``கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல!’’ - எப்படி மிஸ் ஆனது இஸ்ரேலின் நிலாவுக்குச் செல்லும் கனவு? | How did Israel's moon mission fail?

வெளியிடப்பட்ட நேரம்: 13:23 (14/04/2019)

கடைசி தொடர்பு:08:50 (15/04/2019)

``கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல!’’ - எப்படி மிஸ் ஆனது இஸ்ரேலின் நிலாவுக்குச் செல்லும் கனவு?

நிலவின் பரப்பின் அருகில் வரை சென்ற விண்கலத்துக்கு கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?

``கைக்கு எட்டியது வாய்க்கு எட்டல!’’ - எப்படி மிஸ் ஆனது இஸ்ரேலின் நிலாவுக்குச் செல்லும் கனவு?

தனியார் முதலீட்டின் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட உலகின் முதல் நிலவு மிஷனில் சென்ற வாரம் இஸ்ரேலிய விண்கலம் நிலவில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால் 'பேரேசீட்' என்னும் இந்த விண்கலம் நிலவில் சாப்ஃட் லேண்டிங் (Soft landing) செய்ய முயற்சி செய்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் நிலவின் பரப்பில் மோதியது. சாப்ஃட் லேண்டிங் என்பது விண்கலத்துக்கு எந்த ஒரு பிரச்னையும் வராமல் நிதானமாகப் பரப்பில் தரையிறங்குவதே. இதுவரை சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் மட்டுமே நிலவில் இந்த சாப்ஃட் லேண்டிங்கை செய்துள்ளனர். இதில் நாலாவதாக இடம்பிடிக்கவிருந்த இஸ்ரேலின் கனவு இந்தத் தோல்வியினால் தகர்ந்துள்ளது. 7 வாரங்கள் சரியாகப் பயணித்து கடைசி நிமிடங்களில் இந்தத் தோல்வியைக் கண்டிருக்கிறது இந்த மிஷன். இது எப்படி நடந்தது?

 'பேரேசீட்'

ஏன் இந்த ஏழு வாரம்?

நிலவு இங்கிருந்து சுமார் 3,84,400 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது. இதனால் சில மிஷன்கள் சில நாள்களில் இங்கிருந்து நிலவை அடைந்துவிடும். பின்பு ஏன் இந்த 'பேரேசீட்' விண்கலம் நிலவை அடைய 7 வாரங்கள் எடுத்துக்கொண்டது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதற்கும் காரணம் உண்டு. பூமியை ஒரு சிறிய வட்ட பாதையில் (orbit) சுற்றத் தொடங்கி அப்படியே சுற்றி சுற்றியே பெரிய  வட்டப்பாதைக்கு இந்த விண்கலம் சென்றது. ஒரு கட்டத்தில் நிலவின் புவி ஈர்ப்பு விசையால் இது ஈர்க்கப்பட்டது. இது ஒரு ராக்கெட் மூலம் நேராக நிலவுக்குச் செல்லாமல் ஏலன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் 9 ராக்கெட்டில் ஒரு செயற்கைக்கோள் மற்றும் ஆராய்ச்சி விமானம் ஒன்றுடன் சென்றது. இதனால் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவது போன்ற வேலையும் இதற்கு இருந்தது. இதன்மூலம் செலவு அதிக அளவில் குறைக்கப்பட்டது. ஆனால், நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளப்பட்டது. நிலவுக்கு இங்கிருந்து உள்ள சாதாரண தூரத்தைவிட 15 மடங்கு தூரத்தை இதனால் இது கடக்க வேண்டியது இருந்தது. அதனால்தான் இந்தக் கால அவகாசம்.

நிலாவுக்கு செல்லும் வட்டப்பாதை

படம்: SpaceIL

சாப்ஃட் லேண்டிங் திட்டம்

1.5 மீட்டர் உயரம் உள்ள 'பேரேசீட்' விண்கலத்தின் இன்ஜின் என்பது Nammo என்னும் பிரிட்டிஷ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இதற்கு முன்பு இதைப் போன்ற எந்த மிஷனுக்கும் இந்த இன்ஜின் பயன்படுத்தப்பட்டது கிடையாது. விண்கலத்தை இங்கிருந்து நிலவுக்குச் செலுத்துவது மட்டுமல்லாமல் தரையிறங்கவும் இதுதான் பயன்படுத்தப்பட்டது. அது எப்படித் தரையிறங்க ஒரு இன்ஜினை பயன்படுத்தப்பட முடியும்? கடைசி கட்டத்தில் நிலவின் பரப்பின் அருகில் செல்லும்போது வேகம் பரபரவென குறைக்கப்பட வேண்டிய தேவையிருக்கும். இதற்காக இறுதிக்கட்டத்தில் இன்ஜின் எரியத்தொடங்கும். மேல் நோக்கி இது தரும் விசையால் கீழ்நோக்கி வரும் விண்கலத்தின் வேகம் குறைக்கப்படும். தரைக்கு இன்னும் 5 மீட்டர் இருக்கும்போது இன்ஜின் நிறுத்தப்படும். பிரேக்காக இருக்கும் இந்த சிஸ்டம் மிகவும் துல்லியமாக செயல்பட வேண்டும். இன்ஜின் சூடாக இருக்கும்போதே ஆன்/ஆஃப் செய்ய வேண்டிய கட்டாயமும் இதற்கு இருந்தது.

பிரேக்காக செயல்படும் விண்கல என்ஜின் - நிலா

இது நடக்கும்போதுதான் விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டுவிட்டது. முதலில் IMU2 எனப்படும் Inertial Measurement Unit சென்சார் வேலைசெய்யாமல் போனது. இதே நேரத்தில் பூமியில் இருந்த மிஷன் கண்ட்ரோல் குழுவுடனான தொடர்பையும் இழந்தது இந்த விண்கலம். மீண்டும் தொடர்பு கிடைக்கும்போது இன்ஜின் வேலைசெய்யாமல் இருந்தது. பின்பு மொத்த சிஸ்டமும் ரீசெட் செய்யப்பட்டு இன்ஜின் ஆன் செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் மிகவும் கீழே வந்துவிட்டது விண்கலம். அதனால் எதிர்பார்த்த சாப்ஃட் லேண்டிங் கிடைக்காமல் நிலவின் பரப்பில் மோதியது விண்கலம். இந்தக் கோளாறு எப்படி நடந்தது என்று இன்னும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், IMU2 கோளாறுதான் தொடர் வினையாக அனைத்து பிரச்னைக்கும் காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

பூமியில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மிஷன் கண்ட்ரோலில் இருந்த பலரையும் சோகம் தொற்றிக்கொண்டது. ஆனாலும், இந்த 100 மில்லியன் டாலர் மிஷன் நினைத்ததைச் செய்யவில்லை என்றாலும் இதுவரை வந்த இஸ்ரேலின் இந்த முயற்சியே பாராட்டுக்குரியதுதான். இந்த விண்கலத்தில் அவர்கள் பொறித்த வாசகத்தைப் பார்த்தாலே அது உங்களுக்குப் புரியும். "Small Country, Big Dreams" (சிறிய நாடு, பெரிய கனவுகள்) என்பதுதான் அது. இந்த 60 ஆண்டுக்கால விண்வெளி ஆராய்ச்சியில் வெகுசில நாடுகளே நிலவை எட்டியுள்ளன. இந்த லேண்டிங் சரியாக நடந்திருந்தால் இந்த நாடுகளுடன் இணைத்திருக்கும் இஸ்ரேல். ஆனாலும், இதற்கான செலவையும் நாம் பார்க்க வேண்டும். இது எந்த ஒரு பெரும் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பும் நிதியளிக்காத ஒரு மிஷன்.

Google Lunar XPrize என்ற திட்டத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நிலவில் தடம் பதிக்கும் முதல் தனியார் விண்கலத்துக்கு 20 மில்லியன் டாலர்கள் பரிசு என்பதே இந்தத் திட்டம். 2007 - 2018 வரை இது அமலில் இருந்தது. ஆனால், இதை யாராலும் செய்துமுடிக்க முடியவில்லை. இந்த வருடம்தான் இந்த பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. காலம் முடிந்துவிட்டாலும் 'பேரேசீட்' விண்கலத்தின் இந்த முயற்சிகளுக்காக 1 மில்லியன் டாலர்கள் அளிப்பதாகத் தெரிவித்திருந்தது.

மோதுவதற்கு முன் எடுத்த செல்ஃபி

மோதுவதற்கு முன் எடுத்த செல்ஃபி, படம்: @SpaceIL

சரியாகத் தரையிறங்கியிருந்தால் என்ன செய்திருக்கும் இந்த விண்கலம்?

இது நிலவின் பரப்பில் துல்லியமான கேமராக்களின் மூலம் படங்கள் எடுப்பதாக இருந்தது, செல்ஃபிகள் உட்பட. சொல்லப்போனால் தரையில் மோதுவதற்கு முன்பு ஒரு செல்ஃபியும் எடுத்தது இந்த விண்கலம். மேலும் நிலவின் பரப்பில் இருக்கும் காந்த புலம் என்ன என்பதையும் ஆராய்ச்சி செய்யவிருந்தது. மேலும், நாசாவின் பிரதிபலிப்பான் (Reflector) ஒன்றையும் எடுத்துச் சென்றது இது. இதன் மூலம் பூமிக்கும், நிலவுக்கு இடையிலான தூரம் என்னவென்று துல்லியமாகக் கண்டுபிடிக்கவிருந்தது நாசா.

ராக்கெட்

இந்தச் சோகத்திலும் நல்ல விஷயம் என்னவென்றால், இந்த வருடத்தின் பிற்பகுதியில் இந்தியாவும் சந்திராயன் 2 மூலம் நிலவில் விண்கலத்தை சாப்ஃட் லேண்டிங் செய்யவுள்ளது. அப்படி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுவிட்டால் சோவியத் யூனியன், அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, இதைச் செய்த நாலாவது நாடு இந்தியா என்ற பெருமை நம்மைச் சேரும். நாமும், இதை இஸ்ரோ எந்த தடங்கலும் இன்றி வெற்றிகரமாக இதை செய்துமுடிக்கும் என நம்புவோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்