் 'பிளாக் ஹோல்' புகைப்படம்... விஞ்ஞானிகள் அறிவிப்பால் எகிறும் எதிர்பார்ப்பு!

விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பிளாக் ஹோலின் முதல் புகைப்படத்தை நாளை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய அறிவியல் அமைப்பின் இணையதளத்தின்படி EHT  என அழைக்கப்படும் ஈவென்ட் ஹாரிஷன் தொலைநோக்கி திட்டத்திலிருந்து கிடைக்கப்பெற்ற படங்களும், தகவல்களும் நாளை வெளியிடப்படும்.

பிளாக் ஹோல்

Photo credit -NASA/JPL-Caltech/Reuters

இந்த EHT தொலைநோக்கித் திட்டம், 2012-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. பிளாக் ஹோல் (கருந்துளை) பற்றிய தகவல்கள் சேகரிக்கவும், அதைச் சுற்றி உள்ள சூழலைக் கண்காணிக்கவும் இது கொண்டுவரப்பட்டது. பல தொலைநோக்கிகள், இந்தத் திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கேலக்ஸியின் நடுவிலும் ஒரு மிகப்பெரிய பிளாக் ஹோல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவற்றின் புவி ஈர்ப்பு சக்தி மிகவும் அதிகம் என்பதால், இவற்றின் எல்லைக்குள் செல்லும் ஒளி உட்பட அனைத்தும் வெளிவரமுடியாதபடி உள்ளே ஈர்க்கப்பட்டுவிடும். 

பிளாக் ஹோல் மாதிரி புகைப்படம்

இப்படி சிறிதும் ஒளி இல்லாத காரணத்தால், இவற்றைப் படம் பிடிக்கமுடியாமல் இருந்தனர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். கணினிகளால் உருவாக்கப்பட்ட மாதிரி படங்கள் மட்டுமே நம்மிடம் இருக்கின்றன. ஆனால், இந்த EHT திட்டத்தின்மூலம் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நமது பால்வெளி கேலக்ஸியின் நடுவில் இருக்கும் சாகிட்டாரிஸ் ஏ ஸ்டார் பிளாக் ஹோல் (Sagittarius A*), அருகில் இருக்கும் விர்கோ ஏ கேலக்ஸியின் M87 பிளாக் ஹோல் ஆகிய இரண்டில், ஏதேனும் ஒன்றுதான் படம்பிடிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. இவை இரண்டும் சூரியனைவிட பல லட்சம் மடங்குகள் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. சாகிட்டாரிஸ் ஏ ஸ்டார் பிளாக் ஹோல் 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவிலும், M87 5.4 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலும் இருக்கின்றன. இதில், ஏதேனும் ஒன்றின் புகைப்படம் நாளை மக்கள் பார்வைக்கு வரும் என்பதே அறிவிப்பு. இந்த அறிவிப்பு, உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க