இனி கடல்ல கச்சா எண்ணெய் கொட்டினா பக்கெட் வேண்டாம்.. இந்தப் பாக்டீரியா போதும்! | Scientist found oil consuming bacteria

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (16/04/2019)

கடைசி தொடர்பு:15:00 (16/04/2019)

இனி கடல்ல கச்சா எண்ணெய் கொட்டினா பக்கெட் வேண்டாம்.. இந்தப் பாக்டீரியா போதும்!

பூமியில் சமமின்மை நிலவும்போது அதைச் சீர்ப்படுத்தி சமநிலையை உருவாக்க இயற்கை ஏதாவது ஒரு வழியைக் கண்டறிந்து கொண்டேயிருக்கும். அதற்குச் சான்றாக இந்த நிகழ்வை எடுத்துக்கொள்ளலாம். பல்வேறு  காரணங்களால் கடல் மாசடைந்து வரும் நிலையில், அதைச் சமன்படுத்தும் வகையில் இயற்கை ஓர் இயக்கத்தைக் கடலின் ஆழத்தில் நடத்தி வருவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பாக்டீரியா


பசிபிக் பெருங்கடல் பகுதியான மரியானா அகழி (Mariana Trench) நிலப்பரப்பில் இருந்து 36,000 அடி ஆழமானது. உலகின் கடற்பகுதிகளில் மிகவும் ஆழமானது. இந்தப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் கச்சா  எண்ணெயை உண்டு வளரும் பாக்டீரியாக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஒரு புதிய ஆய்வுக்காக மரியானா பகுதியில் காணப்பட்ட நுண்ணுயிர் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர். அவற்றில் காணப்பட்ட பாக்டீரியாக்கள் ஹைட்ரோ கார்பன் என்ற கரிம வேதிப்பொருளை உட்கொண்டு வளரும் தன்மை உடையது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கடலில் கண்டறியப்பட்ட பாக்டீரியா


இந்தப் பாக்டீரியாக்களுக்கு ஹைட்ரோ கார்பன் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதை அறிந்துகொள்ளக் கடலில் 6,560 அடி, 13,120 அடி மற்றும் 19,685 அடி ஆழத்தில் இருந்து நீர் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்து பார்த்ததில், `கடலின் அனைத்து மட்டத்திலும் ஹைட்ரோ கார்பன் காணப்பட்டன. கடல் பரப்பில் காணப்படும் மாசுகளின் காரணமாக இவை உருவாகியிருக்கலாம்' என்று ஆராய்ச்சியாளர்கள் நினைத்தனர்.
ஆனாலும் மாசுவால் மட்டும் ஹைட்ரோ கார்பன் உருவாகியிருக்காது. வேறு ஏதோ காரணம் இருக்கலாம் என்று கருதிய ஆராய்ச்சியாளர்கள் காரணத்தைக் கண்டறிய முயன்றபோது, டீசல் போன்ற எரிபொருள்களில் காணப்படும் ஹைட்ரோ கார்பன்,  கடலில் வளரும் ஒரு வகை பாசியில் இருப்பது கண்டறியப்பட்டது. 

பேக்டீரியா

``கச்சா எண்ணெய், இயற்கை வாயு போன்றவற்றில் ஹைட்ரோ கார்பன் காணப்படும். தற்போது கண்டறியப்பட்டுள்ள பாக்டீரியாக்கள் அவற்றை உட்கொண்டு வளரும் தன்மை உடையது. இதனால் எதிர்பாராதவிதமாக அல்லது விபத்தின் காரணமாக கடலில் கலக்கும் எண்ணெயை  சுத்தப்படுத்துவதற்கு இவை உதவும். இந்தப் பாக்டீரியாக்கள் மட்டுமல்ல, வேறு நுண்ணுயிரிகளும் ஹைட்ரோ கார்பனை உட்கொண்டு வளரும் தன்மை உடையதாக இருக்கலாம். இந்த அரிதான சூழல் குறித்து மேலும் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்" என்கிறார் ஆராய்ச்சியை மேற்கொண்ட ஜோனத்தான் என்ற ஆராச்சியாளர். இந்தக் கண்டுபிடிப்பு மைக்ரோபையோம்(Microbiome) என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இனி கடல்ல கச்சா எண்ணெய் கொட்டினா பக்கெட் வெச்சு அள்ள வேண்டாம் மக்களே!