ஐ.டி பணியாளர்களுக்கு 38% டிமாண்டு அதிகரித்திருக்கிறது! - நாக்ரி.காம்  | IT hiring picks up; Chennai, Bengaluru lead jobs growth

வெளியிடப்பட்ட நேரம்: 13:05 (10/04/2019)

கடைசி தொடர்பு:13:05 (10/04/2019)

ஐ.டி பணியாளர்களுக்கு 38% டிமாண்டு அதிகரித்திருக்கிறது! - நாக்ரி.காம் 

ஐடி பணியாளர்களுக்கு

டந்த மார்ச் மாதத்தில், இந்திய நிறுவனங்களின் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகுறித்து ஆய்வறிக்கை ஒன்றை நாக்ரி.காம் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் இந்திய நிறுவனங்களில், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஆள்சேர்ப்பு 12 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்களில், தகுதி வாய்ந்த பணியாளர்களுக்கு டிமாண்டு அதிகரித்திருப்பது இதற்கு முக்கியமான காரணமாகும். அவர்களுக்கான தேவை அதிகரித்திருப்பதால், அந்தத் துறையில் மட்டும் பணியாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்களில் 38 சதவிகிதம் டிமாண்டு அதிகரித்திருக்கிறது.   

அடுத்ததாக, மனிதவள மேம்பாடு மற்றும் மார்க்கெட்டிங் துறைகளில் 13 சதவிகிதம் மற்றும் 12 சதவிகிதம்  ஆள்சேர்ப்பு நடவடிக்கை அதிகரித்திருக்கிறது. கல்வித் துறையில் 7 சதவிகிதம், கட்டுமானத் துறையில் 13 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. காப்பீட்டுத் துறையில் 6 சதவிகிதம், நுகர்பொருள் துறையில் 5 சதவிகிதம் ஆள்சேர்ப்பு அதிகரித்திருக்கிறது. அதே சமயம், வாகனத் துறையில் ஆள்சேர்ப்பு 8 சதவிகிதம் குறைந்துள்ளது. வங்கி மற்றும் நிதி சேவைத் துறைகளில் ஆள்சேர்ப்பு 15 சதவிகிதம் சரிவடைந்து காணப்படுகிறது. 

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பெரிய நகரங்களில், பெங்களூரில் ஆள்சேர்ப்பு அதிகபட்சமாக 18% அதிகரித்துள்ளது. அங்கு, ஐ.டி துறை பணியாளர்களுக்கான தேவை 49% வளர்ச்சிகண்டதே இதற்குக் காரணம். எனினும், அங்கு வாகனத் துறையில் ஆள்சேர்ப்பு 6 சதவிகிதமும், வங்கி, நிதி சேவை மற்றும் இன்ஷூரன்ஸ் துறைகளில் ஆள்சேர்ப்பு 43 சதவிகிதமும் சரிவடைந்துள்ளது. சென்னையில், ஆள்சேர்ப்பு 13 சதவிகிதம் வளர்ச்சிகண்டிருக்கிறது.  ஐ.டி துறை பணியாளர்களுக்கான தேவை 45% வளர்ச்சிகண்டதே இதற்குக் காரணம். சென்னையில் வங்கி, நிதி சேவை மற்றும் இன்ஷூரன்ஸ் துறைகளில் ஆள்சேர்ப்பு 12 சதவிகிதம் சரிவடைந்துள்ளது. டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் முறையே 8 சதவிகிதம் மற்றும் 4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.