100 திமிங்கிலங்களை சிறைவைத்த ரஷ்யா... விடுதலைக்காகக் குவிந்த 15 லட்சம் கையெழுத்துகள்! | 15 lakh people signed for release the whales which prisoned by Russia

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (11/04/2019)

கடைசி தொடர்பு:14:45 (11/04/2019)

100 திமிங்கிலங்களை சிறைவைத்த ரஷ்யா... விடுதலைக்காகக் குவிந்த 15 லட்சம் கையெழுத்துகள்!

change.org போன்ற தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு, பல்வேறு பொதுநலன் சார்ந்த விஷயங்களுக்காக இணையத்தில் மனு பகிரப்படுவது புதிய ட்ரெண்ட் ஆகிவருகிறது. பொதுத்தளத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் தொடங்கப்பட்ட இவ்வகையான இணையதளங்கள், பல்வேறு தருணங்களில் பயனுள்ளதாகவும் இருந்துள்ளது. 

திமிங்கிலத்திற்கு ஆதரவாக போராட்டம்

சமீபத்தில், ரஷ்யாவில் கிட்டத்தட்ட 100 திமிங்கிலங்களை அதிகாரிகள் பிடித்துவைத்திருந்ததாகப் புகைப்படங்கள் வெளியாகின. இது சூழலியலாளர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கின. திமிங்கிலங்களை வணிக நோக்கங்களுக்காக விற்பதற்கு அதிகாரிகள் சிறைபிடித்து வைத்திருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. 

திமிங்கிலங்கள்

இதையடுத்து, பிடித்துவைக்கப்பட்டுள்ள திமிங்கிலங்களை ரஷ்யா உடனடியாக விடுவிக்க வேண்டும் என change.org இணையதளத்தில் ஒரு ஆன்லைன் மனு உருவாக்கப்பட்டு, இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டது. சூழலியல் சார்ந்து, தொடர்ந்து இயங்கிவரும் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணையத்தில் மனுவைப் பகிர்ந்திருந்தனர். ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்குக் கடிதம் ஒன்றையும் எழுதியிருந்தார். வெகு விரைவில், அந்த மனுவில் 15 லட்சம் பேரால் கையெழுத்திடப்பட்டது.

Whales

திமிங்கிலங்களை விடுவிக்க தொடர்ந்து அழுத்தம் எழுந்ததையடுத்து, பின்னர் ரஷ்ய அதிகாரிகள் திமிங்கிலங்களை விடுவிக்க ஒப்புக்கொண்டனர். 'விரைவில் திமிங்கிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என ரஷ்ய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே முன்அனுமதியுடன் திமிங்கிலங்களைப் பிடிக்க முடியும். சமூக ஊடகங்களில் உருவான அழுத்தம் காரணமாக, திமிங்கிலங்களின் விடுதலை சாத்தியப்பட்டிருப்பது இணையத்தின் தவிர்க்க முடியாத தேவையையும், சக்தியையும் காட்டுகிறது.