`கைதால் மனஉளைச்சல், பெயருக்கு களங்கம்!' - ஆப்பிளிடம் ரூ.7,000 கோடி நஷ்டஈடு கேட்கும் 18 வயது வாலிபர் | New York man Student Sues Apple for $1 Billion for false arrest

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (24/04/2019)

கடைசி தொடர்பு:15:40 (24/04/2019)

`கைதால் மனஉளைச்சல், பெயருக்கு களங்கம்!' - ஆப்பிளிடம் ரூ.7,000 கோடி நஷ்டஈடு கேட்கும் 18 வயது வாலிபர்

ஆப்பிள்

அமெரிக்காவில் ஐபோன் திருட்டு சம்பவத்தில் தவறுதலாக கைது செய்யப்பட்ட ஒரு நபர் ஆப்பிள் நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

நியூஜெர்சி, மன்ஹட்டன் ஆகிய மாகாணங்களில் பல்வேறு இடங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர்களில் ஐபோன்கள் திருடப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நியூயார்க்கைச் சேர்ந்த 18 வயது உஸ்மான் பா (Ousmane Bah) என்பவரைக் கடந்த நவம்பர் மாதம் அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். ஆப்பிள் ஸ்டோரில் இருந்த முக அமைப்பைக் கண்டறியும் தொழில்நுட்பம் உஸ்மான் பாவை திருடன் என்று அடையாளம் காட்டியதால் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம் பாஸ்டன் நகரில் இருந்த ஸ்டோரில் இருந்து 1,200 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருள்களை அவர் திருடியதாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அன்றைய தினம்தான் மன்ஹட்டனில் இருந்ததாக தற்போது தகவல் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டோர்

ஆப்பிளின் தொழில்நுட்பத்தால் மற்ற சில ஸ்டோர்களில் நடந்த திருட்டுச் சம்பவங்களிலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. புகைப்படம் இல்லாத உரிமம் ஒன்று தொலைந்து போனதாகவும் அது உண்மையான திருடனின் கையில் கிடைத்திருக்க வாய்ப்பிருப்பதால் இந்தத் திருட்டு சம்பவத்தில் தனது பெயர் தவறுதலாகச் சேர்க்கப்பட்டதாகவும் உஸ்மான் பா தெரிவித்திருக்கிறார். மேலும், இந்தக் கைது சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதாகவும், தனது பெயருக்குக் களங்கம் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். அதைத் தொடர்ந்து தற்போது ஆப்பிள் நிறுவனத்திடம் ஒரு பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாகப் பதிலளித்திருக்கும் ஆப்பிள் நிறுவனம் தங்களது ஸ்டோர்களில் facial recognition தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில்லை என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது.