அமெரிக்கர் மரணம்... கெசோவரி பறவை தாக்கியதுதான் காரணமா?! | American dead because of the attack by a cassowary bird

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (15/04/2019)

கடைசி தொடர்பு:18:04 (15/04/2019)

அமெரிக்கர் மரணம்... கெசோவரி பறவை தாக்கியதுதான் காரணமா?!

ஈமு போன்ற தோற்றமுடைய கெசோவரி பறவை கடந்த வெள்ளிக்கிழமை அதன் பராமரிப்பாளரைத் தாக்கியதில் அவர்  மரணமடைந்தார். இது கெயின்ஸ்வில் (Gainesville) மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபுளோரிடாவில் அமைந்துள்ள கெயின்ஸ்வில் என்ற பகுதியில் வாழ்ந்து வந்தவர் மார்வின் ஹஜோஸ் (Marvin Hajos). 75 வயதான மார்வின் அவருடைய பறவையால் தாக்கப்பட்டதாகக் கடந்த வெள்ளிக்கிழமை 911-க்கு அழைப்பு வந்தது.

கெசோவரி பறவை

Photo Courtesy: Licualawinq

அதைத் தொடர்ந்து மார்வினை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். துரதிர்ஷ்டவசமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக விசாரித்த அதிகாரிகள் அந்தப் பெரிய பறவை தாக்கியதால்தான் அவர் உயிரிழந்துள்ளார் என்பதை உறுதி செய்தனர்.

கெசோவரி பறவை கால்

மார்வினைத் தாக்கிய அந்தப் பெரிய பறவையின் பெயர் கெசோவரி. பார்ப்பதற்கு ஈமு கோழி போலவே இருக்கும் இது ஆபத்தான உயிரினங்கள் பட்டியலில் இரண்டாம் வகுப்பில் (Class-2) இருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூ கினியா போன்ற பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இது மிகவும் ஆபத்தானது. வகுப்பு ஒன்றில், மிகவும் ஆபத்தான புலி, சிங்கம், கரடிகள் போன்ற விலங்குகள் உள்ளன. இரண்டாம் வகுப்பில் கெசோவரி பறவை உட்பட, தேன்வளைக் கரடி, அலிகேட்டர் முதலைகள், சிறுத்தைகள் இருக்கின்றன.

கெசோவரி

உருவத்தில் மிகப்பெரிய, பறக்கமுடியாத இந்தப் பறவை ஒருமணிநேரத்திற்குச் சுமார் ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன்கொண்டவை. சுமார் ஏழு அடி உயரம்வரை வளரும். இவற்றின் கால் நகங்கள் அதிகபட்சம் நான்கு அங்குல நீளம் இருக்கும். அவற்றின் நகங்கள் இரைகளையும் எதிரிகளையும் ஒரே வீச்சில் பிளந்துவிடக்கூடிய திறன்கொண்டது. இவ்வளவு ஆபத்தான பறவையை முறையான விதிகளின்படி மார்வின் பாதுகாப்பான வாழிடத்தில் பராமரிக்காததே இந்த விபத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.