நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்த தகுதியானவரா... ஒரு செக்லிஸ்ட்! | 5 credit card sins you must avoid at all cost

வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (11/04/2019)

கடைசி தொடர்பு:12:42 (11/04/2019)

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்த தகுதியானவரா... ஒரு செக்லிஸ்ட்!

வங்கி சார்ந்த விவரங்கள் எதுவாக இருந்தாலும், அதை வெளியிடக் கூடாது என்பதுதான் பொதுவான விதி. ஆனால், நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ கிரெடிட் கார்டு விவரங்களை...

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்த தகுதியானவரா... ஒரு செக்லிஸ்ட்!

இந்தியாவில் கிரெடிட் கார்டு பயனாளர்களின் எண்ணிக்கை, ஜனவரி, 2019 நிலவரப்படி  4.51 கோடியாக அதிகரித்திருக்கிறது என ஆர்.பி.ஐ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது ஜனவரி, 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.06 கோடி அதிகம். வருகிற 2023-ம் ஆண்டின் இறுதிக்குள் இதன் எண்ணிக்கை 10 கோடியைத் தொடும் என வங்கி ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள்.

இப்படி, தொடர்ந்து கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், அதன் மீதான புரிதல் மக்களிடம் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் நடக்கும் தவறுகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நீங்கள் கிரெடிட் கார்டு பயனாளராக இருந்தால், கீழே பட்டியலிடப்பட்டிருக்கும் தவறுகளைச் செய்கிறீர்களா எனப் பாருங்கள். அப்போதுதான் இந்தக் கார்டை பயன்படுத்த நீங்கள் தகுதியான நபரா... இல்லையா என்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.

கிரெடிட் கார்டு

1. நீங்கள் உங்களுடைய கிரெடிட் கார்டு விவரங்களை வெளியிடுவதில் சமரசமாக இருக்கிறீர்கள் என்றால், இந்தக் கார்டை பயன்படுத்த நீங்கள் தகுதியானவர் அல்ல என அர்த்தம். வங்கி சார்ந்த விவரங்கள் எதுவாக இருந்தாலும், அதை வெளியிடக் கூடாது என்பதுதான் பொதுவான விதி. ஆனால், நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ கிரெடிட் கார்டு விவரங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்துகொள்கிறோம். மற்ற கார்டு விவரங்களைப்போல, இந்த கார்டு விவரங்களைப் பாதுகாப்பதும் அவசியம்.

பெட்ரோல் நிலையங்கள், ரெஸ்டாரன்ட்கள் போன்ற பொது இடங்களில் கார்டுகளைப் பயன்படுத்தும்போதுதான், அது சார்ந்த விவரங்கள் அதிக அளவில் களவாடப்படுகின்றன. அதனால், பொது இடங்களில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்வது முக்கியம். குறிப்பாக, வங்கிகளிலிருந்து யாரும் கார்டு விவரங்களைக் கேட்டு போன் செய்ய மாட்டார்கள் என்பதில் தெளிவாக இருங்கள். ஏனெனில், சமீபகாலமாக கிரெடிட் கார்டுகளைக் குறிவைத்து போன் அழைப்புகள் வர ஆரம்பித்திருக்கின்றன.

credit card

2. கடன் கொடுத்தவர் யாராக இருந்தாலும், உரிய நேரத்தில் தவணைத்தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். கிரெடிட் கார்டு விஷயத்திலும் அப்படித்தான். தவணைத்தொகைக்கான தேதியை, ஒவ்வொரு கிரெடிட் கார்டு நிறுவனமும் மெயில் மூலமாக, எஸ்.எம்.எஸ் மூலமாக அல்லது போன் அழைப்பின் மூலமாக உரியவர்களுக்குத் தெரியப்படுத்தும். இதைத் தவறவிடாமல், பணத்தைச் செலுத்துவது நல்லது. அப்படியில்லாமல், தவணைத்தொகை செலுத்துவதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்த தகுதியற்றவர் எனக்கொள்ளலாம்.

credit card

3. நீங்கள் உங்களுடைய அவசரத் தேவைக்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கிறீர்கள் என்றால், நீங்கள் இதைப் பயன்படுத்துவதற்கு பொருத்தமான ஆள் கிடையாது. இன்று, பெரும்பாலான வங்கிகள் கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை மொபைல் வாலட்களுக்கும் அல்லது மற்றொரு வங்கிக்கணக்குக்கும் பரிமாற்றம் செய்வதை ஊக்குவிக்கின்றனர். ஏனெனில், கிரெடிட் கார்டிலிருந்து எடுத்துப் பயன்படுத்தும் தொகைக்கு வட்டிவிகிதம் அதிகம்.

பணப்பரிவர்த்தனைக்கான பணமும் அதிகம். இது தெரியாமல் பலர் அவசர பணத்தேவைக்காக கிரெடிட் கார்டிலிருந்து பணத்தை எடுக்கிறார்கள். `பணத்தைக் கையாள்வதில் செய்யக்கூடாத விஷயங்கள்' என சில இருக்கின்றன. அதில் கிரெடிட் கார்டுகளிலிருந்து பணத்தை எடுத்துப் பயன்படுத்துவது என்பது மிக முக்கியமானது.

credit card

4. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிக்கும் கிரெடிட் லிமிட் முழுவதையும் பயன்படுத்துபவராக இருந்தால், இனிமேல் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு ஏற்ற ஆள் கிடையாது. கொடுக்கப்பட்டிருக்கும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் சுதந்திரம் முழுவதுமாக உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்காக லிமிட் முழுவதையும் பயன்படுத்தும்போது, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், கார்டு டிஃபால்ட் ஆவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.

credit card

5. கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யும் செலவுகள் ஒவ்வொன்றுக்கும் ரிவார்டு பாயின்ட்களை வழங்குவது வங்கிகளின் வழக்கமான செயல். அந்த ரிவார்டு பாயின்ட்களைப் பெறுவதற்காகவே  நம்மில் பலர் அதைப் பயன்படுத்திவருகிறோம். அதில் ஒருவராக நீங்களும் இருந்தால், இந்தக் கார்டு பயன்படுத்தும் தகுதியை இழக்கிறீர்கள். ஏனெனில், 5,000 பாயின்ட்களில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள், சில ஆண்டுகளில் 7,000 பாயின்ட் இருந்தால்தான் கிடைக்கும் என்றாகிவிடும். இந்த உத்தியானது உங்களுடைய கிரெடிட் கார்டு பயன்பாட்டை அதிகப்படுத்தத்தானே தவிர, சலுகைகள் வழங்குவதற்காக அல்ல. 


டிரெண்டிங் @ விகடன்