இந்தியாவில் வாகன விற்பனை 8% வளர்ச்சி, 8% சரிவு...! FADA அறிவிப்பு | FADA States that Vehicle Sales has Gone Up & Down by 8%

வெளியிடப்பட்ட நேரம்: 14:32 (18/04/2019)

கடைசி தொடர்பு:14:43 (18/04/2019)

இந்தியாவில் வாகன விற்பனை 8% வளர்ச்சி, 8% சரிவு...! FADA அறிவிப்பு

அதிக வாகனங்களை டீலர்கள் தங்கள் வசம் வைத்திருப்பது நஷ்டத்துக்கு வழிவகுக்கும் என்பதுடன், அவர்களின் முதலீடும் பாதிக்கப்படும்.

இந்தியாவில் வாகன விற்பனை 8% வளர்ச்சி, 8% சரிவு...! FADA அறிவிப்பு

இந்திய ஆட்டோமொபைல் சந்தை, எவ்வளவு போட்டிமிகுந்தது என்பது பலருக்கும் தெரிந்ததே. அதைச் சேர்ந்த ஆட்டோமொபைல் விற்பனைப் பிரிவு, 25 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்நிலையில், `மக்களின் மனநிலையில் மாற்றம் தெரிவதால், வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை கணிசமாக உயரும்' என FADA (Federation of Automobile Dealers Associations) தெரிவித்துள்ளது. `மத்தியில் திடமான அரசாங்கம், ஓரளவுக்கு நல்ல பருவமழை, பணக்கொள்கையில் RBI-ன் எளிதான அணுகுமுறை ஆகியைவை கிடைத்தால், பண்டிகைக்கால விற்பனையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்' என அந்த அமைப்பு கூறியுள்ளது. அவர்கள் கூறுவதற்கேற்பவே, 2019 - மார்ச்  மாத வாகன விற்பனை அமைந்திருக்கிறது. ஆனால், தேர்தலுக்குப் பிறகே வாகன விற்பனை சீரான ஒரு நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

FADA

இருசக்கர வாகனங்களின் விற்பனையை, 2019 - பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 10% அதிகரித்து, 13,24,823 என்றளவில் இருந்தது. பேசஞ்சர் வகை வாகனங்களின் விற்பனையும் 5% உயர்ந்து (2019 - பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிட்டால்) 2,42,708 என இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாத வாகன விற்பனையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், 2019 - மார்ச் மாதத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 7% மற்றும் பேசஞ்சர் வகை வாகனங்களின் விற்பனை 10% சரிவைச் சந்தித்துள்ளது. இதே நிலைதான் கமர்ஷியல் வாகனப் பிரிவிலும் எதிரொலித்திருக்கிறது.

2019, மார்ச் மாதத்தில் 61,896 கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதை 2019-பிப்ரவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும்போது 2% வளர்ச்சி என்றாலும், 2018 மார்ச் மாத விற்பனையைவிட இது 10% குறைவு! இந்த வாகன விற்பனை பற்றிய விவரங்கள், நமது நாட்டின் 80% RTO-களில் பயன்பாட்டில் உள்ள Vahaan திட்டத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

ஆட்டோமொபைல் டீலர்கள்

தனது அமைப்பைச் சேர்ந்தவர்களிடம், வாகனக் கையிருப்புகுறித்து ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது FADA. அதன்படி பேசஞ்சர் மற்றும் கமர்ஷியல் வகை வாகனங்களைப் பொறுத்தவரை, 40 - 45 நாள்களுக்குத் தேவையான வாகனங்கள் டீலர்கள் வசம் இருக்கின்றன. இது 60 நாள்கள் என இருந்தது. இதுவே இருசக்கர வாகனங்கள் என்றால், அது 90 நாளிலிருந்து 45 - 50 நாள் எனக் குறைந்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக வாகனங்களை விற்பனைசெய்யும் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் மாருதி சுஸூகி ஆகிய நிறுவனங்கள், தமது உற்பத்தியைக் குறைக்க முடிவெடுத்ததே இதற்கான காரணம். தவிர, அதிக வாகனங்களை டீலர்கள் தங்கள்வசம் வைத்திருப்பது நஷ்டத்துக்கு வழிவகுக்கும் என்பதுடன், அவர்களின் முதலீடும் பாதிக்கப்படும். எனவே, இது அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அம்சமாகும்.

india

``இந்திய ஆட்டோமொபைல் துறை, கடந்த நிதியாண்டை சிறப்பான முறையில் முடித்திருக்கிறது. வருடாந்தர வாகன விற்பனையில் (மார்ச் 2018-2019) சரிவைச் சந்தித்திருந்தாலும், 2019 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, 2019 மார்ச் மாதத்தில் வாகன விற்பனை அதிகரித்திருக்கிறது. இதில் வழக்கம்போலவே இருசக்கர வாகனச் சந்தையில்தான் அதிக வளர்ச்சி தெரிகிறது. தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப முன்னணி வாகன உற்பத்தியாளர்கள், தமது உற்பத்தியை மாற்றிக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் அனைத்துவிதமான வாகன டீலர்களும், 30 நாளுக்குத் தேவையான வாகனங்களை மட்டுமே வைத்திருக்கும் நிலை எட்டப்படும். RBI தனது பொருளாதாரக் கொள்கைகளைத் தளர்த்தியிருப்பது, இந்தத் துறைக்கு நிச்சயம் நன்மை தரும்'' எனப் பேசியுள்ளார், FADA அமைப்பின் தலைவரான ஆஷிஷ் ஹார்ஷராஜ் காலே. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்