விற்பனை சரிவு... பயணத்தை முடித்துக்கொள்கிறதா டாடா நானோ? | Is it finally the end of Nano?

வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (18/04/2019)

கடைசி தொடர்பு:12:56 (19/04/2019)

விற்பனை சரிவு... பயணத்தை முடித்துக்கொள்கிறதா டாடா நானோ?

2019-ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஒரு நானோ கார்கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், 2018-ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களிலிருந்துதான் ஒரே ஒரு கார் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் டாடா மோட்டார்ஸ் வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன.

றக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் ஆரவாரமாக அறிமுகம் செய்யப்பட்ட `நானோ’ காரின் விற்பனை நாளுக்குநாள் குறைந்து வருவதால், இந்திய சாலைகளில் அதன் பயணம் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. 

நானோ காருடன் ரத்தன் டாடா

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடாவின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக விளங்கிய நானோ காரைத் தயாரிக்க 2006-ம் ஆண்டில் திட்டமிட்டது டாடா குழுமம். அதைத் தொடர்ந்து, 2008-ம் ஆண்டில் டெல்லியில் அதைக் காட்சிக்கு வைத்தது. பின்னர் 2009-ம் ஆண்டில் உலகின் விலை மலிவான காராக இந்திய சாலைகளில் ஓடத் தொடங்கிய நானோ காருக்கு, அதன் அறிமுக காலத்தில் வாகன பிரியர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. 

'நாமெல்லாம் எப்ப கார் வாங்குவது?' என்ற ஏக்கத்தில் இருந்த நடுத்தர வர்க்கத்தினரிடையே,  'ஒரு லட்சம் ரூபாயில் காரா..?' என்ற வியப்புடன் நானோ காருக்குக் கிடைத்த தொடக்க கால வரவேற்பு, கடந்த சில ஆண்டுகளாக மிகவும் குறைந்துபோனது. 2018-19-ம் ஆண்டு நிதியாண்டில் வெறும் 376  நானோ கார்கள் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

குறைந்துபோன விற்பனை

வருகிற ஜூலை மாதம் வந்தால், நானோ கார் இந்திய சாலைகளில் ஓடத்தொடங்கி 10 ஆண்டுகள் பூர்த்தியாகிவிடும். இந்த நிலையில், மிகவும் குறைந்துபோன அதன் விற்பனையால், அந்த கார் உற்பத்தி இந்த மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எதுவும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை என்றபோதிலும், 2019-ம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஒரு நானோ கார் கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், 2018-ம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களிலிருந்துதான் ஒரே ஒரு கார் மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் வாடிக்கையாளர் ஒருவருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சந்தையில் நானோ காருக்கு நேரடி போட்டியாகவும் மற்றும் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் காராகவும் விளங்கும் மாருதி ஆல்டோ காரின் ஒரு நாள் விற்பனையில், ஏறக்குறைய பாதி அளவுக்குத்தான் நானோ காரின் விற்பனை 2018-19-ம் ஆண்டு நிதியாண்டில் காணப்படுகிறது. நானோ காரின் விற்பனை மிக அதிக உச்சமாகக் காணப்பட்டது 2011-12-ம் நிதியாண்டில்தான். அப்போது 74,527 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 

விற்பனை தொடங்கிய 2009-10-ம் ஆண்டில் 30,350, 2010-11-ல் 70,432, 2012-13-ல் 53,848, 2013-14-ல் 21,129,  2014-15-ல் 16,901, 2015-16-ல்  21,006, 2016-17-ல் 7,591, 2017-18-ல் 1,852 கார்கள் என அதன் விற்பனை படிப்படியாகக் குறைந்துவிட்டது. முன்னதாக விற்பனை சரிவை சரிக்கட்டுவதற்காக 2014-15-ம் ஆண்டு நானோ ஃபேஸ்லிஃப்ட் என்ற மேம்படுத்தப்பட்ட நானோ மாடல் காரை அறிமுகம் செய்தது டாடா மோட்டார்ஸ். அதற்கும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆண்டுக்கு 2.5 லட்சம் நானோ கார்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அதில் 10 சதவிகிதம்கூட விற்காததால், நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 

குறைந்துபோன விற்பனை

உற்பத்தி நிறுத்தம்

வாடிக்கையாளர்களிடம் நானோ காருக்கு வரவேற்பு குறைந்துபோன நிலையில், அதன் உற்பத்தியை மட்டும் தொடர்வது புத்திசாலித்தனமான நடவடிக்கை அல்ல என்பதால், அதைக் குறைத்துக்கொண்டு வந்தது டாடா மோட்டார்ஸ். இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் ஆர்டர் கொடுத்தால் மட்டும், இனி நானோ கார் உற்பத்தியை குஜராத்தில் உள்ள சனாந்த் ஆலையில் மட்டும் தொடர்வது எனக் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்தது. அதே சமயம், அந்த மாதத்தில்தான் நானோவின் விற்பனை வெறும் 3 என்ற அளவுக்குக் குறைந்தது. அதைத் தொடர்ந்து வந்த மாதங்களில் ஓரளவுக்கு உற்பத்தி இருந்து வந்த நிலையில், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 52 கார்கள் என்ற அளவுக்கு விற்பனை ஆகின. 

இந்த ஆண்டு மார்ச் வரை உற்பத்தி எதுவும் செய்யப்படாத நிலையில், நானோ கார் ஏறக்குறைய தனது பயணத்தை முடித்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டது. அதே சமயம், உற்பத்தியை நிறுத்துவது குறித்தோ அல்லது சந்தையிலிருந்து அதை எப்போது திரும்ப பெற்றுக்கொள்வது  குறித்தோ டாடா மோட்டார்ஸ் தரப்பில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

விற்பனை சரிவுக்கு காரணம்? 

நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் விலை 1 லட்சம் ரூபாய்தான் என்பது எந்த அளவுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றதோ, அந்த அளவுக்கு அதன் தரம் குறித்த சந்தேகமும், 'இது எவ்வளவு நாள்களுக்குத் தாங்கும்?' என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்த நிலையில், நானோ அறிமுகமான புதிதில் ஒரு டஜனுக்கும் அதிகமான கார்கள் தீப்பற்றியதால், வாடிக்கையாளர்களிடையே அதன் தரம் குறித்த சந்தேகம் மேலும் அதிகமானது. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற டாடா மோட்டார்ஸ் மேற்கொண்ட சில முயற்சிகள் ஓரளவுக்குப் பலனளித்தது. ஆனாலும், வேறு பல காரணங்களால் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் நானோவால் வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியவில்லை. 

உற்பத்தி நிறுத்தம்

இதனிடையே இந்த மாதம் முதல் அனைத்து கார்களுக்கும் ஏபிஎஸ் (anti-lock braking system) எனப்படும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு என்பது, வாகனத்தின் பிரேக்கை பயன்படுத்தும்போது, அதன் சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் அல்லது சுழலுதல் நிறுத்தப்படாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பு. 

இந்த ஏபிஎஸ் அமைப்பைத் தொடர்ந்து, வரவிருக்கும் நாள்களில் டிரைவர் ஏர்பேக், வேக எச்சரிக்கை அமைப்பு, சீட்பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவற்றை அமைப்பதும் கட்டாயமாக்கப்பட உள்ளது. ஆனால், நானோ காரின் தற்போதைய வடிவத்தில், இந்த வசதிகளையெல்லாம் அதில் செய்ய முடியாது என்பதும், சந்தையில் அதன் விற்பனை குறைந்ததற்கு இன்னொரு முக்கிய காரணம். இந்திய கார் சந்தைகளில், நானோ போன்று  ஏபிஎஸ் அமைப்பை ஏற்படுத்த முடியாத வகை கார்கள் ஒரு சில மட்டுமே இருக்கின்றன.  

பயணம் முடிவுக்கு வருகிறது?

அதே சமயம், இந்த வசதிகளையெல்லாம் கூடுதலாக செய்து, மேம்படுத்தப்பட்ட நானோ காரை உருவாக்குவது சாத்தியம்தான் என்றாலும், அதற்கு முதலீடு தேவை. ஆனால், குறைந்த அளவே விற்பனையாகும் நானோ காரை நம்பி அதில் மேலும் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானது இல்லை என்பதால், டாடா மோட்டார்ஸ் அப்படியான ஒரு முயற்சியை மேற்கொள்வது சந்தேகமே. 

இருப்பினும் தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் பெயர் போனா டாடா குழுமம், அத்தனை சுலபத்தில் எதையும் கைவிடத் தயாராக இருக்காது. மேலும், இது ரத்தன் டாடாவின் கனவு திட்டங்களில் ஒன்றாகவும் இருந்தது என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இது மிகவும் உணர்வுபூர்வமாக விவாதிக்கக்கூடிய விஷயமாக இருக்கலாம். 

முடிவுக்கு வரும் பயணம்

அதே சமயம் யதார்த்த நிலை என ஒன்று இருக்கிறது. நானோ காரின் எதிர்காலம் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவன தரப்பில் யாரும் எதுவும் சொல்லத் தயாராக இல்லை என்றபோதிலும், கடந்த 3 மாத விற்பனை, வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை உணர்த்திவிட்டது. எனவே, இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு மட்டுமே பாக்கி! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்