Published:Updated:

` மறக்காம ஓட்டு போடுங்கன்னு ஊரெல்லாம் சொன்னான்!' - மகன் இறந்த துக்கத்திலும் வாக்களித்த தஞ்சை விவசாயி

` மறக்காம ஓட்டு போடுங்கன்னு ஊரெல்லாம் சொன்னான்!' - மகன் இறந்த துக்கத்திலும் வாக்களித்த தஞ்சை விவசாயி
` மறக்காம ஓட்டு போடுங்கன்னு ஊரெல்லாம் சொன்னான்!' - மகன் இறந்த துக்கத்திலும் வாக்களித்த தஞ்சை விவசாயி

பட்டுக்கோட்டையில் மகன் சடலமாக வீட்டில் கிடத்தப்பட்டு இருக்கிறார். உறவினர்கள், நண்பர்கள் கலங்கி அஞ்சலி செலுத்துகின்றனர். வீடெங்கும் அழுகுரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்தத் துயர நிலையிலும் தந்தை ஒருவர் தனக்கான வாக்கைப் பதிவு செய்து தன்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறார். அவரின் இந்தச் செயலை நினைத்து சோகத்துடன், நெகிழ்ச்சியோடு பெருமிதம் கொள்கிறார்கள் மக்கள்.

பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்தவர் வீரசேனன். இவரின் மகன் ராஜ்குமார். இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தவர். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். சமூக செயல்பாடுகளில் ஆர்வமுடன் செயல்படும் ராஜ்குமார் 17-ம் தேதி வாக்குக்கு யாரும் பணம் வாங்க வேண்டாம் அனைவரும் உங்களுடைய வாக்கை தவறாமல் அளித்து விடுங்கள் என மக்களிடம் கூறி வந்தார். அப்போது ஒருவர் கடந்த தேர்தலுக்கு வாக்குக்கு பணம் கொடுத்தார்கள். இந்த முறை இதுவரை பணம் தரவில்லை எதனால் எனக் கேட்டிருக்கிறார். ராஜ்குமார் அதற்கு, பொறுமையாக ``அண்ணே உங்க வீட்டில் மொத்தம் மூன்று ஓட்டு இருக்கு. வேட்பாளர்கள் பணம் கொடுத்தால் தலா ரூ. 300 கொடுப்பார்கள். அந்தப் பணத்தை வாங்கி கஜா புயலில் உடைந்து விழுந்த உங்களோட நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை திரும்பவும் ஒட்ட வைத்து விடுவீர்களா'' எனக் கேட்டிருக்கிறார். பணம் கேட்டவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

எப்போதும் பத்திரிகையாளர்களிடம் நெருங்கிய அன்புடன், நட்புடன் இருப்பார் ராஜ்குமார். இவர் பட்டுக்கோட்டை பகுதியைச் சுற்றி நடக்கும் அவலங்களை பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்து செய்தியாக வரவழைத்து அந்த அவலத்துக்கு தீர்வு காண்பார். இது போன்று சமூக விஷயங்களில் எப்போதும் அக்கறையுடன் செயல்படுவார். மேலும், அரசியல் மீது அளவறியா காதல் கொண்டவர். அரசியலில் நடக்கும் மாற்றங்களை முன்னதாகவே கணித்து துல்லியமாக சொல்லக்கூடியவர். இவரின் தந்தை வீரசேனன் தீவிரமான விவசாயி. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்துக்கு தவறாமல் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை ஆதாரங்களோடு எடுத்துச் சொல்வார். அரசு அலுவலகங்களில் நடக்கும் ஊழல்களை தோலுரித்துக் காட்டுவார். விவசாயப் போராட்டங்கள் எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக கலந்துகொள்வார். கஜா புயலில் பல விவசாயிகளுக்கு நிவாரணப் பணம் கிடைக்க உதவி செய்தார். வீரசேனன் தன் மனைவியுடன் சேர்ந்து தங்கள் மரணத்துக்குப் பிறகு உடலை தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜுக்குத் தானமாக எழுதிக் கொடுத்துவிட்டார் என தந்தை, மகனைப் பற்றி புகழாரம் வாசிக்கிறார்கள் பட்டுக்கோட்டை மக்கள்.

இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி இரவு பத்து மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டு ராஜ்குமார் திடீரென இறந்துவிட்டார். இந்தச் செய்தி தேர்தல் பணிக்காக வந்திருந்த அலுவலர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துகொண்டிருந்த வீரசேனனுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. உடனே வீட்டுக்குச் சென்ற வீரசேனன் மகன் சடலமாக கிடத்தப்பட்டிருப்பதைப் பார்த்துக் கதறினார். `எல்லோரையும் மறக்காம ஓட்டு போடுங்க' எனக் கூறி அழைத்தாயே இப்போ நீயே ஓட்டு போடாம போயிட்டீயே' என பெருங்குரலில் கத்திய அவரை தேற்றி ஆறுதல் கூற முடியாமல் சுற்றியிருந்தவர்களும் அழுது கலங்கினர்.

பின்னர் இந்தச் செய்தி உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. எல்லோரும் அஞ்சலி செலுத்துவதற்காக கண்ணாடிப் பெட்டிக்குள் ராஜ்குமார் உடல் கிடத்தப்பட்டிருந்தது. அவரது உடலைப் பார்த்து மனைவி மற்றும் குழந்தைகள் கதறினர். இதைப் பார்த்து வெடித்து வெம்பிய வீரசேனன், `நானும், அம்மாவும் உடலை தானமாக எழுதிக் கொடுத்துவிட்டோம். இறுதிக் கடமையை ஆற்ற நமக்கு வேலை இல்லை என நினைத்து எங்களுக்கு முன்னாடியே போயிட்டீயாப்பா' என கலங்கினார். அஞ்சலி செலுத்த பெரும் கூட்டம் வந்து செல்கிறது. ஓட்டு போட போக வேண்டிய உங்களை இங்க வர வச்சுட்டேனே என தழுதழுக்கிறார். மகன் சடலமாக வீட்டில் கிடத்தப்பட்டிருந்த நிலையிலும் தன்னுடைய வாக்கை அளித்து ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறார் வீரசேனன்.

இது குறித்து சிலரிடம் பேசினோம், ராஜ்குமார் உடலைப் பார்த்து பலர் கலங்கி நிற்கின்றனர். உறவினர்களும் நண்பர்களும் வருவதும் போவதுமாக இருந்தனர். நண்பர்களாகிய எங்களுக்கே ஓட்டு போட வேண்டும் என்ற மனம் வரவில்லை; அந்த நினைப்பும் வரவில்லை. வீடெங்கும் அழுகுரல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.அந்த நேரத்திலும் அழுத ஈர விழிகளுடன் சென்று தன்னுடைய வாக்கைப் பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறார் வீரசேனன். இது எங்களுக்குப் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜனநாயகம் மற்றும் சமூகத்தின் மீது அவர் வைத்திருக்கும் மரியாதையில்தான் இதுபோன்ற நிலையிலும் அவர் தன்னுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறார் எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு