Published:Updated:

'படிப்புதான் எங்க வாழ்க்கையை மாத்தும்... அதுக்காக எந்தத் துயரங்களையும் சுமப்போம்!' - ப்ளஸ் டூ-வில் சாதித்த பார்வையற்றோர் பள்ளி மாணவிகள்!

'படிப்புதான் எங்க வாழ்க்கையை மாத்தும்... அதுக்காக எந்தத் துயரங்களையும் சுமப்போம்!' - ப்ளஸ் டூ-வில் சாதித்த பார்வையற்றோர் பள்ளி மாணவிகள்!
'படிப்புதான் எங்க வாழ்க்கையை மாத்தும்... அதுக்காக எந்தத் துயரங்களையும் சுமப்போம்!' - ப்ளஸ் டூ-வில் சாதித்த பார்வையற்றோர் பள்ளி மாணவிகள்!

``மத்தவங்களுக்கு எப்படின்னு எனக்குத் தெரியல... எங்களை மாதிரி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, படிப்பு மட்டும்தான் எல்லாம். வெளி உலகத்துக்கு எங்களை நிரூபிக்க உதவுர, ஒரே ஆயுதம், எங்க கல்விதான். அதேநேரம், `பட்டப்படிப்பு முடிச்சோம், வேலையில சேர்ந்தோம்'னு இல்லாம, ஏதாச்சும் வித்தியாசமா பண்ணணும்னு ஆர்வம் இருக்கு" - +2-வில் சாதித்த பார்வையற்ற மாணவி

`திர்பார்த்த மார்க் வருமா, வராதா?' 

`எதிர்பார்த்தளவுக்கு மார்க் வரலைன்னா என்ன செய்றது?'

`அடுத்து என்ன படிக்கலாம்?'

`எந்த காலேஜ்ல சேரலாம்' 

இப்படி பல கேள்விகளோடு சுழன்று கொண்டிருந்தனர் அங்கிருந்த மாணவர்கள். ப்ளஸ் டூ தேர்வு முடிவு வெளிவருவதற்கான நேரம் நெருங்க நெருங்க, அவர்களின் பதற்றமும் அதிகமாகிக் கொண்டேபோனது. இரவெல்லாம் கண்விழித்து, தங்களின் தேர்வு முடிவுக்காக அவர்கள் காத்திருந்ததை சொல்லின அவர்களின் கண்கள். ஆம், அது ஒரு பார்வையற்றோருக்கான பள்ளி. சென்னை ஜெமினி பாலத்துக்கு அருகிலிருக்கும் அந்தப் பள்ளியில், தேர்வு முடிவை எதிர்நோக்கிக் கூடுதல் பதற்றம் தொற்றிக்கொண்டிருந்தது.

முடிவுக்காகக் காத்திருந்த மாணவ மாணவிகளில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ரெபேக்காவிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தோம்.

``இந்த ஸ்கூலுக்கு நான் வந்து நாலு வருஷமாச்சு அக்கா. இங்க முழுமையா பார்வை இல்லாதவங்க, ஓரளவுக்குப் பார்வை உள்ளவங்கன்னு ரெண்டு வகையான மாணவர்கள் இருக்கோம். நான் ரெண்டாவது வகை. நாற்பது சதவிகிதம் எனக்குப் பார்வை தெரியும். இது, பிறவிக்குறைபாடுதான். சின்ன வயசுல, அறுபது எழுவது சதவிகிதம் வரைக்கும் தெரிஞ்சது. வயசு கூட கூட, பிரச்னை அதிகரிச்சுகிட்டே போச்சு. ஆறாம் கிளாஸ் வரைக்கும், நார்மல் ஸ்கூல்லதான் படிச்சேன். முதல் பெஞ்சுல உட்கார்ந்துகிட்டா, கண் பார்வை ஓரளவுக்கு நல்லாவே தெரியும். ஆறாவதுக்குப் பிறகு, பார்வை மங்கத் தொடங்கிருச்சு. பக்கத்துல நின்னு பார்த்தாதான் வார்த்தையெல்லாம் தெரியும். அதுவும், கண்ணுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். அதனால ஏழாவதுக்கு மதுரையில உள்ள பார்வையற்றோர் பள்ளியில சேர்ந்துட்டேன். ஒன்பதாம் வகுப்புல, சென்னை வந்துட்டேன். கடந்து நாலு வருஷமா இங்கதான் படிக்கிறேன். தங்கச்சியும், இதே ஸ்கூல்தான். அடுத்த வருஷம், பத்தாவது எழுதப்போறா. அவளுக்கும் என்னைப் போலவே, `பார்ஷியல் சைட்' பிரச்னை இருக்கு.

எங்க ரெண்டு பேருக்குமே, படிப்புதான் எல்லாமே. அடுத்தது காலேஜ் சேரணும். படிப்பு விஷயத்துல, வீட்ல எனக்கு நிறைய சப்போர்ட். `உனக்கு எவ்வளவு படிக்க முடியுதோ, அவ்ளோ படி'னு அப்பா சொல்லிட்டே இருப்பாங்க. மத்தவங்களுக்கு எப்படின்னு எனக்குத் தெரியல... எங்களை மாதிரி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, படிப்பு மட்டும்தான் எல்லாம். வெளி உலகத்துக்கு எங்களை நிரூபிக்க உதவுர, ஒரே ஆயுதம், எங்க கல்விதான். அடுத்தது பி.ஏ. இங்கலீஷ் படிக்கலாம்னு இருக்கேன். அதேநேரம், `பட்டப்படிப்பு முடிச்சோம், வேலையில சேர்ந்தோம்'னு இல்லாம, ஏதாச்சும் வித்தியாசமா பண்ணணும்னு ஆர்வம் இருக்கு. மியூசிக், பாட்டு, டான்ஸ்னு நிறைய திறமைகளையும் வளர்த்திட்டிருக்கேன். எல்லாப் பக்கமும் ஜெயிக்கணும். ஜெயிப்பேன் என்ற நம்பிக்கையும் இருக்கு! நம்பிக்கைதானே எல்லாம்!" என்கிறார் நம்பிக்கை மிளிர.

வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்குள் நுழையும் தங்கை டயானாவுக்கு, ஸ்ட்ரிக்ட் ஆசிரியர் ரெபேக்காதானாம். தங்கையையும் படிப்பில் உச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கனவுகளோடு இருந்த டயானாவுக்கு வாழ்த்துகள் சொன்னபடி நகர்ந்தோம்.

எல்லோரும் எதிர்பார்த்த அந்தத் தருணம் வந்தது. ஆம், தேர்வு முடிவுகள் வெளியானது.

இயல்பான மாணவர்களே ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கத் திணறும்போது, 600-க்கு 540 மதிப்பெண் எடுத்து அசத்தி இருந்தார் மாணவி நதியா. பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பூரிப்பை தந்தையோடு கொண்டாடிக் கொண்டிருந்தார் நதியா. வேலூர் மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்ற கூலித்தொழிலாளியின் மூத்த மகள்தான் நதியா. ஒன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரை பள்ளி விடுதியில் தங்கிப் படித்த நதியா, சிறுவயது முதலே படிப்பில் படுசுட்டி என்கின்றனர் அங்கிருக்கும் ஆசிரியர்கள். 

பாலசுப்பிரமணியன் மிகவும் நெகிழ்ச்சியாகப் பேசுகிறார்.  

``என் அக்கா பொண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அதனாலதான் என் பொண்ணுக்குப் பிறவிலேயே பார்வையில பிரச்னை இருந்துச்சு. என் மனைவியும் கொஞ்சநாள்ல இறந்துபோயிட்டாங்க. நான் படிக்கலைங்க...எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. ஆனா எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கண்ணு தெரியாத என் புள்ளைய மட்டும் நல்லா படிக்க வெச்சிறணும்னு நினைச்சேன். 

முதல்ல பள்ளிக்கூடத்துல சேர்க்கும்போது கூட அவ படிப்பாங்குற நம்பிக்கையில்லாமத்தான் சேர்த்தேன். ஆனால ஒவ்வொரு வகுப்புலையும் என் பொண்ணு நல்ல மார்க் வாங்கினதப் பாத்து நம்பிக்கை வந்துச்சு. இன்னைக்குப் பள்ளிக்கூடலத்துலே முதல் மார்க் வாங்கினது ரொம்ப சந்தோஷம். 

என் பொண்ணுக்கு என்ன பிடிக்குமோ  அதைப் படிக்கட்டும், அவள எப்படியும் படிக்க வெச்சிருவேன்... படிச்சு அவ சொந்தக்காலில் நின்னுட்டா எனக்கு அதுவே போதும்" என்றவர் தன்னையும் அறியாமல் உடைந்து அழத்தொடங்கினார்.

நதியாவுக்கும், 90 சதவிகிதம் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. ரெபிக்காவை பாதித்த, அதே பார்ஷியல் சைட் பிரச்னைதான் இந்தக் குழந்தைக்கும். இப்பிரச்னை உள்ள குழந்தைகள் பிரெய்லி முறையைப் பின்பற்றியும், தங்களின் குறைந்தபட்ச பார்வையைப் பயன்படுத்தியும் சாதாரண எழுத்துகளைப் படித்து தேர்வுக்குத் தயாராகின்றனர்.

நதியாவுக்கு சிறுவயது முதலே உடன் படிக்கும் படிப்பில் பின்தங்கிய மாணவிகளுக்கு உதவும் குணம் இருந்திருக்கிறது. பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் நேரம் முடிந்தவுடன், மாணவிகளை அழைத்து அவர்களுக்கு படிப்பைக் கற்றுக்கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

``அரக்கோணத்துல இருந்து சென்னை வந்து படிக்க வெச்சதுக்காக, ஊருல உள்ளவங்க எல்லாம் எங்க அப்பாவ திட்டுனாங்க. `பொம்பளைப் பிள்ளை, அதுவும் கண்ணு தெரியாத பிள்ளைய கொண்டுபோய் அவ்வளவு தூரத்துல சேர்த்து படிக்க வைக்கணுமா'னு கேட்டாங்க. ஆனா எங்க அப்பா அதையெல்லாம் காதுலயே வாங்கிக்கல...என்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைச்சாங்க...இன்னைக்கு ஊர்ல உள்ள சாதாரண பிள்ளைங்களவிட அதிக மார்க் வாங்கியிருக்கிறதுதான் என் அப்பாவை திட்டுனவங்களுக்கு நான் கொடுக்குற பதில். அடுத்து எக்னாமிக்ஸ் படிக்கணும்...'சம்திங் டிஃபரன்ட்' -ங்கிற மாதிரி ஒரு துறையில சாதிக்கணும்" என்கிறார் நதியா.

நதியாவும், ரெபிக்காவும் மட்டுமல்ல. அங்கிருந்த எல்லா மாணவர்களும், தங்களின் `சம்திங் டிஃபரன்ட்'டுக்கு தயாராகிவிட்டனர்! 

அடுத்த கட்டுரைக்கு