12 வருடங்கள், 1,000 விலங்குகள்... அசத்தும் முதல் பெண் வனக் காவலர்! | the first lady forest officer completed 12 years successful job in Gujarat forest

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (20/04/2019)

கடைசி தொடர்பு:14:49 (20/04/2019)

12 வருடங்கள், 1,000 விலங்குகள்... அசத்தும் முதல் பெண் வனக் காவலர்!

னத்தில் வேலைசெய்வது அவ்வளவு ஒன்றும் எளிதான காரியமல்ல. அதிக சிரத்தையுடனும், பொறுப்புடனும் விலங்குகளைக் கையாள வேண்டிய பணி அது. அதைக் கடந்த 12 வருடங்களாகத் தைரியமாகச் செய்துவருகிறார், ரஷீலா வதேர் எனும் பெண் அதிகாரி.

விலங்குகளைப் பாதுகாக்கும் காவலர்

குஜராத்தில் இருக்கும் கிர் காட்டில், காட்டுப்பூனை துரத்தியதில் சிறுத்தை ஒன்று கிணற்றில் விழுந்துவிட்டது. பல அதிகாரிகளும், பலவாறு முயன்றும் சிறுத்தையை வெளியே எடுக்க முடியவில்லை. அந்தக் கிணறு 40 அடி ஆழம் கொண்டது. அதிகாரிகள் முதலில் கயிற்றை இறக்கினர். அதைச் சிறுத்தை கடித்துத் துப்பிவிட்டது. அதனால் யாராவது ஒருவர் கிணற்றுக்குள் இறங்கியே ஆக வேண்டிய சூழல். அந்த சிறுத்தையைக் காப்பற்ற கடைசி முயற்சியாகக் கிணற்றுக்குள் தைரியமாக இறங்கியவர், ரஷீலா வதேர் எனும் பெண் வனக் காவலர். இது `தான்' களமிறங்க வேண்டிய நேரம் எனத் தெரிந்திருந்தது. கிணற்றுக்குள் இறங்கி சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தியே ஆக வேண்டும். அப்போதுதான் சிறுத்தையை முழுமையாகக் காப்பாற்ற முடியும். கிணற்றுக்குள் இறங்கி மயக்க ஊசி செலுத்தி, சிறுத்தையைக் காப்பாற்றுகிறார், அந்தப் பெண் அதிகாரி, ரஷீலா வதேர்.

 ஜுனாகத் மாவட்டத்தில் பங்தோரி கிராமத்தைச் சேர்ந்தவர், ரஷீலா வதேர். குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில், கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இங்கு வேலைக்குச் சேர்ந்த முதல் பெண் வனக் காவலரும் இவர்தான். சிங்கங்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் என இதுவரை 1,000 -க்கும் மேற்பட்ட விலங்குகளைக் காப்பாற்றியுள்ளார். 2007-ம் ஆண்டு கிர் காட்டைப் பாதுகாக்கும் பணிக்காக 44 பெண் வனக் காவலர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்தனர். அதில் ரஷீலாவும் ஒருவராக வேலைக்குச் சேர்ந்தார். இவருக்கு முதலில் கடினமான பணிகள் கொடுக்கப்படவில்லை. சிறுசிறு வேலைகள் மட்டுமே கொடுக்கப்பட்டன. அதன் பின்னர், காட்டைப் பாதுகாக்க பெண் அதிகாரிகள் யாரும் இல்லாததால், இவரே பொறுப்பேற்றுக் கொண்டார். 

வனக் காவலர்

இவரின் தைரியமான செயல்பாட்டுக்கு அப்போதைய முதல்வராக இருந்த மோடி உள்ளிட்ட அனைவராலும் பாராட்டப்பட்டவர். இந்த 12 வருடங்களில், நீண்ட பாதையைக் கடந்து வந்திருக்கிறார், ரஷீலா. ஒரு சிறுத்தை மீட்புப் பணியில் இருக்கும்போது, அந்தச் சிறுத்தை தாக்கியதில் வலது கையில் பலமான சேதம் ஏற்பட்டு, இப்போது வீரத் தழும்பாக இருக்கிறது. இதுவரை 15-க்கும் மேற்பட்ட தையல்களைத் தனது உடம்பில் சுமந்துகொண்டு பயணம் செய்துகொண்டிருக்கிறார்.