'இதையா 40 வருஷம் பூட்டி வச்சிருந்தீங்க?!' வியக்கவைக்கும் புதிய ராட்சத சிங்க இனம் | Fossil found in Kenya museum is of a 'Giant lion' which lived 2 million years ago

வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (19/04/2019)

கடைசி தொடர்பு:16:20 (19/04/2019)

'இதையா 40 வருஷம் பூட்டி வச்சிருந்தீங்க?!' வியக்கவைக்கும் புதிய ராட்சத சிங்க இனம்

கென்யாவைச் சேர்ந்த நைரோபி தேசிய அருங்காட்சியகத்தில், பல காலமாக ஆராயப்படாமல் பூட்டிவைக்கப்பட்டிருந்த புதைப்படிமங்கள், இப்போது இருக்கும் துருவக்கரடிகளைவிட பெரிய மாமிசம் உண்ணும் பாலூட்டிக்குச் சொந்தமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் புதிய இனத்திற்கு சிம்பகுப்வா கூட்டோகாஃப்ரிக்கா ('Simbakubwa kutokaafrika') எனப் பெயரிட்டுள்ளனர். 'சிம்பகுப்வா' என்றால், ஆப்பிரிக்க மொழியான ஸ்வாஹிலியில் 'மிகப்பெரிய சிங்கம்' என்று அர்த்தம்.

ராட்சத சிங்க' இனம் சிம்பகுப்வா

Illustration Credit: Mauricio Antón/Reuters

இந்த வாரம் 'Journal of Vertebrate Paleontology'-ல் இதைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது. இது, 2.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்திருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், இது சிங்கங்களைப்போன்று பூனை குடும்பத்தைச் சேர்ந்த இனம் இல்லை. மாறாக ஹையினோடான்ட்ஸ் (hyaenodonts) என்ற அழிந்த பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது. ஹையினாக்களைப் (கழுதைப்புலி) போன்ற பல்வரிசையைக் கொண்டுள்ளதால், இந்தக் குடும்பத்திற்கு இந்தப் பெயர் வந்தது. மற்றபடி, கழுதைப்புலிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதுவரை  நாம் கண்டுபிடித்ததில், இந்த குடும்பத்தைச் சேர்ந்த மிகப் பழைமையான இனம் இதுதான்.

படிமங்கள்

Ref: Simbakubwa kutokaafrika, gen. et sp. nov. (Hyainailourinae, Hyaenodonta, ‘Creodonta,’ Mammalia), a gigantic carnivore from the earliest Miocene of Kenya Matthew R. Borths & Nancy J. Stevens

இந்தக் கண்டுபிடிப்பு, பரிணாம வளர்ச்சி பற்றி இன்று இருக்கும் பல குழப்பங்களைத் தீர்க்கும் என நம்புகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும், இந்த இனம் அழிந்திருக்கக் காரணம் என்ன என்பதையும் இது விளக்கலாம் எனத் தெரிகிறது. 1970-களின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த புதைப்படிமங்கள் அப்படியே அருங்காட்சியகத்தில் பூட்டிவைக்கப்பட்டிருந்தன. 2013-ல் அங்கு ஆராய்ச்சி செய்ய வந்த மாத்யூ பார்த்ஸ் என்னும் ஆராய்ச்சியாளர்தான் இதைக் கண்டறிந்திருக்கிறார். பின்னர், நான்சி ஸ்டீவன்ஸ் என்ற ஆராய்ச்சியாளருடன் இணைந்து, வித்தியாசமாக இருந்த இந்த புதைப்படிமங்களை 2017 முதல் ஆராயத்தொடங்கியுள்ளார். அப்படித்தான் இந்தப் புதிய இனம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க