ஆதரவற்ற மனிதர் தொலைத்த எலி! - கண்டுபிடித்துக்கொடுத்த ஆஸ்திரேலிய காவல் துறை | Homeless man lost his pet rat and the australian police found it for him

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (20/04/2019)

கடைசி தொடர்பு:13:03 (22/04/2019)

ஆதரவற்ற மனிதர் தொலைத்த எலி! - கண்டுபிடித்துக்கொடுத்த ஆஸ்திரேலிய காவல் துறை

ஆஸ்திரேலியாவின் சிட்னி மாகாணத்தில் வாழ்ந்துவருபவர், கிரிஸ். 50 வயதான இவர், வசிப்பதற்கு வீடின்றித் தன் அன்றாட வாழ்க்கைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள இருந்தது லூசி மட்டும்தான். லூசி என்ற அந்த எலியை, இந்த மாதம் தொடக்கத்தில் அவர் தொலைத்துவிட்டார். 

கிரிஸ் எலியைத் திரும்பப் பெற்றபோது...

எப்போதும் லூசிக்கென்று தனி அட்டைப்பெட்டி இருக்கும். அதுதான் அவளுடைய அறை. வழக்கம்போல, சாலையோரத்தில் அவர் தூங்கிக் கொண்டிருந்த இடத்திலேயே அதை வைத்துவிட்டு, காலைக்கடன்களைக் கழித்துவரச் சென்றார். திரும்பிவந்து பார்த்தபோது அட்டைப்பெட்டி மட்டுமே இருந்தது, லூசியைக் காணவில்லை. யாரோ தனக்கென்று இருந்த ஒரே துணையையும் திருடிச் சென்றுவிட்டார்களென்று நினைத்த கிரிஸ், லூசியை வைத்திருந்த அதே அட்டைப்பெட்டியில், அவளைக் காணவில்லையென்று எழுதி, அந்த எலியின் படத்தை ஒட்டிவைத்திருந்தார். அதைப் பார்க்கும் யாராவது ஒருவர், தன் எலியைப் பார்த்து மீட்டுக்கொண்டு வரமாட்டார்களா என்ற ஏக்கமே அவரை அப்படிச் செய்யத் தூண்டியது. அதற்குப் பலனும் கிடைத்தது. அந்தச் சாலையில் சென்ற சில இளைஞர்கள், அவரையும் அந்த அட்டைப்பெட்டியையும் படம்பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்ற, அது வைரலானது.

 

 தொடர்ந்து, பலரும் தங்கள் எலியோடு இருக்கும் ஒளிப்படங்களைப் பதிவேற்றத் தொடங்கினார்கள். அந்த வழியாகச் சென்ற ஒரு பெண்மணி, யாருமில்லாமல் தனியாக அட்டைப்பெட்டியில் எலி இருந்ததைப் பார்த்து இரக்கப்பட்டு, எடுத்துச் சென்றிருக்கிறார். விஷயம் தெரிந்ததும், லூசியை நியூ சவுத் வேல்ஸ் காவல் துறையிடம் அவரே ஒப்படைத்துவிட்டார். "கிரிஸ் தன் எலியைக் கண்டதும் அவருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவரிடமே நாங்கள் அவரது செல்லப்பிராணியை ஒப்படைத்துவிட்டோம்" நியூ சவுத் வேல்ஸ் காவல் துறை தனது டிவிட்டர் பக்கத்தில், காணொளியோடு பதிவிட்டுள்ளது.